ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வீரவணக்கம் “கி.த.ப.” தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

வீரவணக்கம் “கி.த.ப.” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
“கி.த.ப.” என்ற கிளர்ச்சிக் குரல் ஓய்ந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. இன்று (20.09.2018) சென்னை உயர் நீதிமன்றம் சென்றபோது, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த புலவர் கி.த. பச்சையப்பனார் மாரடைப்பால் மறைந்துவிட்டார் என்ற செய்தி ஈட்டியாய் பாய்ந்தது!
 
ஏற்கெனவே உடல் நலமற்று ஓய்விலிருந்த கி.த.ப. அவர்களை கடந்த 25.08.2018 அன்றுதான் சென்னை புதுவண்ணையில் அவரது இல்லத்தில் சந்தித்து, நானும் தோழர்கள் க. அருணபாரதி, ம. இலட்சுமி ஆகியோரும் சந்தித்து உடல்நலம் உசாவி, சமகால நிகழ்வுகள் குறித்து உரையாடித் திரும்பினோம்.
 
இதற்குள் இப்படி ஒரு முடிவு வரும் என்று எள்ளளவும் கருதவில்லை; பேரிழப்பு – பெரும் துன்பம்!
 
தமிழ்வழிக் கல்வி போராட்டமா, பொதுக்கூட்டமா – அங்கிருப்பார் கி.த.ப.! எத்தனை தடவை அவருடன் சேர்ந்து போராடி தளைப்பட்டு, மண்டபங்களில் அடைக்கப்பட்டோம்!
 
தமிழீழ விடுதலை ஆதரவு போராட்டமா, ஏழு தமிழர் விடுதலைப் போராட்டமா – கி.த.ப. அங்கிருப்பார்! தமிழ், தமிழர், மனித உரிமை, சனநாயகக் காப்புப் போராட்டங்கள் அனைத்திலும் கி.த.ப. இருப்பார். இத்தனைக்கும் அவர் பணி ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்!
பதின்ம அகவை இளைஞர் போல் சுறுசுறுப்பானவர்!
 
தூயதமிழில்தான் பேசுவார்; எழுதுவார்! மாணவப் பருவத்தில் புதுவை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மார்க்சியத் தத்துவ ஈர்ப்பில் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தவர். நான் சந்திக்கும்போது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார்.
 
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையும், தமிழ்நாட்டுத் தலைமையும் மண்ணுக்கேற்ற வகையில் மார்க்சியத்தை வளர்த்துச் செயல்படுத்தாமல் – வெளிநாட்டு அனுபவங்களையே வழிகாட்டும் நெறியாகக் கொண்ட அவலத்தை அறிந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற 1985 சூன் மாதம், தஞ்சை மாவட்டம் கல்லணை பயணியர் விடுதியில் நாங்கள் சிலபேர் கூடி விவாதித்தபோது, அதில் கலந்து கொண்டவர் கி.த.ப.
 
“தமிழர் கண்ணோட்டம்” - இதழின் மெய்ப்புத் திருத்த, புது வண்ணையிலிருந்து பகல் உணவையும் எடுத்துக் கொண்டு தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலை அலுவலகம் வந்துவிடுவார் கி.த.ப. ஆண்டுக்கணக்கில் அப்பணி செய்தார்.
 
தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் முகாமையான தூண்களில் ஒருவராகச் செயல்பட்டார்!
 
தமிழ்நாடு தமிழாசிரியர் கழகத்தின் நிறுவனர்களில் முகாமையானவர் கி.த.ப. அதன் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டார். பணியில் இருக்கும்போதும் சரி, பின்னரும் சரி, அமைச்சராக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர் கி.த.ப.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் உதவி செய்தார் கி.த.ப.
 
சிறந்த தமிழ்த்தேசியராகச் செயல்பட்டவர் புலவர் கி.த.ப.!
 
கி.த.ப. அவர்களுக்கு இறுதி வணக்கம் தெரிவிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. வேறு வழியில்லை; வீரவணக்கம் கி.த.ப.!
 
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ”
- பாவேந்தர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594 
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.