ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.
 
அவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன?
 
சட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார்.

குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே!
 
டெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர்! அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா? நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது.
 
காவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது.
 
குறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது? நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா? அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை!
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.
 
மேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை! இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா? கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?
 
தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்றும் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.