தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
சட்டவிரோத மணல் வணிகம் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தி வருபவர் தோழர் முகிலன். அதற்கு முன் கூடங்குளம் அணு உலை அபாயத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தோழர் சுப. உதயகுமார், தோழர் முகிலன் மற்றும் அப்பகுதி மக்கள் மீது ஏராளமான வழக்குகளைக் காவல்துறை போட்டுள்ளது. கூடங்குளம் வழக்கில் வாய்தாவுக்கு நீதிமன்றம் போகவில்லை என்பதற்காகத் தோழர் முகிலன் மீது வள்ளியூர் நீதிமன்றம் பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது. ஆனால் தோழர் முகிலன் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக இயங்கி வந்தார். போராட்டங்களில் கலந்து வந்தார்.
அந்த பிடி ஆணைக்காகக் காவல்துறையினர் தோழர் முகிலனைத் தளைப்படுத்தி வள்ளியூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. ஆனால் தோழர் முகிலன் பிணையில் வெளிவர மறுத்து, சற்றொப்ப 300 நாட்களாக சிறையில் உள்ளார். வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
அவரை அண்மையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள். மதுரை சிறையில் தூய்மை அற்ற பாழடைந்த தனி அறையில் சாக்கடைக் கழிவுகளுக்கு அருகில் தோழர் முகிலனைத் தனியே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
தோழர் முகிலனுடன் வழக்குத் தொடர்பாக கலந்து பேச வரும் வழக்குரைஞர்களுக்கு நேரம் குறைக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுவும் அவருக்கான நீதியை மறுப்பதாகும்!
குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் தூய்மையான அறையில், உரிய வசதிகளுடன் வைத்திருப்பது சிறைச் சட்டமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்குரிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் (Criminal Justice Rules) இருக்கின்றன. அவற்றிற்குப் புறம்பாக யாரையும் சிறையில் நடத்தக் கூடாது!
தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர் அவர்களும், சிறைத்துறை மேலதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மதுரை நடுவண் சிறையில் தோழர் முகிலனுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருமாறும் தனிமைப்படுத்தி சிறை வைப்பதைக் கைவிடுமாறும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment