ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்! தோழர் பெ. மணியரசன்.

உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேரன்புடையீர்,

வணக்கம்! நேற்று (10.05.2019) எனக்கு 72 அகவை நிறைவடைந்து 73ஆம் அகவை தொடங்கிய நாள். முகநூல் வழியாகவும், தோழர்கள் வழியாகவும் என் பிறந்த நாளை அறிந்து நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தொலைப்பேசி வழியாகவும், நேரிலும் எனக்களித்த உங்களுக்கும், மனத்தளவில் வாழ்த்திக் கொண்டிருக்கும் பெரு மக்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி!

தமிழ் இன, தமிழ் மொழி, தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க என்னை மேலும் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வையே உங்களின் வாழ்த்துகள் எனக்கு ஊட்டின.

தமிழ்ச் சமூகம் தனக்குள் உள்ள சாதி, மத முரண்பாடுகளைக் களைந்து, நம் முன்னோர் வகுத்த அறத்தின்படி சமத்துவம் கடைபிடிக்கச் செய்ய, மேலும் உழைக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.

வடநாட்டு - பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு ஆக்கப்பட்டுள்ள அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டும். தற்சார்புள்ள தமிழர் தொழில், வணிகம், கல்வி, வேளாண்மை, சூழலியல் தழைக்க நாம் அனைவரும் உழைப்போம்!

வந்து குவிந்து, தமிழர் தாயகத்தைத் தங்கள் மண்டலமாக்கிக் கொள்ளும் வடநாட்டார் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை வெளியேற்ற ஒருங்கிணைவோம்.

பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு போன்றவை தன்னிலிருந்தும் தன் வீட்டிலிருந்தும் புறப்பட்டு தமிழ்நாட்டளவில் செயல்பட வைப்போம்.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே தி.மு.க. ஊட்டிய தமிழின உணர்ச்சியில் வளர்ந்தவன். அதன் பிறகு, 1968-இல் பாவாணர் அவர்களைத் தலைவராகவும், பெருஞ்சித்திரனார் அவர்களைப் பொதுச் செயலாளராவும் கொண்டு உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகத்தின் வழி தமிழின உணர்வும், தமிழ்த்தேசிய உணர்வும் பெற்றவன்.

உலகத் தமிழ்க் கழகத்திற்குள்ளேயே தனித்தமிழ்நாட்டை முதன்மைப்படுத்திய தோழர்கள் மகிபை பாவிசைக்கோ, உணர்வுப்பித்தன், தேனி இரும்பொறை போன்றோரின் மாற்று அமைப்பிற்குள் செயல்பட்டவன்.

வியட்நாம் விடுதலைப் போர் போல் தமிழ்நாட்டிலும் விடுதலைப் போர் நடத்த வேண்டும் என்று கருதிய அக்காலத்தில், அந்த இலட்சியப் பயணத்தில் வாழ்நாள் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்று நான் கருதிக் கொண்டது உண்டு!

வியட்நாம் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமானால் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து, சி.பி.எம். கட்சியில் நானும் என் கருத்துடன் ஒத்துப்போன உலகத் தமிழ்க் கழகத் தோழர்கள் சிலரும் 1970களில் தீவிரமாகச் செயல்பட்ட சி.பி.எம். கட்சியில் சேர்ந்தோம். அக்கட்சியில் 1973 முதல் 1985 வரை முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினேன். கற்றுக் கொள்ளப் போன நாங்கள் அன்றாடப் போராட்டங்களில் ஈடுபட்டு அக்கட்சியுடன் உண்மையாகவே இணைந்துவிட்டோம்.

சி.பி.எம். கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அப்போது உழவுத் தொழிலாளர் கூலி உயர்வுப் போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் முதலியவற்றை முடுக்கிவிட்டிருந்தது. அப்போராட்டங்களில் பங்கு பெற்ற போது, எதிர்த்தரப்பில் வீச்சரிவாளோடும், தடிக்கம்புகளுடனும் தாக்க வருவார்கள். எங்களுக்குத் தலைமை தாங்கிய தோழர் ந. வெங்கடாசலம் அவர்கள் 1977இல் கொலை செய்யப்பட்டார். 1984இல் அரிவாள் கம்புகளால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.

அப்பொழுதெல்லாம் என் வாழ்நாள் எவ்வளவு காலம் நீளும் என்ற உறுதியற்ற நிலை இருந்தது. அதற்காக ஒருபோதும் பின்வாங்கியதில்லை!

இவ்வாறான செயல்பாடுகளுக்கிடையே 72 ஆண்டுகள் வாழ்ந்துள்ளோமே என்ற வியப்பும் ஏற்படுகிறது.

தமிழ்த்தேசியத்திற்கு ஒப்படைத்துக் கொண்ட ஒரு போராளி என்ற உணர்வே என்னை இப்போது இயக்குகிறது. தமிழ்த்தேசிய இறையாண்மை மீட்புப் போராட்டம் மக்கள் போராட்டமாக – அறப்போராட்டமாக தமிழ்நாடு தழுவியதாக வளர மேலும் மேலும் உழைப்பேன்.

எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த தலைவர்கள், தோழர்கள், தம்பிகள், தங்கைகள், பேரன்கள், பேத்திகள், வெளிநாடு வாழ் உறவுகள் அனைவர்க்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றி! உங்கள் அனைவர்க்கும் மூத்தவன் என்ற முறையில் என் வாழ்த்துகள்!

அன்புடன் 
பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நாள் - 11.05.2019

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.