பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தோழர் பெ. மணியரசன்.
பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களைக் கொச்சைப்படுத்தி வரும் பெண்ணுரிமைவாதிகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா?” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா எழுப்பியுள்ளார்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் இதுகுறித்த கேள்விக்கு ஐயா பெ. மணியரசன் அளித்துள்ள விடை இது :
“நாம் தமிழர் கட்சி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் புதுவையையும் சேர்த்துள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பெண்ணுரிமைக்கு இது முன்னெடுத்துக் காட்டாக உள்ளது. இதனைக் கொச்சைப்படுத்தி கவிஞர் சல்மா, மருத்துவர் சாலினி, ஊடகத்துறையினர் பனிமலர், திவ்வியபாரதி போன்றவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.
இந்தப் பெண்கள் வெறுப்பு அரசியல் என்ற கொள்ளிக் கட்டையால் தங்கள் தலையைச் சொறிந்து கொண்டது போல் தெரிகிறது.
இதே எண்ணிக்கையில் தி.மு.க. பெண்களுக்கு 50 விழுக்காடு தொகுதிகள் கொடுத்திருந்தால் வானத்துக்கும், மண்ணுக்குமாய் தாவித் தாவிப் புகழ்ந்து தள்ளுவார்கள்.திராவிடம் வளர்த்துள்ள பண்பு இது!
ஆண்களின் இனிப்புப் பேச்சில் பெண்கள் மயங்கக் கூடாது என்று மருத்துவர் சாலினி பதிவிட்டிருப்பது. பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இருபது பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியது வெறும் பகட்டு என்று கவிஞர் சல்மா நையாண்டி செய்திருக்கிறார். அவரது தி.மு.க.வில் இரண்டு பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளார்கள். அவர்களிலும் ஒருவர் பட்டத்து வாரிசு!
படைப்பாளிகளுக்கு மனச்சான்று பிளவுபடக்கூடாது. பெரும் பொறுப்புள்ளது!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment