பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி காஞ்சி சங்கராச்சாரியார் விழாவில்! பெ. மணியரசன், அறிக்கை!
பிரம்ம சிறீ மணி திராவிட சாத்திரி
காஞ்சி சங்கராச்சாரியார் விழாவில்!
தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
சென்னை வீனஸ் காலனியில் உள்ள ஆத்திக சமாசத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விசயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையில் கடந்த 7, 8, 9 செப்டம்பர் 2019 நாட்களில் அத்வைத சபா மற்றும் அக்னி கோத்திரி சம்மேளனம் ஒன்று கூடல் நடந்துள்ளது. இதில் அத்வைதம், அக்கினி கோத்திரம் முதலியவற்றில் விற்பன்னர்களாக உள்ள பிராமணர்கள் கலந்து கொண்டார்கள்.
சாத்திரி வகுப்பில் இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற 5 பேர்க்குக் கடைசி நாளில் விசயேந்திரர் பரிசுகளும் பணமும் கொடுத்தார். அந்த ஐந்து பேர் பெயர்களும் அவர்களின் குருமார்களின் பெயர்களும் ஆங்கில “இந்து” 13.09.2019 - இதழ் பின் இணைப்பில் 6ஆம் பக்கம் வந்துள்ளது. முழுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு – “அறுபதாண்டுகளுக்குப் பின் ஆற்றில்மிகு ஒன்று கூடல்” (A Mighty Confluence after 60 years).
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் பணமும் பரிசும் பாராட்டும் பெற்ற ஐந்து பிராமணர்களில் ஒருவர் – “அத்வைத வேதாந்த இரத்தினம் சிறீ குப்பா சிறீ குரு பில்வேசு சர்மா”. இவருக்குப் பாடம் சொன்ன குரு – “பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி” (Guru : Brahmasri Mani Dravida Sastry) என்று போடப்பட்டுள்ளது.
தமிழர் என்றால் பிராமணர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள், திராவிடர் என்றால் பிராமணர்கள் வர மாட்டார்கள் – அவர்களை ஒதுக்கி வைக்கும் திராவிடப் பெயரில்தான் இயங்க வேண்டுமென்று கூறும் திராவிடவாதிகள் இனியாவது மறு சிந்தனை செய்யுங்கள்!
பெயருக்குப் பின்னால் திராவிடப் பட்டம் போட்டுக் கொள்ளும் மரபு பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. தமிழர்களுக்கு அப்படிப்பட்ட மரபு கிடையாது.
திராவிடப் பெயரில் பல பிராமண சங்கங்கள் வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. திராவிட பிராமண மணமக்கள் வரன் தேடும் “திராவிட பிராமின் மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றையெல்லாம் பார்த்தாவது திருந்துங்கள்!
தமிழர்களே, திராவிட மாயையில் சிக்கி உங்கள் சொந்த இனத்திற்கு இரண்டகம் செய்யாதீர்கள்!
தாய்ப்பாலைப் புட்டிப்பால் என்று கூறாதீர்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment