ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்! தோழர் கி. வெங்கட்ராமன்.


பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கல்வி வணிகர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, தமிழ்நாடு அரசு பதினொன்றாம் வகுப்பின் தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவித்திருக்கிறது.
இவ்வறிவிப்பை வெளியிட்டு 14.09.2018 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி முதலாளிகளின் அழுத்தத்திற்கு தான் பணிந்ததை மறைத்து, 10, 11, 12 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடப்பது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தைத் தருவதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
மேனிலைப் பள்ளி வகுப்பு என்பது (+2), பதினொன்று – பன்னிரெண்டு ஆகிய இரண்டு ஆண்டு படிப்புகளின் தொகுப்பாகும். இதில், பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தவிர்ப்பதும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணை உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், கல்லூரிக் கல்விக்குள் நுழையும் மாணவர்களை முதலாமாண்டிலும் அடுத்த ஆண்டிலும் திக்குமுக்காடச் செய்கிறது.
தன்நிதிப் பள்ளிகள், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தையே நடத்தாமல் இரண்டு ஆண்டுகளும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தையே நடத்தி, செயற்கையாக தேர்ச்சியை உயர்த்திக் காட்டி, கல்விக் கொள்ளை நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு உயர்கல்வியில் நுழைவுத் தேர்வுகளில், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித் தாள்கள் இடம்பெறுவதால், அதற்குள்ளேயே நுழைய முடியாமல் மாணவர்களை வெளியே நிறுத்துகிறது.
பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தும் அரசுப் பள்ளிகள் மோசடியான இப்போட்டியில் பின்தங்கிப் போகின்றன.
இந்த நெருக்கடியில் பெற்றோர்கள், தன்நிதி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பணம் கொட்டி சேர்த்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டுமென்றும், அதில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் மிக நீண்டகாலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.
இதனை ஏற்று, கடந்த கல்வியாண்டில் +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வு மதிப்பெண்ணையும் உயர்கல்விக்கு தகுதியாக வரையறுப்பது, +2 தேர்வுக்கான மொத்த மதிப்பெண்ணை 1200லிருந்து 600ஆகக் குறைப்பது என்ற முடிவுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தபோது அது கல்வியாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது.
ஆனால், இது ஓராண்டு முடிந்த நிலையில் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் அரசாணை 195 வெளியாகியுள்ளது.
மேனிலைப் பள்ளிக் கல்வியில் +1, +2 ஆகியவை இடைநிலைக் கல்லூரிக் கல்வி போன்று, ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ச்சியாக இருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாண்டு படிப்பும் ஒருங்கிணைந்த (Integrated) படிப்பு ஆகும். இதில், ஓராண்டு படிப்பை (+1) வெட்டிப் பிரிப்பது மாணவர்களின் மேல் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படாது! மாறாக, தன்நிதி தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கும், தனிப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் மதிப்பெண் பட்டறைகளுக்குமே பயன்படும்!
இப்போது இந்திய அரசு, “நீட்” தேர்வை திணித்துள்ளது. அந்த “நீட்” தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி தான் வினாத்தாள் அமையும் என்று அறிவித்துள்ளது. “நீட்” தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே மருத்துவக் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது மேனிலைப் படிப்பில் முதல் வரிசை மதிப்பெண் வாங்குவதை தேவையற்றதாக்கிவிட்டது. மாநிலப் பாடத்திட்ட மேனிலைப் பள்ளிப் படிப்பையே மதிப்பற்றதாக்கிவிட்டது.
இச்சூழலில், +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு, ஆனால் அந்த மதிப்பெண் உயர் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு – இன்னும் ஒரு தாக்குதலாக அமைந்திருக்கிறது.
+1 பாடங்களை நடத்தும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள், 11 - 12 ஆகிய இரண்டாண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே நடக்கும் தனியார் தன்நிதி பள்ளி மாணவர்களோடு போட்டியிடும்போது, குறை வாய்ப்பு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி முற்றுமுழுக்க தனியார் கொள்ளைக்குத் தங்குதடையின்றி திறந்து விடுவதற்கே இது வழிவகுக்கும்! பாடத்தின் செய்தி தெரியாமல், உயர் மதிப்பெண் மட்டுமே வாங்கும் மாணவர்களைத்தான் இது உருவாக்கும்.
இப்போது இந்திய அரசு, பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் கலைத்துவிட்டு, அந்த இடத்தில் உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை நிறுவி, உயர்கல்வி முழுவதையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது.
“நீட்” தேர்வும், உயர்கல்வி தனியார்மயமாக்கலும் தமிழ்நாட்டில் பணம் படைத்த வெளி மாநிலத்து மாணவர்கள் கணக்கின்றி நுழைவதற்கு வாய்ப்பளிக்கும். இப்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை 195 – பள்ளிக் கல்வியை முற்றிலும் தனியார் கைக்குக் கொண்டு சென்றுவிடும்!
மண்ணின் மக்களான ஏழை எளிய மாணவர்கள், பள்ளிக் கல்வியிலிருந்தும் உயர்கல்வியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்!
எனவே, தமிழ்நாடு அரசு அரசாணை எண் 195-ஐ திரும்பப் பெற வேண்டும்! பதினோராம் வகுப்புக்கு நடக்கும் பொதுத்தேர்வின் மதிப்பெண் உயர்கல்விக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்!
பதினோராம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது, அதுவும் மேல் கல்விக்கு தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படுவது மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் என்பது பொருந்தாத காரணமாகும்.
அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, சோதனைக் கூடம், வகுப்பறை, கல்விக் கருவிகள், கழிப்பறைகள், விளையாட்டிடங்கள் ஆகியவை உரிய அளவில் இல்லாமை ஆகியவையே இப்பள்ளிகள் பின்தங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணமாகும். அங்குள்ள மாணவர்கள் இந்தத் தடைகளுக்கிடையே படிப்பதால்தான் கடைசி நேரத்தில் பொதுத்தேர்வுக்கு தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
இன்னொருபுறம், அனைவரும் தேர்ச்சி, அதிகம் பேர் அதிக மதிப்பெண் என்ற வணிகப் போட்டியில் இயற்கை நிலைக்குப் பொருந்தாத வகையில், தனியார் தன்நிதிப் பள்ளிகளும் தனிப்பயிற்சி மதிப்பெண் பட்டறைகளும் மாணவர்களை பொதுத்தேர்வு குறித்த அச்சத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வினாடியும் மாணவர்கள் மதிப்பெண்ணை நோக்கி அச்சத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவைதான் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
பாடச் சுமையைக் குறைப்பது, கற்பித்தல் முறையை மேம்படுத்துவது, ஆண்டுக்கு இரு பருவ (செமஸ்டர்) தேர்வு முறையைக் கொண்டு வருவது, தொடர் மதிப்பீடு நடத்துவது, மாணவர்களின் பன்முகத் திறன்களையும் தகுதியாக மதிப்பிடுவது போன்ற மாற்று வழிகளை கல்வியாளர்களின் துணை கொண்டு கண்டுணர்ந்து, கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும்.
நோய்க்கு மருந்து தேடுவதைவிடுத்து, இன்னொரு பெரிய நோயை மருந்தாகக் கொடுக்கிற பணியைத்தான் தமிழ்நாடு அரசு இப்போது செய்துள்ளது!
தமிழ்நாடு அரசு ஆணை 195-ஐ திரும்பப் பெற வேண்டும்! கல்வியாளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் பெற்றோர்களும் தரமான கல்வி என்ன, முன்னேற்றத்திற்கான கல்வி என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பெற்று, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை முறியடிக்க ஒன்றுதிரள வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.