ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே!" ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கைக்கு எதிர்வினை! பெ. மணியரசன்.
"ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே!"
ஆசிரியர் கி. வீரமணி அவர்களின்
அறிக்கைக்கு எதிர்வினை!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி ( @asiriyarkv ) அவர்கள் “திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று சிலரைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றும், “பெரியார் ஊட்டிய தமிழ்த்தேசிய உணர்வை திசைத்திருப்பும் எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது" என்றும், “இது தான் பெரும் ஆபத்து” என்றும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை என்பதால், இதுகுறித்து, சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.
“சமத்துவம், சுயமரியாதை என்பது திராவிடம்” என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஆசிரியர். திராவிடம் என்பது ஆரியர் உருவாக்கிப் பயன்படுத்திய சொல்; இப்போதும் அவர்களில் ஒரு சாரார் திராவிட பிராமண சங்கம் வைத்துள்ளார்கள்.
திராவிடம் என்ற பெயரில் மொழியோ, நாடோ, இனமோ இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை.
பெரியார் பரப்புரை செய்த சுயமரியாதை, ஆரிய – பிராமண ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவம் ஆகியவற்றைக் குறிக்க “பெரியார் சிந்தனைகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (பெரியார் சிந்தனைகள் மீது எமக்குள்ள விமர்சனங்கள் வேறு). திராவிடம் என்ற சொல்லை அருள்கூர்ந்து பயன்படுத்தாதீர்கள். அந்தத் திராவிடம் என்ற சொல் தமிழினத்தை மறைக்கிறது; ஒரு வகையில் மறுக்கிறது. தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் அவரவர் தேசிய இனப்பெயரை நேரடியாகச் சொல்கிறார்கள். தமிழர்கள் மட்டும், அவர்களை எல்லாம் உள்ளடக்கும் பொதுப்பெயர் என்று நீங்கள் கருதும் “திராவிடர்” என்ற பெயரில் அழைக்குமாறு வலியுறுத்துகிறீர்கள். இது ஓரவஞ்சனை இல்லையா?
தமிழறிஞர்களாலும் அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும் “தமிழர் திருநாள்” என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, நீங்கள் தான் வலிந்து “திராவிடர் திருநாள்” என்று அண்மைக் காலமாக அழைத்து வருகிறீர்கள்.
பெரியார் தமிழ்த்தேசிய உணர்வு ஊட்டினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழ்த்தேசியம் என்பதையே ஏற்க மறுத்து வந்த தாங்கள் – அதை ஏற்று அறிக்கை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்!
பெரியார் தமக்கு இந்தியத் தேசியத்தின் மீது மட்டுமல்ல எந்தத் தேசியத்தின் மீதும் நம்பிக்கை இல்லை, தேசியம் என்பது மோசடி; தேசியத்திலிருந்துதான் பாசிசம், நாஜிசம் எல்லாம் தோன்றின் என்றார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
அரண் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளவற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். “ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக பெரியார் நம் மண்ணில் நிற்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
பா.ச.க. தலைமையில் தி.மு.க., நடுவண் அமைச்சரவையில் கூட்டணி சேர்ந்த போதும் பெரியார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்கப்படாமல்தான் இருந்தாரா?
அப்படிப்பட்ட தி.மு.க.வை தி.க. ஆதரித்து வரும் போதும் பெரியார் ஆரியத்தால் விழுங்கபடாமல் இருக்கிறாரா? செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரித்ததுடன், அவருக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' பட்டம் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்தபோதும் ஆரியத்துடன் திராவிட இயக்கம் உறவு கொள்ளாமல் தான் இருந்ததா?
ஆரியம், இந்துத்துவம், இந்துத்தேசியம் ஆகியவற்றின் இரட்டைப்பிள்ளைகள் தாம் காங்கிரசும் பா.ச.க.வும். அத்திசையில் பா.ச.க. தீவிரமாகச் செயல்படும். காங்கிரசு நிதானமாக செயல்படும். இராகுல் காந்திகூட தன் பூணூலை இழுத்து காட்டி, தத்தாத்திரேய கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னை கூறிக்கொண்டார். காங்கிரசுடன், அணிசேர்ந்து கொண்டு, பா.ச.க.வின் ஆரியத்தை - இந்துத்துவாவை திராவிடர் கழகம் எதிர்ப்பதாகச் சொல்வது சரியா?
உங்களின் இந்த அரசியல் நிலைபாடு பெரியாரின் அணுகுமுறைக்கு ஒத்ததுதான். 1949க்குப் பின் தி.மு.க ஒழிப்பில் தீவிரமாக இருந்த பெரியார் 1954 முதல் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக மாறினார். காமராசர் ஆதரவு என்று அதற்கு பேர் பண்ணிக் கொண்டார். நீதிக்கட்சியிலும். திராவிட இயக்கத்திலும் மிகவும் பிரபலமாக விளங்கிய 'சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம் அவர்கள் 1957 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்சென்னையில் போட்டியிட்டார். அவரைத் தோற்கடித்து காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிப் பெற செய்வதற்காக அத்தொகுதியில் தீவிரப்பரப்புரையில் ஈடுபட்டார் பெரியார். அதே பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவைத் தோற்கடிப்பதற்காக காங்கிரசு வேட்பாளர் சீனிவாசய்யரை ஆதரித்துக் காஞ்சிக்கு சென்று தீவிரப்பரப்புரை செய்தார் பெரியார்.
தமிழ்நாட்டு மக்களால் 1967 இல் வீழ்த்தப்பட்ட காங்கிரசின் வெற்றிக்காக அத்தேர்தலில் (1967) அரும்பாடுபட்டவர் பெரியார்.
1947 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து. அதிகாரம் காங்கிரசு கைக்கு வந்தபோது பெரியார் “இது பார்ப்பன – பனியா ஆட்சி; நமக்கு பகை ஆட்சி என்றார்”. ஆனால் அந்தக் காங்கிரசின் ஆரியச் சார்பை, வடநாட்டுப் பெருமுதலாளிய (பனியா)ச் சார்பை, காங்கிரசுத் தலைமையின் வர்ணசாதி – வர்க்கச்சார்பு உள்ளடக்கத்தை காமராசர் மாற்றிவிட்டாரா? அப்படி பெரியார் கருதினால் அது சமூக அறிவியல் சார்ந்ததா அல்லது சந்தர்ப்பவாதம் சார்ந்ததா? காமராசர் அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராக கோலோச்சிய காலத்தில் தான் இந்தி திணிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் 300 பேரை இராணுவத்தையும், காவல்துறையையும் ஏவி சுட்டுக்கொன்றது. அப்போதும் பெரியார் காங்கிரசைத் தான் ஆதரித்தார்.
ஆசிரியர் அவர்களே, இவற்றையெல்லாம் குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக நான் குறிப்பிடவில்லை. நடந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். நடப்பவை சரியானவையாக மாறட்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன்.
ஆய்வாளர் அரண் கட்டுரையில், தமிழ்நாட்டில் ஆரியப் பிராமணியம் அன்றாடம் நடத்தும் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அடுக்கியவற்றை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அவற்றையெல்லாம் பெரியார் கைத்தடியால் மட்டுமே தடுக்க முடியும் என்று அரண் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. ஆரியப்படையை விரட்டியடித்ததை சிறப்பு பட்டமாகப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தமிழ்ச்சான்றோர்கள் வழங்கியுள்ளார்கள். தமிழையும் தமிழ் மன்னர்களையும், இழிவாகப் பேசிய ஆரிய மன்னர்கள் கனகன், விசயன் இருவரையும் வென்று அவர்கள் தலையில் இமயமலைக் கல்லை ஏற்றிவந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. திருவள்ளுவப் பேராசன் ஆரிய வர்ணாசிரமக் கொள்கையை எதிர்த்துப் பிறப்பால் அனைவரும் சமம் என்றார். எவ்வளவு பெரியவர் சொன்னாலும் அது சரியா என்று உன் அறிவைக் கொண்டு உரசிப்பார் என்றார்.
பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட மன்னருக்குப் பொல்லாத நோய்வரும், மக்களுக்குப் பஞ்சமும் பிணியும் ஏற்படும் என்று எச்சரித்தார் திருமூலர். சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் எனப் பிராமண ஆதிக்க எதிர்ப்பு – வேத எதிர்ப்புச் சான்றோர்கள் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
பெரியார் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியதையும், பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து பரப்புரை செய்ததையும் இன்றும் தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். அவருடைய அரசியல் நிலைபாடுகள், தமிழின மறுப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு போன்றவற்றைத்தான் எதிர்க்கிறோம்.
ஆரியப் பிராமணிய ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் இக்காலதத்தில் அவற்றைத் தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளீர்கள். மிகச்சரி! அருள் கூர்ந்து நீங்கள் “திராவிடம்” என்பதைக் கைவிட்டு பெரியார் சிந்தனைகள் பற்றிப் பேசுங்கள். தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டும் மக்கள் அனைவருக்கும் உரியது; தாய்ப்பால் போன்றது. தமிழ்த்தேசியத்துடன் இணக்கமாக இருங்கள்.
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அரண் கட்டுரையில், ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், கபடி, சில ஆன்மிக விழாக்கள் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். ஆக்கிரமித்து இந்துத்துவ மயமாக்குகிறது என்று கூறியுள்ளார். தமிழ்த்தேசியம் வளர்ந்தால் இவ்வாறான ஆரிய சூதாட்டங்கள் அரங்கேற முடியாது. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பது ஆரியத்திற்கு நேர் எதிரானது. தமிழர் ஆன்மிகமும் ஆரியத்திற்கு எதிரானது. அதனால்தான் மறைமலையடிகளார், ஞானியார் அடிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழர் ஆன்மிகச் செம்மல்கள் தமிழர் உரிமைச் சிக்கல்களில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம், பெரியாரை அயல் இனத்தார் என்று கருதுவதில்லை. அந்தக்கோணத்தில் – அவரை விமர்சிப்பதில்லை. தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் – மற்ற மொழி பேசும் மக்கள் உட்பட அனைவரும் – சம உரிமை உள்ளவர்கள் என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!
பெரியாரையும், மற்றமொழி பேசுவோரையும் விமர்சித்து வரும் இளைஞர்கள் சிலர்க்கு நாங்கள் மேற்படி அறிவுரையை வழங்கி வருகிறோம். ஆரிய – பிராமணிய இந்திய ஏகாதிபத்தியம் தான் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வருகிறது; அதன் அமைப்புகள் தாம் பா.ச.க., காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ். போன்றவை என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!
ஆசிரியர் அவர்களே அன்புகூர்ந்து எங்கள் கருத்துகளையும் எண்ணிப் பாருங்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
அது ஏன் நவம்பர் 1 1956 , இதில் வேறு ஏதேனும் சிறப்பு உள்ளதா
ReplyDelete