ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரனார், தோழர் கதிர்நிலவன், கட்டுரை

வரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரனார், தோழர் கதிர்நிலவன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
உலகில் உள்ள மொழிகளில் தமிழ்மொழி பழமை வாய்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழர்களின் பேரிலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம், சமயம் கலக்காத சங்க இலக்கிய நூல்கள், பிற்காலத்தில் தோன்றிய சமண, பக்தி இலக்கிய நூல்கள், அத்தோடு உருவான சித்த மருத்துவம், தத்துவம், யோகம், கணியம் ஆகியவை குறித்த நூல்களெல்லாம் பனை ஓலைகளில் காலந்தோறும் எழுதப்பட்டும், ஏட்டுச் சுவடிகளாக படிக்கப்பட்டும் வந்தன.

பிரித்தானியரின் வருகைக்குப் பிறகு, 16,17,18ஆம் நுற்றாண்டுகளில் நவீன கண்டுபிடிப்பான அச்சு இயந்திரம் இங்கு புகுத்தப்பட்டது. கிறித்துவ சமய நூல்கள் மட்டும் அச்சிடும் உரிமையைப் பெற்றிருந்தன. ஆனால் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு அச்சிடும் உரிமையை பிரித்தானிய அரசு வழங்கவில்லை. 1835இல் தான் தடை நீக்கப்பட்டது. மல்டாப் என்பவரால் கொண்டுவரப்பட்ட இந்திய அச்சுச் சட்டம் இந்திய மக்களுக்கு அச்சிடும் உரிமையை வழங்கியது.

19ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடிகளாக இருந்த பழந்தமிழ் நூல்கள் அச்சில் பதிக்கப்பட்ட போதிலும், எந்தெந்த நூல்கள் யார் யாரால் அச்சிடப்பட்டன என்பதைச் சொல்லும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க வில்லை. தற்போதுதான் அச்சில் பதிப்பித்தவர்களின் பட்டியல் நீண்ட ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்று வருகிறது. 

அவற்றில் சிறந்து விளங்கிய மூவரைப் பற்றி திரு.வி.க. பின்வருமாறு குறிப்பிடுகிறார் : “பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்”.

பதிப்புத்துறையில் முன்னோடிகளாக விளங்கிய மூவரில் ஒருவராகிய தாமோதரனார் குறித்து இனி அறிந்து கொள்வோம்.

இவர் யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள சிறுப்பிட்டி எனும் சிற்றூரில் 12.09.1832 அன்று வைரவநாதர் - பெருந்தேவி இணையருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.

இவரின் குடும்ப மரபு மாப்பாணர் (பெரிய பாணர்) வகையைச் சார்ந்தது. இவரின் தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதால் தொடக்கக் கல்வியை அவரிடமே பயின்றார். பின்னர் சிறுப்பிட்டிக்கு அருகில் உள்ள சுன்னாகம் ஊரில் முத்துக்குமார கவிராயரிடம் சேர்ந்து இலக்கிய - இலக்கணங்களைக் கற்றுக் கொண்டார்.

அதன்பிறகு ஆங்கிலம் கற்கும் நோக்கோடு தெல்லியம்பதி அமெரிக்க மிஷின் பாடசாலையில் சேர்ந்து படித்தார். அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பல்கலைக் கல்லூரியில் படித்து கணிதம், தத்துவம், வானவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இருபது வயதில் சிறந்த கல்விமானாக தாமோதரனார் உருவெடுத்ததால் ‘பண்டிதர்’ என்றழைக்கப்பட்டார்.

கிறித்துவர்களுக்கு மட்டும் மேலைநாட்டு ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்ததால், சைவராகிய இவர் கிறித்துவ மதத்தில் தம்மை இணைத்துக் கொண்டு தமது பெயரை சி.எல்.டபுள்யூ. கிங்க்ஸ்புரி என்று அழைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், அச்சுத் துறையின்பால் இவரின் கவனம் திரும்பியது. 1854இல் குமரகுருபரரின் “நீதி நெறி விளக்கம்” நூலை தாமே உரை எழுதி வெளியிட்டார். இதுவே இவரின் முதல் பதிப்பு நூலாகும். அப்போது ஆறுமுக நாவலரின் தொடர்பு இவருக்குக் கிடைத்திடவே, பதிப்புத் துறையில் தீவிரம் காட்டவும், சைவ மதத்திற்கு திரும்பிடவும் வழி வகுத்தது.
இத்தருணத்தில் பாதிரியார் பெர்சிவல் என்பவர் சென்னையில் ‘தினவர்த்தமானி’ என்ற வார இதழை நடத்தி வந்தார். அவரின் அழைப்பின் பேரில் அவ்விதழின் துணையாசிரியராகப் பொறுப்பேற்றார். பெர்சிவல் பாதிரியாரும், ஆறுமுக நாவலரும் இணைந்து முதன் முறையாக விவிலிய நூலை தமிழில் மொழி பெயர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமோதரனார் இதழாசிரியர் பணியோடு ஆங்கிலப் பெருமக்களாக விளங்கிய பேராசிரியர் பர்னல், சர்வால்டர் எலியட், லூ சிங்டன் ஆகியோருக்கு தமிழ் கற்பித்தும் வந்தார்.

இவரின் தமிழ்ப்பணியை கேள்வியுற்ற சென்னை மாகாண அரசு உடனடியாக சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணி நியமனம் செய்தது. பின்னர் 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது நுழைவுத் தேர்விலும், இளங்கலைத் (பி.ஏ.) தேர்விலும் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன் காரணமாக கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரியில் பதவி பெற்று, பின்னர் சென்னை அரசு கணக்குத்துறை அலுவலராக ஓய்வு பெறும்வரை பணிபுரிந்தார்.

இவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே கண்விழி தூங்காது ஓலைச் சுவடிகளை தேடுவதில் அதிக அக்கறை செலுத்தி வந்தார். அப்படி கிடைத்ததில் ஒன்றுதான் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தை விளக்கும் சேனா வரையம் உரையாகும். ஆறுமுக நாவலரால் சரிபார்க்கப் பட்டு முதன்முதலாக அந்நூலினை 1868ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இந்நூல் இவரின் இரண்டாவது பதிப்பாகும். இந்நூலினை வெளியிடுவதற்கு பலர் கடன் உதவி அளித்திருந்தாலும், திரும்பக் கடனை செலுத்த முடியாமல் மிகுந்த கவலை அடைந்தார்.

இவரின் மூன்றாவது நூல் 1881இல் வெளியிடப்பட்ட வீரசோழியத்தின் பெருந்தேவனார் உரையாகும். திருவாவடுதுறை ஆதினம் மடத்திலிருந்து கிடைத்த பிரதியே இந்நூலுக்கு ஆதாரமாகும். இந்நூலின் முன்னுரையில், தமிழ்க் கற்றறிந்தோர் பலரும் இந்நூலினை கேள்விப் பட்டது உண்டே தவிர, தொட்டுப் பார்த்ததில்லை என்று கூறிய படியாலும், இன்னும் சில காலங்களில் மருந்துக்கும் பயன்படாது அழிந்து போய்விடும் என்று அஞ்சியே இவற்றை அச்சிட நேர்ந்ததாக தாமோதரனார் குறிப்பிடுகிறார்.

இந்நூல் வெளிவந்தபோது ஆறுமுக நாவலர் இறந்து விட்டார். பின்னர் இந்நூலினை யாழ்ப்பாணம் தி. குமாரசாமி அவர்கள் உதவியோடு தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரின் சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக் கூடத்தில் இருந்து வெளியிட்டார்.

1882ஆம் ஆண்டு ஐம்பதாம் வயதில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு கிடைத்த பிறகு பதிப்புத்துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டார். சென்னையில் இருந்து கொண்டு ஓலைச்சுவடிகளை தேடியலைந்து சேகரிக்க முடியாது என்பதை உணர்ந்த தாமோதரனார் குடந்தை மண்ணில் குடியேறினார்.

அப்போது அங்கு வாழ்ந்துவந்த உ.வே. சாமிநாதருக்கு உற்சாகம் பெருத்தோடியது. உ.வே.சா. தமது ‘என் சரித்திரம் நூலில், “பழங்காலத்து தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்திற்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று” என்கிறார்.

தாமோதரனாருக்கும், உ.வே.சா.வுக்கும் இடையே ஏற்கெனவே கடிதத் தொடர்பு இருந்தது. திருவாவடுதுறை ஆதின மடத்திலிருந்த திருத்தணிகைப் புராணச் சுவடிகளையும், இறையனாரகப் பொருளுரையும் தாமே சரிபார்த்து, தாமோதரனாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதற்கு நன்றி தெரிவித்து தாமோதரனார் எழுதிய கடிதத்தில், திருத்தணிகைப் புராணம் இயற்றிய கச்சியப்பர் வரலாற்றை தாம் அச்சிட உள்ளதால் இராமசாமிப் பிள்ளை அவர்களிடம் இந்த வரலாற்றைப் பெற்று அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்ட தாகவும் உ.வே.சா. தாம் எழுதிய நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முதலாக உ.வே.சா. வெளியிட்ட திருத்தக்க தேவரின் காப்பிய நூல் சீவக சிந்தாமணி. இந்நூல் 1887இல் தான் வெளியிடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே தொல்காப்பியச் சொல்லதிகாரம் (1868), வீரசோழியம் (1881), திருத்தணிகைப் புராணம் (1883), நக்கீரனார் கண்டருளிய இறையனாரகப் பொருள் (1883), தொல்காப்பிய பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் உரை (1885) ஆகிய நூல்களை வெளியிட்டதன் மூலம் பழந்தமிழ் நூல்களின் பதிப்புத்துறையின் முன்னோடியாக சி.வை. தாமோதரனார் சிறந்து விளங்கியதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

சங்க இலக்கிய எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை நூலைப் பதிப்பிக்க எண்ணி அங்கு மெங்கும் தேடியலைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர் சொக்கலிங்கம் என்பவரிடம் கலித்தொகை இருப்பதைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்தார். அவரிடம் நேரில் சென்று சேகரித்து வைத்திருந்த ஏட்டுக் கட்டை பார்த்த போது கண்ணீர் விட்டு ஓவென்று அழுதார். கலித்தொகை ஓலைச் சுவடிகள் நொறுங்கிக் கிடந்தன. சேதமுறாத நெய்தற் கலியை மட்டும் வாங்கிவந்து ஆறுதல் அடைந்தார்.

ஒருமுறை தொல்காப்பிய ஆய்வுக்காக பிரதிகளைத் தேடிய போது ஆறுமுக நாவலரின் கலித்தொகை பிரதி யொன்று கைக்குள் அகப்பட்டது. இவற்றைப் பெரும் பேறாக எண்ணினார். ஆனால் அவற்றை உடனடியாக வெளியிட முடியவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியப் பொருளதிகாரம் நூலை வெளியிட்டதில் மிகுந்த நட்டம் அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

இந்நிலையில் பொருளுதவி வேண்டி ‘இந்து’ ஆங்கில ஏட்டில் விளம்பரம் செய்தார். இதைப்படித்த தொண்டைமான் புதுக்கோட்டை மன்னரின் அமைச்சராக விளங்கிய அ. சேசையா சாஸ்திரி அவர்கள் பொருளுதவி செய்ய முன்வந்ததால் 1887ஆம் ஆண்டு கலித்தொகை நச்சினார்க்கினியருரை நூல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பதிப்புகளின் போதும் தமக்கு பொருளுதவி தந்தவர்களை பட்டியலிட்டு நன்றி தெரிவிக்கும் நற்பண்பு இவருக்கே உரியது.
தாமோதரனார் 1853 முதல் 1892ஆம் ஆண்டு வரையில் பதிப்பித்த நூல்கள் பதினொன்று என்றபோதிலும், அதற்காக அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். கலித்தொகை பதிப்புரையில், “என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்து கிடைக்கும் நிலையைப் தொட்டுப் பார்த்தால் அன்றோ தெரிய வரும்! எடுக்கும் போதே ஓரம் ஒடியும்; கட்டை அவிழ்க்கும் போது இதழ் முறியும். புரட்டும்போதே துண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துகளோ வாலும், தலையுமின்றி நாலுபுறமும் பாணக் கலப்பை உழுது கிடக்கும்” என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார்.

தாமோதரனார் பதிப்புத் துறையில் மட்டுமின்றி, படைப்புத் துறையிலும் ஆர்வங்கொண்டு பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டார். சைவ மகத்துவம், விவிலிய விரோதம், வசன சூளாமணி, நட்சத்திர மாலை, ஆதியாகம கீர்த்தனம், கட்டளைக் கலித்துறை, ஆறாம் வாசகப் புத்தகம், ஏழாம் வாசகம், காந்தமலர் (அ) கற்பின் மாட்சி (புதினம்) ஆகிய ஒன்பது நூல்களும் இவரின் படைப்புத் திறனை பறைசாற்றும்.

தமிழிலக்கிய வரலாற்றை காலவரிசைப்படுத்தலில் தாமோதரனாருக்கு முதலிடம் உண்டு. அவற்றை அபோதகாலம், அக்ஷர காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதர காலம், சமணர் காலம், இதிகாச காலம், ஆதின காலம், தற்காலம் என ஒன்பதாக வகுத்தார். இவரின் காலவரிசைப்படுத்தல் இன்று காணும் போது குறைபாடு உடையதாகக் தோன்றிய போதிலும், வரலாற்று உணர்வும், கால நிர்ணய உணர்வும் அக் காலத்தே அவருக்கிருந்ததை எண்ணி வியக்கவே தோன்றுகிறது.

சட்டத்துறையில் இவர் முன்பே தேர்ச்சி பெற்று விளங்கிதால், புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராகப் பொறுப்பு வகித்தார். இவர் செய்த தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் இவருக்கு 1895 இல் ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் நூல்களை பதிப்பித்து வெளியிடுவதில் ஒவ்வொரு அறிஞர் பெரு மக்களுக்கும் ஓர் எல்லை உண்டு. ஆறுமுக நாவலர் - சைவ சமய நூல்கள், தாண்டவராய முதலியார் - திவாகரம், மழலை மகாலிங்க ஐயர் - தொல்காப்பிய எழுத்ததிகாரம், களத்தூர் வேதகிரி முதலியார் - நாலடியார், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர் - சூடாமணி நிகண்டு, திருவேங்கட முதலியார் - இராமாயணம். இதில் மேற்குறிப்பிட்ட அறிஞர் பெருமக்களுள் பலரும் ஒன்றையோ, இரண்டையோ வெளியிட்டு தமது பதிப்புப் பணியை முடித்துக் கொண்டனர்.

ஆனால், தாமோதரனாரோ மூச்சு உள்ளவரையிலும் ஏடுகளைத் தேடி வெளியிடுவதை கைவிடவே இல்லை. அதுபோல் மற்றவர்கள் வெளியிட்ட நூல்களை வெளியிடுவதிலும் இவருக்கு உடன்பாடு இல்லை. சீவக சிந்தாமணி நூலையும், எட்டுத் தொகை நூலையும் வெளியிடும் முயற்சி தாமோதரனாருக்கு இருந்தது. இரண்டு நூல்களையும் உ.வே.சா. வெளியிட்டதால் அம்முயற்சியை கைவிட்டு பதிப்புத் துறையின் அறத்தை பேணிக் காத்தார்.

1897இல் ஏவிளம்பி அகநானூறு (மணிமிடை பவளம் வரை) நூலினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் தமது அறுபத்தொன்பதாவது வயதில் 01.01.1901 அன்று, ஏட்டுச்சுவடியில் மனம் புதைப்பதை நிறுத்திவிட்டு மண்ணில் உடல் புதைந்தார். 

நன்றி :

1. ஈழத்தமிழறிஞர் தாமோதரம் பிள்ளை - ப. தாமரைக் கண்ணன்
2. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரிய பெருமாள்
3. சி.வை. தாமோதரம் பிள்ளை - தமிழ்ப்பதிப்புத் துறை முன்னோடி – அ. பாண்டுரங்கன்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 16 - 31, 2018

கண்ணோட்டம் இணைய இதழ்

ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.