மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!
மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!
பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி அவாகள் இன்று (27.02.2019) விடியற்காலை 2.30 மணியளவில் ஓசூரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பெருந்துயரம் தந்தது. நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்த்து நலமாகி வந்த நிலையில், அவர் அந்நோயினால் காலமானது மிகத் துயரமாக உள்ளது. மணப்பாறை அருகே உள்ள அவர் ஊரான வையம்பட்டி அவர் பெயராகிப் போனது!
மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் தானே முளைத்து எழுந்த மண்ணின் கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி. வையம்பட்டியும் மக்கள் பாவலர்! அவர் இயற்றிய பாடல்களை அவரே பாடவும் செய்வார். அவர் பாடல்களை பல்வேறு இசைக் குழுவினர் பாடி வருகிறார்கள். திரைப்படங்களிலும் அவர் பாடல்கள் வந்துள்ளன.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் கலை இலக்கிய அமைப்பிலும் செயல்பட்டு வந்த முத்துச்சாமி அவர்கள், ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. செம்பரிதி உள்ளிட்ட தோழர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். அங்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மேடைகளிலும் அவர் தமது பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ஒசூர் பொறுப்பாளர் தோழர் ப. செம்பரிதி அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பெருமுயற்சி செய்து நன்கொடை திரட்டி கடந்த 22.04.2018 ஓசூரில் சிறப்பான விழா நடத்தி, பாவலர் வையம்பட்டி முத்துச்சாமிக்கு 1,25,000 ரூபாய் நிதி வழங்கினர்.
என் மீதும் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். நாங்கள் மிகுந்த பாசத்துடன் அவருடன் தோழமை கொண்டிருந்தோம்.
சமகால மக்கள் சிக்கல்களை மையப்படுத்தி தான் நாட்டுப் புறப்பாடல்கள் இயற்றி வந்தார்.
பெண் குழந்தை கருவிலும், பிறந்த பின்னும் கொலை செய்யப்படுவதை எண்ணித் துடித்து வையம்பட்டியார் எழுதிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.
“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
பத்து மாசமா போராட்டம்
பொண்ணா பொறந்தா கொன்னுடுவேன்னு
புருசன் செய்யுறான் ஆர்ப்பாட்டம்..”
என்று தொடங்கும் பாடல் கவிதை நயமும் இசை நயமும் மிக்கது.
ஊர்ப்புறங்களில் உள்ள சாதி உணர்வுகளை – சாதிக் கொடுமைகளைக் கண்டித்து அவர் இயற்றிய பாடல்களில் “எங்கள் ஊர் அழகு” என்ற தலைப்பிலான பாடல் மிகவும் அழகு!
“கண்ணை உருத்தும்படி எங்கள் ஊர்
கள்ளிச்செடி ஓர் அழகு
உள்ளம் கசங்குபடி ஊமத்தம்பூ ஓர் அழகு”
என்று ஊரின் ஒவ்வொரு அழகையும் வர்ணித்து வரும் பாவலர் முத்துச்சாமி, இறுதியில் ஈட்டி பாய்ச்சுவது போல் ஒரு கேள்வி கேட்பார் : “இதில் சாதி எந்த அழகு?”.
மண்ணின் மணத்தோடு, வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் எழுதி, பாடிய பாடல்கள் வழி அவர் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்!
பாவலர் முத்துச்சாமி அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment