கர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன்.
கர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வாக்குகளைக் களவாடிக் கொள்வது என்பதாகச் சீரழிந்தது. அதன்பிறகு, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக “வாக்குரிமை” மாற்றப்பட்டது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பணம், பதவி ஆசை காட்டி கடத்திக் கொண்டு போவது, கட்சி மாறச் செய்து பலனடைவது என்ற அரம்பத்தனமாக (ரவுடித்தனமாக) “சனநாயகம்” மாறியது.
இந்தச் சின்னத்தனங்கள் அனைத்தும் இப்போது கர்நாடக பதவி வேட்டையில் அரங்கேறின; ஆட்டம் போடுகின்றன. இந்த ஆட்டத்தில் முறை தவறி – முதல்வர் பதவியைப் பெற்ற பா.ச.க.வின் எடியூரப்பா மூன்று நாளில் அதை இழந்தார். அறம், ஒழுக்கம், சட்டம் நீதி என்பவற்றைப் பற்றி கவலைப்படாத பா.ச.க. கட்சியைச் சேர்ந்த கர்நாடக ஆளுநர் வச்சுபாய் வாலா, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற குமாரசாமியைப் புறக்கணித்துவிட்டு, அறுதிப்பெரும்பான்மை பெறாத பா.ச.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக்கி தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்.
கடந்த 12.05.2018 அன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. – 104, காங்கிரசு – 78, மதச்சார்பற்ற சனதா தளம் – 37 இடங்களைக் கைப்பற்றின. தற்சார்பாளர்கள் (சுயேச்சைகள்) – 2 பேர். முதலமைச்சர் பதவி ஏற்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் 104 உறுப்பினர்களைக் கொண்ட பா.ச.க.வின் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார், ஆளுநர் வச்சுபாய் வாலா!
ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கப் பல கோடி ரூபாய் தருவதற்கு தூது விட்டுப் பார்த்தது பா.ச.க.! அத்துடன் சாதி மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனாலும், காங்கிரசும், மதசார்பற்ற சனதா தளமும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை வளைத்து, கடத்தி, பதுக்கி வைத்துக் கொண்டார்கள். பா.ச.க. அரசியல் “ரிஷி”களின் பாச்சா பலிக்கவில்லை!
அதேவேளை தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட காங்கிரசும், சனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதலமைச்சராகிட ஒப்புக் கொண்டுள்ளன. முப்பத்தேழு உறுப்பினர்களை மட்டும் கொண்ட குமாரசாமி முதலமைச்சர்; 78 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி இல்லை!
தேவகௌடா – குமாரசாமி குடும்பத்தாரின் பதவி வெறிக்கு, முதலமைச்சர் என்ற தீனி போட்டாலொழிய பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்று கருதிய காங்கிரசு, இப்போதைக்கு குமாரசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. குமாரசாமியோ ஐந்தாண்டுகளும் நான்தான் முதல்வர் என்று இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார். காலம் செல்லச் செல்ல காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியில் பதவிச் சண்டை வருவதற்கு வாய்ப்புண்டு! ஏனெனில், இரண்டு கட்சித் தலைமைகளும் “இலட்சிய செம்மல்”கள் இல்லை! பதவி வெறி வந்திட – பத்தையும் இழக்கத் துணிந்த கட்டைகள்!
வரும் 23.05.2018 அன்று காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியின் முதல்வராக குமாரசாமி பதவியேற்க இருக்கிறார். நீண்டகாலமாகக் கங்காணி அதிகாரப் பசியில் துடித்துக் கிடந்த குமாரசாமி, இப்போது கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டு பதவிப் பூசை நடத்தி வருகிறார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பதை அவர்கள் கையளிக்கும் உறுப்பினர் பட்டியலிலிருந்து கணக்கிட்டு முடிவு செய்து, பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். உறுதியான பெரும்பான்மை இருக்கிறதா என்ற ஐயம் எழுமானால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை மெய்ப்பிக்க கெடு விதித்திருக்க வேண்டும்.
பா.ச.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும், ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மேகாலயா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், கட்சித்தாவல் மூலம் சிறுபான்மை பா.ச.க. ஆட்சியை பெரும்பான்மை ஆட்சியாக்கும் “சாகசத்தை” – ஆன்மிகம் பேசும் பா.ச.க. ஆளுநர்கள் செய்தார்கள். அந்த தில்லுமுல்லு காங்கிரசு – மதச்சார்பற்ற சனதா தள “சாகசங்களால்” முறியடிக்கப்பட்டது!
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பா.ச.க. தலைவர் அமித்சாவும் எந்தத் தில்லுமுல்லும் செய்யத் தயங்காதவர்கள் என்பதற்கு, அவர்களின் கர்நாடகப் பித்தலாட்டம் மற்றுமொரு எடுத்துக்காட்டு!
ஓர் ஆறுதல்; உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவையில் எடியூரப்பா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு நாள் அவகாசம் வைத்து ஆணையிட்டது. அந்தநிலையில்தான், பெரும்பான்மை பெற முடியாத எடியூரப்பா பதவி விலகினார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. ஆகிய இரண்டும் ஆன்மிக ஒழுக்கம் இல்லாதவை மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கமும் இல்லாதவை. சனநாயகம் என்றால் அவற்றிற்கு ஒவ்வாமை! தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், திட்டக்குழு போன்ற சனநாயகத்தை உறுதி செய்யும் நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் காலி செய்து வருகின்றன பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸூம்!
அதேவேளை, மதச்சார்பற்ற சனதா தளமும், காங்கிரசும் பொது இலட்சியமோ – பொது வேலைத்திட்டமோ எதுவுமின்றி அதிகார வேட்டைக்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஒ. பன்னீர்ச்செல்வம், “பா.ச.க.வின் தென்னக நுழைவுக்கான மணியோசை ஒலித்துவிட்டது” என்று வாழ்த்துக் கூறி, பா.ச.க.வின் சனநாயக விரோத – சட்ட விரோதச் செயல்களை வரவேற்றுள்ளார்.
செயலலிதா அம்மையார் இறந்தவுடன், தமிழ்நாட்டில் அதிகார வேட்டைக்காக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கடத்திப் பதுக்கி வைத்த “சாகசங்கள்” தமிழ்நாட்டிலும் நடந்தன. கர்நாடகத்தில் நடந்த விகாரமான அதிகார வேட்டை அரசியல், தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை!
தேர்தல் அரசியல் மிகமிக மோசமாகச் சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு இந்தச் சீரழிவிற்கு விதி விலக்கன்று! தேர்தல் கட்சிகளுக்கு வெளியே, மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திடப் போராடுவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதேபோல், சனநாயக உரிமைகள் பலவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தன்னெழுச்சியாக ஆற்றல் மிகு இளையோரும், அனுபவமிக்கப் பெரியோரும் இணைந்து நடத்த வேண்டும். இல்லையேல், எந்த இலட்சியமும் இன்றி எந்தப் பொது நல அக்கறையுமின்றி – தாயகப் பற்றும் தமிழினப் பற்றும் இன்றி, அதிகார வேட்டைக்கு அடித்துக் கொள்ளும் அரசியல் பெருச்சாளிகளின் பின்னால், மக்கள் அணிவகுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வதுதான் மிஞ்சும்! பழைய பெருச்சாளிகள் போதாதென்று, இரசினிகாந்து – கமலகாசன் போன்ற புதிய பெருச்சாளிகளும் அதிகார வேட்டை அரசியலுக்குள் அரிதாரம் பூசிவரும் அவலம் தொடரும்!
தமிழ்நாட்டு உரிமைகள் இந்திய அரசாலும் அண்டை மாநிலங்களாலும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மேலிருந்து கீழ் வரை சமூகக் கட்டமைப்பு ஊழலால் உலுத்துப்போய் நிற்கிறது! வேலையின்மை, விலை உயர்வு, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை, வறுமை ஆகியவற்றால் மக்கள் ஒவ்வொரு நொடியும் குமுறுகின்றனர்.
தேர்தல் ஆதாயக் கட்சிகளால் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்த முடியவில்லை! இவ்வேளையில், தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு அப்பால் நடந்து வரும் தமிழர் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பட வேண்டும்; மேலும் மேலும் வரிவடைய வேண்டும் என்ற உணர்வையும் உறுதியையும் தமிழர்கள் பெற வேண்டும்!
காமவெறியைவிட கொடியது அதிகாரவெறி – பதவிவெறி – பணவெறி என்ற நடைமுறை உண்மைகளை நாம் தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறோம். எனவே, தமிழர் தன்னெழுச்சித் தற்காப்புப் போராட்டங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment