ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"காவிரி தீர்ப்பா? தீவைப்பா?" தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

"காவிரி தீர்ப்பா? தீவைப்பா?" தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டில் உரிமையைப் பறிப்பதில் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் மறைமுக மாக இணைந்தே செயல்படுகின்றன.


காவிரிச் சிக்கலைத் தீர்ப்பதில், இந்திய அரசமைப்புச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956 ஆகிய இரண்டையும் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டன உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும்!


உலக நாடுகள் ஒப்புக் கொண்ட எல்சிங்கி (Helsinki - Finland) விதிகளையும் உச்ச நீதிமன்றம் மீறிவிட்டது.

பிரித்தானிய ஏகாதிபத்தியச் சுரண்டல் ஆட்சி நிலை நாட்டிய தமிழ்நாட்டின் காவிரி உரிமையை இந்திய ஏகாதிபத்திய ஆட்சியில் தொடர்ந்து இழந்து வருகி றோம். 1950களில் இருந்து கர்நாடகம் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராகக் காவிரியில் அடாவடித்தனங்கள் செய்யத் தொடங்கியது. தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெறாமல் 1958இல் கபினியில் அணை கட்டத் தொடங் கியது. பின்னர் 1960களில் ஏமாவதி, ஏரங்கி, சுவர்ணவதி ஆகிய காவிரியின் துணை ஆறு களில் அணைகள் கட்டத் தொடங்கி 1970களின் முற்பகுதியில் கட்டி முடித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி, இந்திய அரசின் மறைமுக ஆதரவுடன் இந்த நான்கு அணைகளைக் கட்டி முடித்தது கர்நாடகம். கபினி, ஏமாவதி, ஏரங்கி சுவர்ணவதி நான்கும் காவிரிக்குத் தண்ணீர் வழங்கும் துணை ஆறுகள்!

1910ஆம் ஆண்டிலிருந்து 1924ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த சென்னை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே பலகட்டப் பேச்சு வார்த் தைகள் நடந்து, வழக்குள் நடந்து, இறுதியில் 1924இல் காவிரி ஒப்பந்தம் உருவானது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூர் அணை கட்டப்பட்டது. அதன் கொள்ளளவு 93.5 ஆ.மி.க (டி.எம்.சி). மேட்டூர் அணை பாசனத்திற்காக 1934இல் திறக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது பொதுப்பணித்துறை வெளியிட்ட மலரில் (The New Irrigation Era) 50 ஆண்டுகளில் சராசரியாக ஓர் ஆண்டிற்குக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீரின் அளவு வெளியிடப்பட்டது. அது 361.3 ஆ.மி.க.!

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பில் (25.06.1991) இந்த 361.3 ஆ.மி.க., 205 ஆ.மி.க.வாகக் குறைக்கப்பட்டது.

இந்த அளவானது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் (05.02.2007) 192 ஆ.மி.க.வாக மேலும் குறைக்கப்பட்டது.


உச்ச நீதிமன்றத்தின் தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆயத்தின் தீர்ப்பில் மேற்கண்ட அளவு நீர் மேலும் குறைக்கப்பட்டு 177.25 ஆ.மி.க. ஆக்கப்பட்டுள்ளது!

இந்தக் குறைக்கப்பட்ட நீரையும் கர்நாடகத்திடம் பெற்றத் தர இந்திய அரசு இப்போதும் முன்வரவில்லை. 1991இல் இருந்து தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் பின்னர் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்தும் வருகிறது.

மீண்டும் முடியாது என்கிறது இந்தியா


தீபக் மிஸ்ரா அமர்வு வழங்கிய தீர்ப்பில் தீர்ப்பு வெளியிடப்பட்ட நாளான 16.02.2018லிருந்து ஆறு வாரங் களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு உள்ளிட்ட செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆனால் அதை செயல்படுத்த முடியாது என்பதை நடுவண் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 26.02.2018 அன்று சென்னையில் நளினமாகக் கூறிவிட்டார்.

“ஆறு வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமான பணி; அது எளிதான வேலையல்ல! இது தொடர்பாக எந்த உறுதியும் என்னால் கொடுக்க முடியாது” என்று கூறி விட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற முடியாது என்று ஒரு நடுவண் அமைச்சர் வெளிப்படையாகக் கூறுகிறார். அதற்கு முன் 24.02.2018 அன்று சென்னையில் மகளிர்க்கு இரு சக்கர ஊர்தி அளிக்கும் விழாவில் கலந்து கொண்ட தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கைக்கு விடை அளிக்காமல் புறக்கணித்தார் மோடி!

அந்த விழாவுக்காக மாலை சென்னை வந்த மோடி, இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கினார். அங்கு தன் கட்சிக்காரர்களையும் மற்றவர்களையும் சந்தித்தார். மறுநாள் காலையில் தான் புதுச்சேரிக்குப் புறப்பட்டார். ஆனால் காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவினர் முதலமைச்சர் தலைமையில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டும் சந்திக்க நேரம் தரவில்லை மோடி!

அடுத்து தில்லியில் அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்திக்க மோடியிடம் நேரம் கேட்டுள்ளார், முதல் அமைச்சர். அதற்கும் இதுவரை ஒப்புதல் தரவில்லை!

ஒதுங்கிக் கொள்ளும் உத்தி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஆனால், அதை அமைத்திட இந்திய அரசு மறுத்து வருகிறது. கடந்த 2016இல் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ஆம் நாளுக்குள் அமைக்க வேண்டும் என்று கெடு விதித்துக் கட்டளை யிட்ட போதும் மோடி அரசு அமைக்க மறுத்தது. அவ்வாறு ஆணையிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டது.

ஆனால், ஆணை இடத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிபதி மிஸ்ரா ஆயம் கூறியதுடன் அதுபற்றி தனியே விவாதம் நடத்தி 2016 டிசம்பரில் தீர்ப்பளித்தது. தண்ணீர்த் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் உள்ள செயல் திட்டமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கெடு விதித்துக் கட்டளை இட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று அத்தீர்ப்பில் கூறினார்கள். ஆனால் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிய தீபக் மிஸ்ரா ஆயம், அதன்பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்குக் கட்டளையிடவில்லை! தந்திரமாக ஒதுங்கிக் கொண்டது தீபக் மிஸ்ரா ஆயம்!
இப்போது, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்கவில்லை என்றால் ஏற்கெனவே ஓதுங்கிக் கொண்டதுபோல் உச்ச நீதிமன்றம் தந்திரமாக தலையிடாமல் இருந்துவிட வாய்ப்புண்டு! தமிழ்நாடு அரசு அதற்காக ஒரு வழக்குப் போட்டால் - அது தான் சாக்கு என்று பிடித்துக் கொண்டு வழக்கை ஒத்தி வைத்து - ஒத்தி வைத்து ஒதுங்கிக் கொள்ளும்!

ஏன் இந்த உரிமைப் பறிப்பு?

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகாரத்தை தமிழ்நாடு அரசிடமிருந்து பிடுங்கி, நடுவண் அரசுக்கு அளித்த நீட் தேர்வு வழக்கிலும் இதேபோல் தான் உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் மறைமுகமாக இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டு உரிமையைப் பறித்தன. சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிப்பதி லும் மறுப்பதிலும் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இவ்வாறாக இணைந்து துணிச்சலாக செயல்படக் காரணம் என்ன?

ஒன்று, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு! இரண்டு, தமிழ்நாட்டு உரிமைகளைத் தற்காத்துக் கொள் ளும் அரசியல் தலைமை இல்லாதது!

தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தன்னல ஆதாய அரசியலும், அதற்காகத் தனிநபர் பகை அரசியலும் நடத்தி - இந்திய அரசின் கங்காணிகளாகவே செயல் பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடும் அக்கறை அற்றவை; ஆற்றலும் அற்றவை.

தி.மு.க வும், அ.இ.அ.தி.மு.க.வும் நடத்தி வரும் தன்னல ஆதாய அரசியலும் தனி நபர் பகை அரசியலும் தமிழ் மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி வைத் துள்ளன. தமிழர்களின் விழிப்புணர்ச்சியை மழுங்கடித்து விட்டன. தமிழர்களின் உரிமைக்கான எழுச்சியை - போர்க் குணத்தை சிதைத்து விட்டன.

கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இந்தியத்தேசியம் மற்றும் உலகத்தேசியம் பேசும் கட்சி களின் அரசியல் தலைமைகள் இருக்கின்றன. அவற்றிற் கிடையேயும் கடுமையான பதவிப் போட்டி உண்டு! ஆனால் அவை மாநில உரிமை, மொழியுரிமை போன்ற வற்றில் இனப்பற்றையும் தாண்டி இனவெறி யுடன் செயல்படுகின்றன; கூடிக் கொள்கின்றன.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை போன்ற சிக்கல்களில் அவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன; இன வெறியுடன் தமிழர்களைத் தாக்குகின்றன. காவிரியில் உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டாலும், சட்டமன்றத் தைக் கூட்டி ஆளுங்கட்சியான காங்கிரசும், எதிர் கட்சியான பா.ச.க.வும் முன்மொழிந்து - வழிமொழிந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது எனத் தீர்மானம் நிறைவேற்றுகின்றன.

கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் கருத்துச் சொல் வதற்கு முன்பாகவே விவசாயிகள் சங்கங்களும் கன்னட அமைப்புகளும் தெருவில் இறங்கிப் போராடுகின்றன. தமிழ்நாட்டு ஊர்திகளையும் தமிழர்களையும் தாக்கு கின்றன. கர்நாடகத்தைக் கண்டு இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் அச்சப்படுகின்றன. கர்நாடகக் கட்சிகள் - தாங்கள் அந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால் தங்களை இனத்துரோகிகள் என்று கன்னட மக்கள் ஏசுவார்கள் என்று அச்சப்பட்டு தமிழின எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்கின்றன.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று முற்பகல் தீர்ப்பு வழங்கியவுடன் தமிழ்நாட்டில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பலர் உடனே வரவேற்றனர். தஞ்சையில் ஒரு சங்கத்தைச் சேர்ந்த நண்பர் இனிப்புக் கொடுத்து வெடி வெடித்தார். 192 ஆ.மி.க.விலும் 14.75 ஆ.மி.க.வைக் கழித்து 177.25 ஆ.மிக.வாகக் குறைத்தது என்று நாம் கண்டனம் தெரிவித்தோம். ஆனால், இதையாவது செயல்படுத்தட்டும் என்று பிச்சை கேட்கும் பாணியில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வேண்டு கோள் வைத்தனர்.

சற்றொப்ப 15 ஆ.மி.க. தண்ணீரைக் குறைத்தது மட்டு மின்றி, இந்தத் தீர்ப்பே 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீரில் 10 ஆ.மி.க.வை எடுத்து - கர்நாடகத்தில் காவிரிப் படுகைக்கு வெளியே வறட்சி பாதிக்கும் 28 மாவட் டங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ் நாட்டின் ஒதுக்கீட்டிலிருந்து 4.75 ஆ.மி.க. தண்ணீரைப் பெங்களூர் குடிநீருக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றம்!

இந்த 14.75 ஆ.மி.க.வை - தமிழ்நாட்டிற்குத் திறந்து விட வேண்டிய 192 ஆ.மி.க.வில் கழித்துக் கொண்டு மீதியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட்டால் போதும் என்றது!

கர்நாடகாவில் காவிரிப்பாசனப் படுகைக்கு வெளியே உள்ள 28 மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது என்று கவலைப்பட்ட உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டு - அரசின் நிவாரணங்கள் பெற வேண்டிய நிலையிலுள்ள மாவட்டங்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? தமிழ் நாட்டிலும் வறட்சி மாவட்டங்கள் உண்டு என்பதை தமிழ்நாடு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறியும் அதை உச்ச நீதிமன்றம் ஏன் ஏற்கவில்லை?

பெங்களூரில் 3இல் 1 பகுதிதான் காவிரிப் படுகைக்குள் வருகிறது. அதற்குரிய குடிநீர் மட்டும்தான் கொடுக்க முடியும் என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியதைப் புறக் கணித்துவிட்டு, முழு பெங்களூர் மாநகருக்கும் தண்ணீர் ஒதுக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்! அதற்குக் கூடுதலாக ஒதுக்கிய 4.75 ஆ.மி.க. தண்ணீரை, தீர்ப்பாயம் தமிழ் நாட்டுக்கு ஒதுக்கிய நீரிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளது. பெங்களூரு நகரை உலகப் புகழ் நகரம் என்று வர்ணிக்கும் உச்ச நீதிமன்றம், அந்நகரை விட மக்கள் தொகை - நிலப்பரப்பு - தொழிற்சாலைகள் அடர்த்தி போன்ற வற்றில் பன்மடங்கு பெரிய நகரமாக உள்ள சென்னை மாநகரம் பன்னாட்டு நகரம் இல்லையா? சென்னை நகரம் குடி தண்ணீருக்குத் தவிக் கிறது என்ற உண்மையை தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறியும், அதை ஏன் உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை?

இக்கேள்விகளுக்கெல்லாம் விடையாக வருவது, இனப்பாகுபாடுதான்!

உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, காவிரியில் ஓடி வரும் தண்ணீரை 4 மாநிலங்கள் பகிர்ந்து (Cauvery River Water Dispute) கொள்வதற்கான வழக்குதான்! காவிரி நிலத்தடி நீரை (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான வழக்கு அல்ல!

அதிலும்கூட தமிழ்நாட்டு நிலத்தடி நீரை மட்டும் தான் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளதே தவிர, கர்நாடக நிலத்தடி நீரை எடுக்கவில்லை! அதற்குக் காரண மாக, கர்நாடக நிலத்தடி நீர் பற்றிய கணக்கு இல்லை எனக் கூறுகிறது. கணக்கு இல்லை என்றால், உரியவர் களிடம் கேட்டு வாங்க வேண்டியதுதானே? இதிலெல் லாம் உச்ச நீதிமன்றத்தின் ஓர வஞ்சனை தெளிவாகத் தெரிகிறது!

உடனடி எதிர்வினை

மேற்கண்ட இழப்புகள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தலைச்சார்பு பற்றியும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி - முதன்மை எதிர்கட்சி உள்ளிட்ட மற்ற முக்கியக் கட்சிகளும் கவலைப்படவில்லை. கண்டனக் குரல் எழுப்ப வில்லை! இதையாவது கொடு என்று கையேந்தத் தொடங்கின.

நாம் தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார் பிலும், காவிரி உரிமை மீட்பு குழு சார்பிலும் தீர்ப்பு வந்த அன்றே “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது; மனச்சான்று அற்றது; கட்டப் பஞ்சாயத்து தன்மை யுள்ளது; கர்நாடகத்திற்குப் பெரும் பரிசளிப்பு; தமிழ் நாட்டிற்கு உரிமைப் பறிப்பு” என்று தொலைக்காட்சி விவாதங்களிலும் அறிக்கையிலும் கண்டனம் தெரிவித் தோம்.


தீர்ப்பு வந்த 16.2.2018 அன்றே காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் முற்பகலிலேயே 11.30 மணிக்கு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தருமபுரி யில் அதே நாளில் பகல் 12.30 மணிக்கு த.தே.பே. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகளின் உருவப்படத்தை எரித்தார்கள் என்று கூறித் தருமபுரித் த.தே.பே. செயலாளர் தோழர் க. விசயன் மற்றும் தோழர் செ. முருகேசன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தளைப்டுத்தித் தருமபுரிக் கிளைச் சிறைசாலையில் அடைத்தனர்.

அதே 16.02.2018இல் பகல் 1 மணிக்குக் குடந்தையில் த.தே.பே. - விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தோழர்கள் தீர்ப்பைக் கண்டித்து சாலை மறியல் ஆர்ப் பாட்டம் நடத்தினர். அன்று மாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் த.தே.பே. தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்று மாலை 5 மணிக்கு ஓசூர் த.தே.பே. தோழர்களும் திருச்சி த.தே.பே. தோழர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறுநாள் 17.02.2018 முற்பகல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் த.தே.பே. ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளும் உணர்வாளர்களும் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே 17.02.2018 அன்று பெண்ணாடம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தின் முன்பு 28.02.2018 அன்று, மிகப் பெரிய உழவர்கள் - உணர்வாளர்கள் கண்டன மற்றும் தற்காப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பறிக்கப்பட்ட மரபுரிமை

தீபக் மிஸ்ரா, தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டின் காவிரி உரிமையை வெடி வைத்து தகர்த்தது போல் உள்ளது.

வரலாற்று வழிப்பட்ட ஆற்றுநீர் உரிமையை (Riparian Right) ஊறுகாய் போல ஒரு சில இடங்களில் சொல்லிக் கொண்டாலும், தமிழ்நாட்டிற்குக் காவிரியில் உள்ள வரலாற்று உரிமையை மறுக்கும் நோக்கில்தான் உச்ச நீதிமன்றம் செய்திகளை அடுக்கிக்கொண்டு போகிறது. கர்நாடகத்தின் வாதங்களைப் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டே தீர்ப்புரை நகர்கிறது.

வெள்ளையராட்சியில் இருந்த சென்னை மாநில அரசுக்கும் மைசூர் மகாராசா அரசுக்கும் 1924இல் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தம் ஐம்பதாண்டு முடிவில் 1974 இல் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுகிறது தீர்ப்பு! ஆனால் உண்மை அதுவன்று!

ஒப்பந்தம் செயலுக்கு வந்து 50ஆம் ஆண்டில் - அதுவரை கிடைத்த அனுபவ வெளிச்சத்தில் தொடர் புடைய அரசுகளின் எல்லைகளுக்குள் மேலும் பாசனத்தை விரிவுபடுத்தவும், மறு ஆய்வுகள் மூலம் தக்கத் திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகள் செய்து கொள்ளவும் அரசாங்கங்கள் ஒப்புக்கொள்கின்றன என்று தான் அந்த ஒப்பந்தத்தின் விதி 10 இன் உட்பிரிவு XI கூறுகிறது. இதில் 50 ஆண்டுகளின் முடிவில் ஒப்பந்தம் நீங்கிவிடும் என்று கூறவில்லை.

ஆனால் உச்ச நீதிமன்ற ஆயம் 1974 ஆம் ஆண்டுடன் 1924 ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது (Expired) என்று கூறுகிறது (தீர்ப்புரை பத்தி 404 - V, பக்கம் 459).

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பல அநீதிகள் இழைத்திருந்தாலும் உச்ச நீதிமன்றம் போல் 1924 ஒப்பந்தம் 1974இல் செத்துவிட்டது என்று கூற வில்லை. மாறாக, 1924 ஒப்பந்தத்திற்குப் பதிலாக இறுதித் தீர்ப்பு வந்துள்ளது என்று தான் கூறியது (Tribunal Final Decision Superseded 1924 Agreement).

1924 ஒப்பந்தத்தைப் பதிலீடு செய்து “தீர்ப்பாய முடிவுகள்” வந்துள்ளது என்பதும் சரியன்று! 1924 ஒப்பந் தத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் மறுசீரமைப் பாகத்தான் “தீர்ப்பாய முடிவுகள்” வந்திருக்க வேண்டும். ஆனால் அதைவிடக் கொடுமையாகப் பச்சைப் படுகொலை செய்வது போல், 1924 ஒப்பந்தம் செத்து விட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!

உச்ச நீதிமன்றம் அடுத்து பறித்துள்ள மிக முகாமையான உரிமை - ஆற்றுநீர் மரபுரிமை (Riparian Right)! இந்த மரபுரிமையையும் எல்சிங்கி விதிகளையும் ஆதரிப்பது போல் பெயரளவில் சொன்ன உச்ச நீதிமன்றம், இறுகப்பற்றிக் கொண்ட விதிகள் பெர்லின் விதிகள் மற்றும் இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை ஆகியவையே!

இதற்கான அடித்தளமாக “Equitable Utilization - தேவைக்கேற்ற ஞாயப் பயன்பாடு” என்ற ஒரு கோட் பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது. இதையே தேவைக்கேற்ப ஞாயப் பகிர்வு என்று விரித்துக் கொண்டது. தண்ணீர் மரபுரிமை (Riparian Right) என்பதை தேவைக்கேற்ற ஞாயப் பயன்பாட்டு உரிமை என்று மாற்றிக் கொண்டது.


இக்கோட்பாட்டில் உள்ள பொது முன்னுரிமைத் தேவைகளை பெர்லின் விதிகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறது தீர்ப்பு. “தீர்ப்பு பத்தி 370 : தேவைக் கேற்ற ஞாயப்பயன்பாடு என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் போதுமான பாதுகாக்கப்பட்ட, அவர் ஏற்கத் தக்க வகையில், அவர் அடையத்தக்க வகையில் தண்ணீரை அவரது முக்கியத் தேவைகளுக்கு வழங்குவது அரசின் கட்டாயக் கடமை என்று பெர்லின் விதிகளின் உறுப்பு 17 கூறுகிறது. இவ்வாறு வழங்குவதைப் புறக்கணித்து விட்டு நிரந்தர முன்னுரிமை என்று கூறிக் கொள்ளும் வேறு எதற்கும் தண்ணீர் வழங்குவதற்கில்லை”.

அப்படியே இந்தியாவின் தேசிய நீர்க் கொள்கைக்குத் தாவுகிறது தீர்ப்பு!

“பத்தி 373: தண்ணீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு தண்ணீர் தருவதற்காக, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் தண்ணீரை அனுப்பலாம். ஓர் ஆற்றுப் படுகையிலிருந்து வேறொரு ஆற்றுப் படுகைக்குத் தண்ணீரை அனுப்பலாம். தேசியத் தொலை நோக்கோடு இந்தத் தண்ணீர் பரிமாற்றத்தைச் செயல்படுத்த வேண்டும். இதற்காக நிலத்தடி நீரையும் பயன்படுத்தலாம்.

தேசிய நீர்க் கொள்கையில் தண்ணீர்ப் பகிர்வுக்குரிய வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. குடிநீர், 2. பாசனம், 3. நீர் மின்சாரம், 4. போக்குவரத்து, 5. தொழிற் சாலைகள் மற்றும் வேறு பயன்பாடுகள்”.

இப்பொழுது புரிகிறதா, காவிரியின் தஞ்சைப் படுகை நிலத்தடி நீரைக் கர்நாடகத்தில் காவிரி பாயாத வறட்சி மாவட்டங்களுக்கு வழங்கிய கோட்பாடு எது என்று?

தேசிய நீர்க்கொள்கை என்பது மாநிலங்களுச் சொந்தமான ஆறுகளை நடுவண் அரசுக்கு சொந்தமாக மாற்றுவது ஆகும். அந்த ஆறுகளை நடுவண் அரசு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும். பன்னாட்டு நிறுவனங்களும் குத்தகைக்கு எடுக்கலாம். குத்தகை எடுத்த நிறுவனங்கள் தண்ணீரை மீட்டர் வைத்து அளந்து குடிநீருக்கும் பாசனத்திற்கு விற்கும். மீட்டர் அளவு படி பணம் கட்டி மண்ணின் மக்கள் தண்ணீரை பெறும் நிலைவரும். இதுதான் தேசிய நீர்க் கொள்கையின் சாரம்.

இப்பொழுது புரிகிறதா, காவிரி ஆறு மாநிலங்களுக் குச் சொந்தம் இல்லை; அது தேசியச் சொத்து என்று உச்ச நீதிமன்றம் உரைத்த “கீதை” உபதேசத்தின் கீர்த்தி? இந்தத் தீர்ப்பு உயிரோடிருந்தால் காவிரியில் தமிழ்நாடு இனி மரபுரிமை கொண்டாட முடியாது!

1924 ஒப்பந்தம் செல்லாது, மாநிலங்களுக் கிடையி லான தண்ணீர்த் தகராறுச் சட்டம் 1956 - காவிரிக்கு இனி பொருந்தாது, எல்சிங்கி விதிகள் கூறும் தண்ணீர் மரபுரிமை இனி முன்னுரிமை பெறாது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு இனி செல்லாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, காலாவதி ஆகிவிடும் என்று தீர்ப்பிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.

இதையாவது கொடுங்கள் என்று கேட்போரே, அப்போது எதைக் கேட்பீர்கள்?

என்ன செய்ய வேண்டும்?


1.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் - 1956, உலக நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ள எல்சிங்கி விதிகள் என அனைத்தையும் புறக்கணித்து விட்டுத் தன்னடித்த மூப்பாக, தீபக் மிஸ்ரா ஆயம் அளித்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, மாற்றி அமைக்க ஏழு நீதிபதிகள் அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்குக் காவிரி வழக்கை உடனடியாக விட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து முடிந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை வழக்கு அரசமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். வேறு முன்னெடுத்துக் காட்டும் உண்டு! இத்திசையில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

2. அரசமைப்பு ஆயத்தீர்ப்பு வரும் வரை இப் போதுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்துவிட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்திட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

தமிழர்களாய் ஒருங்கிணைவோம்!

அரசியல் தலைமைகள் தமிழர்களைக் கைவிட்ட அவலத்தால்தான் அரிதாரத் தலைவர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் கணிப்பில், தமிழ் மக்கள் என்பவர்கள் ஓட்டு மந்தை மட்டுமே! எனவே, அரசியலில் நடித்துக் கொண்டிருப்பவர்களும், திரையில் நடித்து விட்டுத் தெருவில் நடிக்க வந்து கொண்டிருப்பவர்களும் தமிழர் உரிமைகளை மீட்க உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று கருத முடியாது; காத்திருக்க வேண்டாம்.


காவிரி நீர் உரிமையை இழந்தால், 20 மாவட்டங்க ளில் குடிநீரும், பன்னிரெண்டு மாவட்டங்களில் பாசன நீரும் அற்றுப்போகும்! காவிரி நீரோட்டம் தமிழர்களின் குருதி ஓட்டம்! தமிழ்நாடு தழுவிய போராட்டம் முன் னெடுப்போம்!

காவிரி நீர் கர்நாடகம் போடும் பிச்சையல்ல - தமிழர் களுக்கு இயற்கை வழங்கிய கொடை! பல நாடுகளைச் சேர்ந்த கடல் மற்றும் பன்னாட்டுக் கடல் ஆகிய வற்றிலிருந்து கடல் நீர் ஆவியாகி மேகமாகி, தென் மேற்குப் பருவக்காற்று அம்மேகங்களை நாடுகளைக் கடந்து வீசித் திரட்டி வந்து, மேற்குத் தொடர்ச்சி மலை யில் மோதச் செய்து, மழை கொட்ட வைக்கிறது. அந்த வெள்ளம் பள்ளம் கண்ட வழியில் பாதை அமைத்து காவிரியாகத் தமிழ்நாடு வந்து சேர்கிறது. எல்லாம் இயற்கையின் பங்களிப்பே! மனிதர்கள் வெட்டியதல்ல காவிரி ஆறு!

இந்த இயற்கை நீதியைத் தடுப்போரை முறியடிக்கத் தன்மானத் தமிழர்களாய் ஒருங்கிணைவோம்! இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்!

“காவிரி வழக்கை அரசமைப்பு ஆயத்திற்கு மாற்று! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு!” என்று முழங்குவோம்!

கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.