ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!
1991ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதற்காக பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது வழக்கும், அதையொட்டி இப்போது பிடிவாரண்ட்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கில் முன்பிணை பெற்று, இன்று சைதாப்பேட்டை பதினோராவது நீதிமன்றத்தில் தோழர் பெ.ம. நேர் நின்றார்.

தமிழீழ விடுதலைக்காக சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாப் போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த விடுதலைப்புலிப் போராளி திலீபனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 29.10.1991 அன்று, சென்னை தியாகராயர் நகர் வெங்கடேசுவரா திருமண அரங்கில், தோழர் தியாகு தலைமையிலான “திலீபன் மன்றம்” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் “தேசிய இனப் போராட்டங்களும், ஈழ விடுதலையும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பேசிய தோழர் பெ. மணியரசன் அவர்கள், தமிழீழ விடுதலையை வலியுறுத்தியும், தமிழர்க்குத் தனி நாடு வேண்டுமென்றும் பேசி பிரிவினையைத் தூண்டியதாக, அக்கூட்டம் நடைபெற்ற நான்காண்டுகள் கழித்து 1994இல் 28.04.1994 அன்று, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-இன் பிரிவு 13இன்கீழ் சென்னை நடுவண் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, மிகத் தாமதமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவ்வழக்கு குறித்த தகவலையும் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு முறைப்படி தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

தொடர்ந்து பல போராட்டங்கள், பொது நிகழ்வுகள் மட்டுமின்றி, அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட, தோழர் பெ. மணியரசன் அவர்களிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இவ்வழக்கில் நேர் நிற்க வேண்டுமென்ற அழைப்பாணை எதையும் தோழர் பெ.ம. அவர்களிடம் காவல்துறையினர் வழங்கவில்லை. இந்நிலையில், திடீரென இவ்வழக்கில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.06.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு இவ்வழக்கில் முன் பிணை வழங்கியது. தொடர்ந்து ஏழு நாளைக்கு, சைதை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் நிபந்தனை விதித்து ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (16.07.2018) காலை தோழர் பெ. மணியரசன் இவ்வழக்கில் நேர் நின்று பிணை பெற்றார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.