ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“நலமாகி வருகிறேன் – நன்றி!” தோழர் பெ. மணியரசன்.

“நலமாகி வருகிறேன் – நன்றி!” பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேரன்புடையீர்,

வணக்கம். கடந்த 10.06.2018 இரவு 9 மணியளவில் தஞ்சையில் நான் தாக்கப்பட்டு விநோதகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 16.06.2018 அன்று வீடு திரும்பினேன்.

காயங்கள் விரைவாக ஆறி வருகின்றன. நன்கு கவனித்த தஞ்சை விநோதகன் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் நிருவாகத்தினர்க்கும் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களும் பொறுப்பாளர்களும், கலை இலக்கியத் துறைச் சான்றோர்களும் நேரில் வந்து பார்த்தும் தொலைப்பேசி வழியிலும் நலம் விசாரித்தார்கள். அவர்கள் அனைவர்க்கும் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் நலன், மக்கள் உரிமை ஆகியவற்றிற்காகக் களத்தில் நிற்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் என் மீது பாசம் பொழிந்து நேரில் வந்து பார்த்தும் தொலைப்பேசியில் விசாரித்தும் ஆறுதல் கூறிய பல்லாயிரக்கணக்கான நண்பர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும் தோழர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், தமிழீழத் தமிழர்கள் ஆகியோர் என்னைத் தாக்கியோர்க்கு எதிராகக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டும் தொலைப்பேசியில் ஆறுதல் கூறியும், எதிர்வினையாற்றினார்கள். அந்த அன்பு உறவுகளுக்கு உள்ளம் நிறைந்த நன்றி!

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்பு உறவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கண்டனங்கள் என்றும் நினைவில் நிற்கும்! அவர்கள் அனைவர்க்கும் நன்றி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11.06.2018 அன்றே சிறப்பு வினா எழுப்பி, நான் தாக்கப்பட்டதைக் கண்டித்ததுடன் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்ட தி.மு.க.வின் ஒரத்தநாடு தொகுதி உறுப்பினர் அண்ணன் ம. இராமச்சந்திரன் (எம்.ஆர்.) அவர்களுக்கும், அவரை அவ்வாறு வினா எழுப்பிட வழிகாட்டிய தி.மு.க. செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி!

என்னைத் தாக்கியவர்களைக் கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளைத் தளைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய – அவற்றில் பங்கேற்ற தோழமை இயக்கங்களுக்கும், மனித உரிமை ஆற்றல்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நான் தாக்கப்பட்ட பின், அரை மணி நேரத்திற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்ட ஊடக நிர்வாகிகளுக்கும், விரைந்து செய்தி அனுப்பிய தஞ்சை செய்தியாளர்களுக்கும் நன்றி! மறுநாள், காலையிலிருந்து தொடர்ந்து இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஏடுகளுக்கும், அவற்றின் தஞ்சை செய்தியாளர்களுக்கும் நன்றி!

மனித நேயத்துடனும், தமிழ் – தமிழர் நேயத்துடனும் கட்சி கடந்து – அமைப்புகள் கடந்து என் மீது அன்பு பொழிந்த அனைவருக்கும் நன்றிகள் பல!

துடித்தெழுந்த செயல்பட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து வரும் தமிழின உரிமைப் போராட்டங்கள் - தமிழர் வாழ்வுரிமைக் காப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை முடக்கிப் போடவும், அவ்வியக்கத்தின் தலைவராக உள்ள என் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிட்டு - அரம்பர்களை ஏவி என்னைத் தாக்கியுள்ளார்கள்.

இந்தத் தாக்குதல் என்பது, என் தமிழ் மக்களுக்கு நான் ஆற்றிவரும் உண்மையான பணிகளுக்கு எதிரிகள் எதிர்வகையாகக் கொடுத்த நற்சான்றிதழ் என்றே எடுத்துக் கொள்கிறேன். இந்நிகழ்வால் பாதிக்கப்பட்ட என் மீது - என் தமிழ் மக்கள் பொழிந்த அன்பு – நேர்வகைச் சான்றிதழ்!

என் உயிருள்ளவரை நம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.