"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது" - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்! தோழர் பெ. மணியரசன்.
"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது" - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டு இசை விழாக்களில் தெலுங்குக் கீர்த்தனமா - தமிழிசை பாடக் கூடாதா என்று தமிழுணர்வாளர்கள் கேட்டால், பிராமண இரசிகர்களும் சபாக்காரர்களும் இசைக்கு மொழி ஏது? அதில் போய் மொழி வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கில் பாட வேண்டும், தமிழில் பாடக் கூடாது என்ற மொழி இன வேறுபாட்டுக் கொள்கையாளர்கள் என்பது நாடறிந்த செய்தி!
இசைக்கு மொழி இல்லை என்ற அவர்களில் ஒரு சாரார் இசைக்கு மதம் உண்டு என்று கச்சைகட்டிக் கிளம்பியுள்ளார்கள்.
கடந்த 25.08.2018 அன்று சென்னை சேத்துப்பட்டில் “இயேசுவின் சங்கம சங்கீதம்” என்ற தலைப்பில் கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ். அருண் பாடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அது பற்றிய விளம்பரம் முகநூல் போன்ற வற்றில் வெளியானது. உடனே, இந்து இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டு செயல்படும் ஆரிய ஆதிக்க - சமற்கிருத விசுவாசிகளின் அமைப்புகள் கலகக்குரல் எழுப்பின.
இந்து மதத்தில் இறைவனை வணங்குவதற்கு எழுதப் பட்ட கர்நாடக இசைப் பாடல்களைக் கிறித்துவ விழாவில் பாடுவது தியாகராசருக்குச் செய்யும் துரோகம் என்று கண்டனம் முழங்கினர். வெளி நாடுகளில் இருந்தும் ஆரியத்துவா ஆதரவாளர்கள் பாடகர் அருணுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாகத் திட்டியுள்ளனர்.
மனப்பாதிப்பு ஏற்பட்டு, “நான் அந்நிகழ்ச்சிக்குப் போகவில்லை” என்கிறார் ஓ.எஸ். அருண். (குமுதம் ரிப்போர்ட்டர், 24.08.2018).
ஓ.எஸ். அருண் கூறுவது போலவே பிரபல பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவனும் - இசை அனைவர்க்கும் பொது வானது, எந்த மதக் கடவுளையும் இசையில் பாடலாம் என்கிறார்.
கர்நாடக இசையில் மட்டுமின்றி இசைத் துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் டி.எம். கிருஷ்ணா வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
“கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் மீதான திட்டுகளையும் மிரட்டல்களையும் பார்த்து நான் முடிவெடுத்திருக்கிறேன்.
“இனி ஒவ்வொரு மாதமும் அல்லாவைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ ஒரு பாடல் பாடப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
டி.எம். கிருஷ்ணாவுக்கு நம் பாராட்டுகள்! பிராமண வகுப்பில் பிறந்து, கர்நாடக இசையில் ஆட்சி செய்யும் அக்ரகார வர்ணாசிரமப் பார்வையை உதறி எறிந்துவிட்டு, தலித் மக்கள் தெருக்களில் போய் பாடியவர் டி.எம். கிருஷ்ணா. இசைத்துறையில் சமத்துவக் குரல் கொடுத்து வருகிறார். கானாப் பாடல்களும் இசையே என்கிறார்.
“இந்துக் கடவுள்களுக்காக இயற்றப்பட்ட சங்கீதக் கீர்த்தனங்களைத் திருடிப் பாடுவதைத் தான் எதிர்க்கிறோம்” என்கிறார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பால கவுதமன். (மேற்படி ரிப்போர்ட்டர் இதழ்).
இதில் திருட்டு எங்கிருந்து வந்தது? உலகம் முழுக்க ஏழு சுரங்களுக்குள் மாற்றி மாற்றி அவரவர் இரசனைக் கேற்ப மெட்டமைத்துக் கொள்கிறார்கள். தியாகராச கீர்த்தனையில் கூறப்பட்ட இராமர் பற்றிய வர்ணனையை - அதாவது சாகித்தியத்தை அப்படியே நகலெடுத்து இயேசுவுக்குப் பொருத்திப் பாடினால் அது “காப்பி” அல்லது அவர்கள் “மொழியில்” திருட்டு!
கர்நாடக இசை என்றாலே இந்துமத இசை என்று புதுக்கரடி விடுகிறார்கள் இவர்கள்!
கர்நாடக இசையில் ஏசுவையும், அல்லாவையும் பாடுவதைத் தடுக்க இவர்கள் யார்? ஆரியர்கள் ஆப்கானிஸ்தானம் வழியாக - கைபர் போலன் கணவாய் களைக் கடந்து இந்தியத் துணைக் கண்டத்துள் நுழையும் போது கொண்டு வந்ததா கர்நாடக இசை! கர்நாடக இசை என்பது தமிழிசை!
தமிழிசைக்கு முதல் முதலாக அறிவார்ந்த இலக்கண நூல் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதர் என்ற தமிழர்! மதத்தால் இவர் கிறித்துவர்! கர்நாடக இசையில் தமிழில் பாடுவதற்கென்று சமரசக் கீர்த்தனைகள் 19ஆம் நூற்றாண்டில் எழுதியவர். கிறித்தவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை! இப்பொழுது கர்நாடக இசையில் ஆழமான ஆய்வுகள் வழங்கி வருபவர் ஐயா மம்மது அவர்கள்!
இசை வேந்தர் சின்ன மௌலானா சாகிப் அவர்கள் நாதஸ்வரத்தில் கர்நாடக இசை மழை பொழிந்தவர். இவர் இசுலாமியர்! கிறித்தவரான ஏசுதாஸ் இந்துக் கடவுள்களைப் போற்றிப்பாடலாம்; ஆனால் பிராமண இசைக் கலைஞர்கள் ஏசுவைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் பாடக் கூடாது என்பதுதான் அவர்கள் விதிக்கும் விதி!
வர்ணாசிரம ஆதிக்கம் இந்துப் போர்வையைப் போத்திக் கொண்டு வருகிறது. முக்காட்டை நீக்கிப் பார்த்தால் உள்ளே தெரிவது ஆரியப் பிராமண முகம்! வர்ணாசிரமப் பாகுபாட்டு முகம்! அதற்கு இந்நிகழ்ச்சியும் ஒரு சான்று!
பா.ச.க. ஆட்சி வந்தபின் ஆரியத்துவா அட்டூழியங்கள் பெருகி விட்டன.
வடநாட்டில் நடப்பதுபோல் தமிழ்நாட்டிலும் தமிழர்களிடையே இந்துமத வெறியைக் கிளப்பி, கலகங்கள் செய்ய ஆரியத்துவாவாதிகள் தூண்டுகின்றனர். இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியத்துவா சதிக்குப் பலியாகி விடாதீர்கள்.
இந்த ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் தாம் நம் சைவ, வைணக் கோயில்களிலும் திருமூலர் பாடல்கள், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற ஆன்மிகப் பாடல்களைப் பாட விடாமல் தடுத்தவர்கள். தமிழ் வழிபாட்டு முறையை (அர்ச் சனையை) நீக்கி சமற்கிருத வழிபாட்டு முறையை கொண்டு வந்தவர்கள்! சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாடத் தீட்சிதர்கள் போட்ட தடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் நீக்கப்பட்டது.
“கணையாழி” - 2018 செப்டம்பர் இதழில் கடைசிப் பக்கம் பகுதியில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மேற்படி இந்துத்துவா வெறியர்களின் மிரட்டல்களைக் கண்டித்ததுடன் டி.எம். கிருஷ்ணாவுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்திரா பார்த்த சாரதி அவர்களுக்கு நம் பாராட்டுகள்!
இந்து மதத்தில் உள்ள தமிழர்களே ஆரியப் பிராமணியத்தின் முகமூடியான இந்துத்துவா ஒப்பனையில் ஏமாந்து போகாதீர்கள்! ஆரியத்துவாவைச் சுமந்து வரும் அரசியல் குதிரை இந்தியத்தேசியம் என்பதை இனங் காணுங்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment