முற்றிவரும் பொருளியல் தேக்கம் மீள்வதற்கு வழி என்ன? கி. வெங்கட்ராமன்
முற்றிவரும் பொருளியல் தேக்கம்
மீள்வதற்கு வழி என்ன?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
அறிவிக்கப்படாத நிதித்துறை அவசர நிலையில் (Economic Emergency) இந்தியா சிக்கியுள்ளது!
வேளாண்மை நெருக்கடி, தொழில் மந்தம், நிதி முடக்கம், வேலையின்மை என்று திரும்பிய பக்கமெல்லாம் இந்தியப் பொருளியல் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
எல்லாம் சரியாக இருப்பதுபோல் தலைமையமைச்சர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு வாய்வீரம் பேசினாலும், இந்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் இராசீவ்குமார் “கடந்த 70 ஆண்டில் சந்திக்காத பொருளியல் மந்தத்தில் நாடு சிக்கியிருக்கிறது. இதய நோய்க்கு பாராசிட்டமால் மாத்திரை பயன்படாது” என அபாய அறிவிப்பு கொடுத்து விட்டார்.
வங்கிக் கொள்ளை போல் இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் நிதியிலிருந்து வரலாறு காணாத அளவில் 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை “எடுத்துக் கொண்டாலும்” கொள்கை மாறாமல் மீள முடியுமா என்ற பெரும் சிக்கலில் மோடி அரசு சிக்கியிருக்கிறது.
சேம வங்கியின் உபரி நிதி என்பது அரசு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத அரசு நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கும்போது அவற்றை மீட்பதற்கான நிதி சேமிப்பாகும்.
கடந்த முறை மோடி ஆட்சியில் பெரும் நிறுவனங்களிடமிருந்து வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்று கூறிய காரணத்திற்காக அன்றைய சேம வங்கி ஆளுநர் இரகுராம்ராஜன் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். மோடிக்கு வேண்டிய கையடக்கமான உர்சித் பட்டேல் சேம வங்கி ஆளுநராக அமர்த்தப்பட்டார்.
ஆனால், மோடி விரும்பியபடி சேம வங்கியின் நிதியை அப்படியே அள்ளித்தர உர்சித் பட்டேலும் சம்மதிக்கவில்லை. மோடி ஆட்சியின் அழுத்தம் தாங்காமல் அவரும் வெளியேறினார்.
இந்தச் சிக்கலின் ஆழத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு சேம வங்கியின் அன்றைய துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலகினார். விரால் ஆச்சார்யா இடத்தில் தனக்கு வேண்டிய என்.எஸ். விசுவநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கினார் மோடி.
சேம வங்கியின் உபரி நிதி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் சட்டப்படி, அவ்வங்கியின் நிர்வாக வாரியத்திற்கே உரியது என்றாலும், சட்டத்தை வளைக்கும் நோக்கில் உபரி நிதியைப் பற்றி முடிவு செய்வதற்கு சேம வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழுவை அமர்த்தினார் நரேந்திர மோடி. அக்குழுவில் தன் விருப்பத்தை நிறைவேற்றும் நபர்களான எஸ்.சி. கார்க், என்.எஸ். விசுவநாதன், பாரத் தோசி போன்றவர்களை உறுப்பினர்களாக போட்டார்.
மோடி ஆட்சி விரும்பிய முடிவை பிமல் ஜலான் குழு அறிவித்துவிட்டது. வாயிற்காவலரின் சம்மதத்தோடு வங்கிக் கொள்ளை நடந்து விட்டது!
ஆயினும், வந்திருக்கிற பொருளியல் நெருக்கடியை இந்த நடவடிக்கை தீர்த்துவிடுமா என்பது மிகவும் ஐயத்திற்குரியது!
ஏனெனில், பொருளியலின் அனைத்துத் துறை சார்ந்தும், வரலாறு காணாத மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமெரிக்க நாட்டில் திடீரென்று பெரும் பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஓட்டாண்டிகளாக மாறிய 2008 - 2009 நிதி நெருக்கடி மேற்குலக நாடுகளையும் அவற்றைச் சார்ந்த உலக நாடுகள் பலவற்றையும் பாதித்தன. இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை!
இதற்கு முதன்மைக் காரணம் இந்தியா பெரிதும் சிறு நடுத்தர தொழில்களையும் சிறு வணிகத்தையும் வேளாண்மையையும் சார்ந்து இயங்கியதே ஆகும்!
மேற்குலக நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே அப்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களிடமிருந்து திரும்ப வர வேண்டிய வங்கிக் கடன்கள், வாராக் கடன்களாக பெருமளவு மாறின. அரசு நிதியை வங்கிகளுக்கு மீட்பு நிதியாக மோடி ஆட்சி அப்போது வாரி வழங்கியது.
அதற்குப் பிறகும் வாராக் கடன்கள் அதிகரித்தன. மல்லையாக்கள், நீரவ் மோடிகள் என்று அடுத்தடுத்து நரேந்திர மோடிக்கு வேண்டியவர்கள் நாட்டைவிட்டுப் பறந்தார்கள்.
இந்த நிலையில்தான், 2016 நவம்பரில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அடாவடி அறிவிப்பை மோடி வெளியிட்டார். கருப்புப் பணத்தை வெளியில் கொணர்வது என்று ஊடகங்களில் அறிவித்தாலும், மோடியின் உண்மையான நோக்கம் நொடித்து வீழ இருந்த வங்கிகளுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து வழங்குவதுதான்!
இந்தியப் பொருளியல் வரலாறு காணாத கொடுஞ்செயலாக அது அமைந்தது! வேளாண்மையும், சிறு தொழில்களும், சிறு வணிகமும் அதல பாதாளத்தில் விழுந்தன. இது நிகழ்ந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னும் பெரும்பாலான சிறு தொழில்கள் இன்னும் மீள முடியவில்லை. வேளாண்மை தலைதூக்க முடியவில்லை.
மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி கட்டாயமாக மக்களை வங்கிகளோடு பிணைத்து, அந்த நிதியை எடுத்து பெரும் நிறுவனங்களுக்கு கடனாக அளித்தபோது சிறிதளவு தொழில்துறை முன்னேற்றம் ஏற்பட்டாலும் மீண்டும் வாராக்கடன்கள் அதிகரித்தன.
கடந்த 2018 - 19 -இல் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்த பின்னும், 2019 - 20 -நிதி ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் பெருத்துவிட்டன. மொத்தத்தில், இந்திய அரசு வங்கிகளின் வாராக் கடன்கள் எட்டு இலட்சம் கோடியாக உயர்ந்துவிட்டன.
இச்சூழலில், நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது பெருமளவு நின்று போனது.
இன்னொருபுறம், செல்லா நோட்டு அறிவிப்பால் சிறு தொழில்கள் வீழ்ந்து, வெளிப்படையான வேலையின்மை அதிகரித்ததோடு வேளாண்மையும் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கிவிட்டதால் உள்நாட்டுச் சந்தை பெருமளவு சுருங்கி விட்டது.
இவை பெரும் தொழில் நிறுவனங்களை பாதித்தது. “எல்லோரும் வாருங்கள், இந்தியாவில் தொழில் தொடங்குங்கள்! எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள்!” என்ற மோடியின் “மேக் இன் இந்தியா” அறிவிப்பு பலன் தரவில்லை. ஏனெனில், வெளிநாட்டுச் சந்தையும் விரிவடையவில்லை. அங்கேயும் ஆயிரம் சிக்கல்கள்!
இதனால் ஏற்பட்ட கொலைக்களப் போட்டியில் அம்பானி, அதானி போன்ற மோடிக்கு நெருக்கமான புள்ளிகள் மட்டுமே வெற்றிகரமாக தொழில் செய்ய முடிந்தது. அதற்கான விலையாக மோடி பல்லாயிரம் கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, பா.ச.க.வையும் தன்னையும் மக்களிடம் சந்தைப்படுத்திக் கொண்டார்.
இந்திய சேம வங்கி ஒரே ஆண்டில் நான்கு முறை வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தாலும், அந்தக் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்வதற்கு பெரு நிறுவனங்கள் தயங்கின. ஏனெனில், மிகப்பெரும் தேக்கத்தில் உள்நாட்டுச் சந்தையும், வெளிநாட்டுச் சந்தையும் ஆழ்ந்துவிட்டதை இந்நிறுவனங்கள் உணர்ந்தன.
வட்டி விகிதக் குறைப்பு தொழில் கடன்களை அதிகப்படுத்துவதற்கு மாறாக, வங்கிகளில் சேமிப்போரை தங்கத்தை நோக்கி விரட்டியது. வங்கிகள் நெருக்கடியில் சிக்கின. இதிலிருந்து மீள்வதற்கு அரசு வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. அதுவும், எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை!
இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சுமையுந்துகள், உழவு உந்துகள் தயாரிக்கும் தானியங்கி ஊர்தித் தொழில் மட்டுமின்றி, மனை வணிகம், கட்டட வணிகம் போன்றவையும் மக்களின் அன்றாட தேவையைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நெருக்கடியில் ஆழ்ந்தன.
ஒரு ஐந்து ரூபாய் பிஸ்கட் பொட்டலத்தை வாங்குவதற்கு மக்கள் பலமுறை சிந்திக்கிறார்கள் என்று பிரித்தானியா நிறுவனம் அறிவித்திருப்பதும், ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப் போடுகிறார்கள் என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் புலம்புவதும் தொழில் தேக்கத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும்.
இச்சூழலில், அரசு நிதியை வங்கிகளுக்கு வழங்கி கடன் நிதிப் புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கும் வழியில்லை. ஏனெனில், அன்றாடச் செலவுக்கே இந்திய அரசு கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் மோடி அரசு முன்வைத்த வரவு செலவுக் கணக்கில், மொத்த வரவு செலவு 24 இலட்சம் கோடி ரூபாய் என்றால், அதில் கடன் வரவு மட்டுமே 12 இலட்சம் கோடி ரூபாய்! ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியே 6 இலட்சம் கோடி ரூபாய்.
இப்போது, சேம வங்கியிடமிருந்து பறித்த 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் அன்றாடச் செலவுக்கு மூச்சுவிட பயன்படுமே தவிர பொருளியல் மந்தத்திலிருந்து மீட்பதற்கு உதவாது.
பெரு நிறுவனங்களையும் வெளிநாட்டுச் சந்தையையும் சார்ந்திருக்கும் இப்போதைய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, சிறு நடுத்தர தொழில்களையும், வேளாண்மையையும் உள்நாட்டுச் சந்தையையும் பெரிதும் சார்ந்திருக்கும் மாற்றுக் கொள்கைக்கு மாறினாலே தவிர நிரந்தரத் தீர்வு ஏதுமில்லை!
உழவர்களுக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் கடன் தள்ளுபடி அளித்து, குறைந்த வட்டியில் புதிய கடன்களை வழங்கி இவற்றின் சந்தையை உறுதிப்படுத்தினால் மீள முடியும்! வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானித்து அந்தந்த மாநிலத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக மாற்றுவது மிகப்பெருமளவுக்கு சந்தை மீட்சியைக் கொடுக்கும்.
பொருளியல் வகையில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளின் ஒற்றைச் சந்தையால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்தை வைத்துக் கொண்டு, இவற்றிற்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது.
இந்தியத்தை வைத்துக் கொண்டே, இப்போது ஏற்பட்டுள்ள மிக ஆழமான தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்குத்தான் மோடி ஆட்சி முயலும். அதற்காக மக்களையும், தேசிய இன மாநிலங்களையும் சுரண்டும் அதே பழைய பாதையிலேயே சிந்திக்கும்.
இதில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்த இந்திய ஒற்றைச் சந்தைப் பார்வையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். தமிழ்த்தேசியச் சந்தையை பாதுகாத்துக் கொள்ளும், தற்காப்புப் பாதைக்குத் திரும்ப வேண்டும்!
(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - தமிழ்த்தேசிய மாத இதழின் 2019 செப்டம்பர் இதழின் தலையங்கம்).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment