“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற்ற செயல்திட்டத்தையும் உடனே அமைக்க முடியாது” - இந்திய அரசு திட்டவட்டம்! இந்த இனப்பாகுபாட்டை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்? தோழர் பெ. மணியரசன் அறிக்கை !
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற்ற செயல்திட்டத்தையும் உடனே அமைக்க முடியாது” - இந்திய அரசு திட்டவட்டம்! இந்த இனப்பாகுபாட்டை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை !
இந்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், நேற்று (21.03.2018) தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி தீர்ப்பளிக்கவில்லை; மாறாக, ‘ஒரு செயல்திட்டத்தை’ அமைக்க சொல்லியிருக்கிறது” என்று மீண்டும் கூறியுள்ளார். அச்செயல் திட்டத்தை மார்ச் 30க்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். “தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் ஏற்கும் ஒரு சரியான செயல் திட்டத்தை அமைக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளும் அதிகாரமில்லாத செயல் திட்டத்தைத்தான் இந்திய அரசால் உருவாக்க முடியும் என்பதை சுற்றிவளைத்து யு.பி. சிங் தெரிவித்து விட்டார்.
காவிரித் தீர்ப்பை செயல்படுத்துவதில், கர்நாடக அரசிற்கு “இரத்து அதிகாரத்தை” (வீட்டோ) இந்திய அரசு கொடுக்க விரும்புகிறது என்பதுதான் இதன் பொருள்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதாவாரியாகத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைக் கர்நாடகம், ஒருபோதும் திறக்காது என்பது இதன் பொருள்! கர்நாடகத்தின் இந்த சட்டவிரோதச் செயலை நரேந்திர மோடி அரசு ஊக்கப்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் 1991இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தும், 2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தும், 2016இல் உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட மறுத்தும் இந்திய அரசின் துணையோடு “வெற்றி கண்ட” கர்நாடகம், இப்போது மோடி அரசின் ஆதரவுடன் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறது.
இந்திய அரசில் காங்கிரசு ஆட்சியில் இருந்தாலும், பா.ச.க. ஆட்சியில் இருந்தாலும் அரசமைப்புச் சட்டப்படியிலான உரிமைகளை தமிழ்நாட்டிற்கு வழங்காது என்பதுதான் வரலாற்று உண்மை!
இந்தியாவுடன் தமிழ்நாடு சேர்ந்திருப்பதற்கு இந்திய அரசு தரும் பரிசு இதுதானா? நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, பக்ரா பியாஸ் போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்கிடையே பாய்கின்றன. அவற்றில் சிக்கல் வந்து விசாரணை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தீர்ப்புகள் வந்த பின், அத்தீர்ப்புகள் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் காவிரி வழக்கில் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அப்படியே செயல்படுத்த முடியாது, கர்நாடகத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் செயல்படுத்த முடியும் என்று இந்திய அரசு சொல்வது, தமிழர்களுக்கு எதிரான அநீதி இல்லையா? அரசமைப்பு சட்டத்தின் முன் அனைத்து மாநிலமும் சமம் என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பது இனப்பாகுபாடு இல்லையா?
இந்தியாவில், உரிமை பறிக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட இனமாக (Aparthied) தமிழர்கள் வாழ்கிறோம் என்பதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர வேண்டும். உரிமை மீட்க விழித்தெழ வேண்டும்.
மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது உறுதி என்று நேற்று இரவு வரை கூறிவந்த, தமிழிசை சவுந்திரராசன், வானதி சீனிவாசன் போன்ற தமிழர்களுக்கு தன் மதிப்பும் தமிழர்கள் மீது அக்கறையும் இருந்தால், அவர்கள் நடுவண் அரசின் இந்த இனப்பாகுபாட்டை எதிர்த்து, முதல் கட்டமாக பா.ச.க.வில் தாங்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து விலக வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு, இனியும் “காத்திருப்போம்” என்று கதையளக்காமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, இந்திய அரசின் இனப்பாகுபாட்டைக் கண்டிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுக்க வேண்டும்.
முதல் கட்டப் போராட்டமாக, குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டிவரை இந்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒரு வார காலத்திற்கு முற்றிலுமாக முடக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்த முன் வர வேண்டுமென்று, ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வையும், எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
மக்களுக்கு இது போன்ற செய்திகளை கொண்டு போய் சேர்க்க முயற்சி மேற்க்கொள்ள வேண்டும்
ReplyDelete