ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!


“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1 :

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி ஆகிய வாழ்வுரிமைகள் கிடைக்காமல் செய்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும் பறித்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி, படைக்கலத் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், வருமான வரி, ஜி.எஸ்.டி. வரி, கணக்காயர் அலுவலகம், அஞ்சலகம், வங்கிகள் போன்ற பல்வேறு அலுவலகங்கள், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றில் 100க்கு 90 விழுக்காடும், சிலவற்றில் 100 விழுக்காடும் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவர்களையுமே இந்திய அரசு வேலையில் சேர்க்கிறது.

இவ்வேலைகளுக்கான தேர்வுகள் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் திட்டமிட்டு நயவஞ்சகமாகவும், ஊழல் நிறைந்ததாகவும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எல்லா துறைக்கும் தேவையான கல்வி கற்று வேலை இல்லாமல் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர் என்று அரசுப் பதிவுகள் கூறுகின்றன. வெளியார் குவிகின்ற இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் வேலையற்ற அகதிகளாக - அயலாரை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும்.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதேபோன்று சட்டத்தை இயற்றுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு அனைத்து இந்தியாவில் இருந்தும் வந்து தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை எழுதுமாறு தொடர்ந்து அழைத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென்ற பேரியக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தனியார் துறையிலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், வெள்ளம் போல் வந்து குவியும் வெளி மாநிலத்தவரைத் தடுக்கவும் – “வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்” என்று வேண்டுகோள் முழங்கி – சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தில் வரும் 20.12.2019 அன்று காலை 10 மணிக்கு – மனிதச் சுவர் அமைத்து அறப்போராட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழர் வாழ்வுரிமைக் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் அணிதிரளுமாறு அன்புடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது!

தீர்மானம் – 2

தமிழர் வரலாற்றை சிதைக்கும் தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியரசனைப் பதவி நீக்கம் செய்க!

தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் கீழடி தமிழர் நாகரிகத்தை “பாரத நாகரிகம்” என்று கூறி, தமிழர் வரலாற்றைத் திரிக்கும் கருத்துகளை அண்மையில் கூறினார். இது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலாகும்!

ஏற்கெனவே மதுரையில் தமிழன்னை சிலை எழுப்புவதற்கான பன்னாட்டு ஏல அறிக்கை வெளியிட்டதில், சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு என்பது வேதகால பிராமணப் பண்பாடு கலந்தது என்றும், அதையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழன்னை சிலை அமைய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.

தமிழன்னை பெயரில் சமற்கிருத மாதா சிலை எழுப்பும் திட்டத்தை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மதுரையில் நடத்திய கண்டனப் போராட்டத்தின் விளைவாக தமிழன்னை சிலையில் நடைபெறவிருந்த திரிபு வேலையை தடுத்து நிறுத்தினோம்.

நடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பின் புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், சமற்கிருதம் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் தவறாக எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரையிலும் சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது, வேதகால பிராமணப் பண்பாடும், இந்துப் பண்பாடும் கலந்திருந்தது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையாசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2015ஆம் ஆண்டு, பா.ச.க. அரசு “பத்மசிறீ” விருது கொடுத்து சிறப்பித்தது. இதுவரை இல்லாத வரையில் தமிழர்களின் சங்ககாலப் பண்பாட்டை வேத பிராமணப் பண்பாட்டுடன் இணைந்தது என்ற கூற்றை திரும்பத் திரும்ப சொல்வது அண்மையில்தான் அதிகரித்துள்ளது.

கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்பதும், திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் வரலாற்றையும் தனித்தன்மையுள்ள பெருமிதங்களையும் மறைத்து ஆரியத்துவப் பண்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாக மாற்றும் கொடுஞ்செயலாகும்!

தமிழ்த்துறைக்கென்று உள்ள அமைச்சர் பாண்டியராசன் கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று குறிப்பிட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழை மறைக்க – தமிழர் நாகரிகத்தை மறைக்கக் கூறிய கருத்தாகும்! எனவே, தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

ஏழு தமிழர் விடுதலை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள் – பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட்பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓராண்டு கடந்தும் அவ்வறிக்கையை ஏற்று கையொப்பமிடாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார்.

அண்மையில் “இந்து” ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மேற்படி அறிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்றும், கையொப்பமிட முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆளுநர் கூறிவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)–இன்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொருளில், மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுவது ஆளுநரின் சட்டப்படியான கடமையாகும். இதுகுறித்து, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன. 1999இல் நளினியின் சாவுத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து அப்போதுள்ள தி.மு.க. அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்க மறுத்தார் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி.

அதுமட்டுமின்றி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை மறுப்பதற்கோ அல்லது தானே சொந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டுமென்று ஆணையிடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அதன்பின்னர், மாநில அரசின் பரிந்துரைப்படி நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் விசாரித்து, கடந்த 2018 ஆகத்தில் அளித்த தீர்ப்பிலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்கின்ற அதிகாரம் 161-இன் கீழ் தங்கு தடையின்றி மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட விரோதமாகச் செயல்படுகிறார். அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக – இனப்பாகுபாடு காட்டி ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்து வருவதால், அதே நிலைபாட்டை எடுத்துள்ள பன்வாரிலால் புரோகித்தை ஆதரிக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் பதில் அளிக்கவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் செயல் மட்டுமல்ல, ஆளுநரின் சட்ட விரோதச் செயலுக்குத் துணை போகும் செயலும் ஆகும்.

மாநில அரசு அனுப்பும் பரிந்துரை / அறிக்கை ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது என்பதை வெளிப்படுத்த சட்டத்தில் காலவரம்பு கோரப்படவில்லை. எனவே, அவர் இறுதிவரை ஒரு அறிக்கையை அல்லது பரிந்துரையை கிடப்பில் போட்டு சாகடித்து விடலாம் என்று புரிந்து கொள்வதோ வாதம் செய்வதோ மிகமிகத் தவறானது. ஆளுநரின் விருப்பத் தேர்வு என்பது சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமைய வேண்டும். தமது சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப பாகுபாடு காட்டி முடிவெடுக்க ஆளுநருக்கு சட்ட அனுமதி இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில் ஆளுநரின் விருப்பத் தேர்வுக்குள்ள வரம்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு மேல் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், மறுபடியும் ஏழு தமிழர் விடுதலையை அமைச்சரவையின் தீர்மானமாக்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கும் ஆளுநர் செயல்பட மறுத்தால், அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

தமிழ்நாடு அமைந்த நவம்பர் – 1 விழாவை அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொண்டாட வேண்டும்!

கடந்த 1956 நவம்பர் 1 அன்று, தமிழர்களின் தாயகமாக “தமிழ்நாடு” மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது, அண்டை மாநிலங்களிடம் ஏராளமான தமிழ்நாட்டின் பகுதிகளை இழந்துள்ளோம். அத்துயரம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழர்களுக்கான மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதற்கான “தமிழ்நாடு நாள்” விழாவை தமிழ்நாடு அரசு நடத்தும் என அண்மையில் அறிவித்துள்ளது.

அவ்விழாவை தமிழ் அறிஞர்களின் உரைகள், கவிதைகள், பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக எல்லா மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும். அவ்விழாக்களில் தமிழ்நாடு எல்லைகளை மீட்கப் போராடிய பெருமக்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து, அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்றும், எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.