அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!
அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
பேச: 7667077075, 9443918095
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.
ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.
அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!
காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.
அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!
2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!
அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.
எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment