ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள
மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை
முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழர்களின் பாரம்பரிய நகைத் தொழிலை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) நடத்தியது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அப்போதைய தஞ்சை மாவட்டச் செயலாளரும், தற்போதைய தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் பழ. இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில், பெண்களும் ஆண்களுமான நூற்றுக்கணக்கானோர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
திடீரென நடத்தாமல், ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டு - பரப்புரை நடத்தி, திட்டமிட்ட முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, தஞ்சை ஆலுக்காஸ் நகை மாளிகைக்கு குறிப்பிடத்தக்க எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், போராட்டத் தோழர்கள் 120 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147, 143, 188 மற்றும் தனியார் சொத்து அழிப்பு மற்றும் சேதப் பிரிவு - 3(1) ஆகிய பிரிவுகளின்கீழ் பிணையில் வர முடியாதபடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, 120 தோழர்களும் திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பிணையில் வெளி வந்தனர்.
தஞ்சை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், பேரியக்கப் பொறுப்பாளர்கள் பழ. இராசேந்திரன், இராசு. முனியாண்டி, இலெ. இராமசாமி, செந்திறல், தெ. காசிநாதன், ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் போராட்டக் குழுவினர் சார்பில் வழக்கை எதிர்கொண்டு, நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றனர். பேரியக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான தோழர் இரெ. சிவராசு வழக்கைத் திறம்பட நடத்தி வாதாடினார்.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று (31.10.2019) பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி கருணாநிதி வழக்கின் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படாததால் வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
விடுதலையான தோழர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் கைப்பேசி வழியே வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
தமிழின உரிமைக்காக சிறை சென்றதோடு - வழக்கை எதிர்கொண்டு விடுதலையான தோழர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.