நெல் கொள்முதலும் நிறுத்தப்படும் ரேசன் நிலையங்களும் மூடப்படும்! தோழர் கி. வெங்கட்ராமன்.
நெல் கொள்முதலும் நிறுத்தப்படும் ரேசன் நிலையங்களும் மூடப்படும்! தோழர் கி. வெங்கட்ராமன் - பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடி நெல் கொள்முதல் செய்வதை விரைவில் நிறுத்தப்போகிறது. அதேபோல், நியாய விலைக்கடைகளையும் மூடப் போகிறது! மிக அருகில் நெருங்கி வரும் இந்த ஆபத்தை உரிய அளவு உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கஙகளும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை!
கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு இதற்கான திட்டமிட்ட நகர்வுகளை நிகழ்த்தி வருகிறது என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இப்போது அந்த நகர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்திய அரசின் ஆணைப்படி தமிழ்நாடு அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த ஆகத்து 31ஆம் நாளோடு மூடியது.
உழவர்களின் எதிர்வினை காரணமாக இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று, 2018 செப்டம்பர் 30 வரை உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
உண்மையில், பெரும்பாலான அறுவடை அக்டோ பரில்தான் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில் அரசுக் கொள்முதல் நிலையங்கள் செயல்படாது! பெரும்பாலான உழவர்கள், மழைக்காலத்தில் நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியாமல் வந்த விலைக்குத் தனியார் வணிகர்களிடம் விற்கும் மிகப்பெரிய அவலம் நிகழ இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் இந்திய அரசு நிறுவனமான - இந்திய உணவுக் கழகத்தின் முகவராக மாறிச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தனித்த செயல்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன.
இந்திய உணவுக் கழகம் தமிழ்நாட்டில், எவ்வளவு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அதை மட்டும் கொள்முதல் செய்வது என்ற நிலை நடந்து வருகிறது.
மோடி பதவிக்கு வந்தவுடன் சாந்தக்குமார் என்பவர் தலைமையில் அமர்த்திய ஆய்வுக்குழு 2015இல் அளித்த பரிந்துரையினை ஏற்று, இனி இந்திய உணவுக் கழகத்தையும் (எப்.சி.ஐ.) படிப்படியாகக் கலைத்து விடுவது என மோடி அரசு அறிவித்துவிட்டது. அதன் செயல்பாட்டு முடிவைத்தான் தமிழ்நாடு அரசின் வாயிலாக இப்போது அறிவித்திருக்கிறது.
மறுபுறம், கடந்த 2017 சூலை 26இல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கையின்படி மிகப்பெரும் பாலான தமிழ்நாட்டுக் குடும்பங்களை ரேசன் கடையிலிருந்து ஒதுக்கி வைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2 கோடியே 1 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில் மாதம் 8,300 ரூபாய் ஊதியம் பெறுவோர், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், வருமான வரி அல்லது தொழில் வரி கட்டுவோர், வீட்டில் குளிர் சாதன வசதி செய்திருப்போர் என்று பல வகையில் வரம்பு கட்டி பெரும்பாலான குடும்பங்களை விலக்கி வைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆயினும், அது தற்காலிகமாக செயலில் வராமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் முற்றிலுமாக உழவர்களிடமிருந்து கொள்முதலும், ரேசன் கடைகளில் உணவுப் பொருள் வழங்கலும் நிறுத்தப்பட இருக்கிறது. பெரும்பாலான உழவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள், வாழ வழியின்றி நிலத்தையும் தங்கள் வாழ்விடத்தையும் விட்டு வெளியேறுவதா என்ற நிலைமைக்குத் தள்ளப்பட இருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியை இப்போதாவது உணர்ந்து, உழவர்களும் ரேசன் கடைகளை சார்ந்து வாழும் ஏழை நடுத்தரக் குடும்ப மக்களும் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புப் போராட்டங் களிலும், முயற்சிகளிலும் இறங்க வேண்டும்.
இல்லையென்றால், மிகப்பெரும் ஆபத்து தமிழ்நாட்டு மக்களை கவ்விக் கொள்ளும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment