ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!
இன்று (05.08.2019) சம்மு காசுமீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பை, முற்பகல் உள்துறை அமைச்சர் அமீத்சா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் சம்மு – காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல, சம்மு – காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது!

சம்மு காசுமீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பா.ச.க. ஆட்சி நிகழ்த்தியுள்ள சனநாயகப் படுகொலையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, சம்மு காசுமீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, சம்மு காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கித்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாக்கித்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாக்கித்தானில் உள்ள “ஆசாத் காசுமீர்”. காசுமீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாக்கித்தான் படைகளும் மோதிக் கொண்டன.

அந்த நேரத்தில், காசுமீர் மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அரிசிங் அந்த ஒப்பந்தத்தில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த சம்மு காசுமீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.

அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் சவகர்லால் நேரு, “சம்மு காசுமீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காசுமீர் யாருடன் இருப்பது என்பதை காசுமீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாக்கித்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகத்து 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேருவும், பாக்கித்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காசுமீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாக்கித்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி சம்மு காசுமீரிலும், ஆசாத் காசுமீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்து சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

சம்மு காசுமீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காசுமீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. சம்மு காசுமீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.

இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் சம்மு காசுமீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் சம்மு காசுமீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை!

இவற்றையும் இன்னபிற காசுமீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பா.ச.க அரசு பறித்துவிட்டது.

சம்மு காசுமீரை இரண்டு மாநிலங்களாக்கி - யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் சம்மு காசுமீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!

சம்மு காசுமீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் சனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.

காசுமீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். காசுமீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது!

பதவி ஆசையற்ற இலட்சியத் தமிழ்த்தேசியத்தின்பால் இலட்சோப இலட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் - சனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளை காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.