ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புதுதில்லியில் காசுமீர் உரிமைக்காக நடக்கும் ஒன்று கூடலில் ஐயா கி. வெங்கட்ராமன் பங்கேற்பு!

புதுதில்லியில் காசுமீர் உரிமைக்காக நடக்கும் ஒன்று கூடலில் ஐயா கி. வெங்கட்ராமன் பங்கேற்பு!

காசுமீரி தேசிய இனத் தாயகமான காசுமீரை சிதைத்து, காசுமீர் மக்களை அவர்களது சொந்த தாயகத்திலேயே இந்திய இராணுவத்தின் மூலம் சிறைபிடித்து வைத்துள்ள இந்திய அரசைக் கண்டித்து நாளை - 2019 செப்டம்பர் 26 அன்று புதுதில்லியில் நடைபெறும் ஒன்றுகூடலில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்கிறார்.

வரும் 2019 செப்டம்பர் 27 அன்று, வட அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. பொது அவையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள நிலையில், அதன் வாயிலில் அமெரிக்காவில் வாழும் சீக்கிய, தமிழ் மற்றும் காசுமீரி மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவாக, புதுதில்லியில் செப்டம்பர் 26 அன்று காசுமீரி மக்களுக்கு நீதி கேட்டு இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களின் உரிமைக்காகப் போராடி வரும் “தல் கல்சா”, “சிரோன்மணி அகாலி தளம்” (அமிர்தசரஸ்), நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கூட்டாக ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வு, நாளை (26.09.2019) காலை 10 மணிக்கு புதுதில்லியிலுள்ள ஜந்தர் மந்திரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டமாக நடைபெறுகின்றது.

அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவர் திரு. சிம்ரஞ்சித் சிங் மாண், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி மற்றும் ஒருங்கிணைந்த அகாலி தளம் (United Akali Dal - UAD), சமூகத்திற்கான மாணவர்கள் (Students for Society), பஞ்சாப் சீக்கிய இளைஞர்கள் (Sikh Youth of Punjab), அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழு (Committee for the Release of Political Prisoners) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

நிகழ்வில், புதுதில்லி வாழ் தமிழர்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்று காசுமீரி மக்களுக்காகக் குரல் கொடுக்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.