ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா? தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா? தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
தலைநகர் தில்லியில் முதல்வர் அரவிந்த் கெச்ரிவால் அமைச்சரவையை செயலற்றதாக்கி, நிர்வாகத்தை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் நேற்று (04.07.2018) தீர்ப்பளித்திருப்பது தில்லிக்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் அத்துமீறல் செய்யும் ஆளுநர்களுக்குக் கடிவாளம் போட்டது போல் உள்ளது. 

“அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படிதான் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகளும் தனித்தனித் தீர்ப்பெழுதினாலும், ஒத்த கருத்தோடு எழுதியுள்ளார்கள். 

அரசுக்கு அலுவலர்கள், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் – செவிலியர்கள் என யாரை கெச்ரிவால் அரசு அமர்த்தினாலும், அத்தனை நியமனங்களையும் தடுத்து வந்தார் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால். அவர் தானாகச் செயல்படவில்லை. அவ்வாறு தடைகள் போட வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி – அமித்சா தலைமையின் விருப்பம்! 

மோடி – அமித்சா நிர்வாகத்தின் அதே வேலைத் திட்டத்தைத் தான் புதுச்சேயில் துணை நிலை ஆளுநர் கிரேன் பேடி செயல்படுத்தி புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறார். 

அதேவேலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இதில் தில்லி முதலமைச்சர் கெச்ரிவால், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தங்கள் மாநில ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்பை எதிர்த்து சட்டப்போராட்டமும் சனநாயகப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இப்போது கெச்ரிவால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்கிறார்? ஆளுநர் பன்வாரிலாலின் அதிகார அத்துமீறலுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்! 

தமிழ்நாடு அமைச்சரவையின் அறிவுரையைக் கேட்காமலே பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அமர்த்துகிறார் பன்வாரிலால். தமிழ்நாட்டிற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரை துணை வேந்தராக அமர்த்துகிறார். எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகளைக் கூட்டி அரசின் வேலைகளையும், திட்டப்பணிகளையும் ஆய்வு செய்கிறார். 

ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படும்போது, சனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால் – கருப்புக்கொடி காட்டினால் ஏழாண்டு சிறைத் தண்டனை பெற்றுத் தருவேன் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவிக்கிறார். இதற்கானத் துணிச்சலை ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கிறார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமது தீர்ப்புரையில் கையாண்டிருக்கும் சில சொற்கள் மிகவும் கவனத்திற்குரியவை. 

“நன்கு விவாதித்து சட்டப்படி அமைச்சரவை எடுத்த முடிவுகளை முடக்க ஆளுநர் குழி பறிக்கக் கூடாது”. 

“கூட்டுப் பொறுப்புடன் அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் (ஆளுநர்) தடையாய் இருந்தால் பிரதிநிதித்துவ ஆட்சி என்பது செல்லரித்துப் போகும்!”.

“முதலமைச்சரும் அமைச்சர்களும் நன்கு விவாதித்து எடுத்த முடிவை செயல்பட விடாமல் துணை நிலை ஆளுநர் தடுத்தால் அமைச்சரவையின் கூட்டு முடிவு என்பது அம்மணமாக்கப்பட்டது போல் வெறுமை ஆகிவிடும்!”. 

உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட நெறிகாட்டும் நெருப்புச் சொற்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும். பன்வாரிலால் புரோகித்தும் கிரேன் பேடியும், திருந்துவார்களா? மோடி அரசு திருத்திக் கொள்ளுமா? எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முதுகு நிமிருமா? இவர்கள் எல்லாம் தங்களைத் திருத்திக் கொள்வதே சனநாயகம்! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.