ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வர்ணாசிரம ஆன்மிகத்தை வழிமறிக்கும் ஆசீவக ஆன்மிகம்! பெ. மணியரசன்


வர்ணாசிரம ஆன்மிகத்தை
வழிமறிக்கும் ஆசீவக ஆன்மிகம்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 28.09.2019 அன்று சென்னையில் நடைபெற்ற “ஆசீவகம்” (சமய சமூக இயக்கம்) அமைப்பின் ஐந்தாமாண்டு தொடக்க விழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி :

“ஆசீவகம்” (சமய சமூக இயக்கம்) அமைப்பின் ஐந்தாமாண்டு தொடக்க விழா – 2050 புரட்டாசி – 11 (28.09.2019) அன்று சென்னை வடபழனியில் நடைபெறுவது குறித்த அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி! நன்றி!

தமிழர்களின் மிகத் தொன்மையான மெய்யியல் ஆசீவகம்! இயற்கை குறித்தும், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் மனிதர்களுக்கிடையே உள்ள உறவு குறித்தும் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அச்சிந்தனைதான் மெய்யியலாக வளர்ந்தது.

அவ்வாறு வளர்ந்த தமிழர் மெய்யியல் பிரிவுகளில் ஆசீவகம் மிகவும் பழைமையானது என்பர் அறிஞர் பெருமக்கள்! பக்குடுக்கை நன்கணியார், மற்கலி, பூரணர் ஆகிய மூவரும் ஆசீவகத்தின் மூல ஆசான்கள். அறிஞர் குணா, பேராசிரியர் க. நெடுஞ்செழியன் ஆகியோர் ஆசீவகம் பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார்கள்.

இப்பேரண்டம் அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள் எப்போதும் இருக்கின்றன. இவை புதிதாகத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை! இந்த அணுக்களின் திரட்சியும், பிரிவும் பற்பல பொருட்கள் ஆகின்றன. அடிப்படையான நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகியவை தனித்தனி அணுக்கள் வகையினால் ஆனவை என்கிறது ஆசீவகம்!

கிரேக்கத்தில் டெமாகிரீடஸ் என்ற மெய்யியலாளர் அணுக் கொள்கையாளர். அணுக்களின் சேர்க்கை மற்றும் பிரிவுகளே பேரண்டப் பொருட்கள் – உயிரினங்கள் என்றார். அவருக்குத் தன் முடிவுகளில் முழு நிறைவு இல்லை. அறிவைத் தேடி வெளிநாடுகளுக்குப் போனார். இந்தியாவுக்கும் வந்தார் என்கிறார்கள்.

“தான் திரட்டியிருக்கின்ற அறிவைப் பற்றி அவருக்கு எப்பொழுதும் அதிருப்தியே. அவர் வடிவ கணிதத்தைக் கற்பதற்காக எகிப்துக்கும் பாரசீகத்தில் உள்ள ஹால்டியர்களுக்கும் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்று யோகிகளிடமிருந்து அறிவைச் சேகரித்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள்” (நூல் : மார்க்ஸ் பிறந்தார், ஹென்ரி வோல்கவ், தமிழில் – நா. தர்மராஜன், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, பக்கம் 166).

“இந்தியா” என்று அப்போது நாடில்லை. இப்போதுள்ள இந்திய நிலப்பரப்பில் உள்ள ஏதோவொரு நாட்டிற்கு டெமாக்ரீட்டஸ் வந்திருக்கலாம். அவரது காலம் கி.மு. 460 – 370. இக்காலத்தில் தமிழ்நாட்டில்தான் அணுக்கோட்பாடு – ஆசீவகர்களால் செல்வாக்குப் பெற்றிருந்தது.

பேரண்டத்தின் இயக்கம் – செயல்பாடுகள் பற்றி ஆசீவக அணுக் கோட்பாட்டாளர்கள் அறிவியல் ஆய்வுடன் சிந்தித்துள்ளார்கள்.

கீழடி அகழ்வாய்வில் கடவுள் சிலைகளோ, வழிபாட்டுப் பொருட்களோ கிடைக்கவில்லை என்கிறார்கள். அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஆசீவக மெய்யியல் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். அதனால் சிலை வடிவக் கடவுள் வழிபாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.

தமிழர்களின் தொன்மையான – அறிவியல் வழிப்பட்ட ஆன்மிகச் சிந்தனையான ஆசீவகத்தின் பெயரில் அமைப்பு நடத்தும் பெருமக்கள், இளந்தலைமுறைத் தமிழர்களிடம் தமிழினத்தின் மரபுப் பெருமிதங்களைக் கொண்டு சேருங்கள்! தமிழினம் பழங்காலத்திலிருந்தே அறிவுச் சமூகமாக இருந்தது என்பதற்கான மெய்யியல் சான்றே ஆசீவகம். அதேபோல், வீரச் சமூகமாக – அறநெறி போற்றும் சமூகமாக இருந்தது என்பதற்கும் ஐயனார் போன்ற வீரர்களும், பக்குடுக்கை நன்கணியார் பாடலும் மற்கலி, பூரணர் கருத்துகளும் சான்றுகளாகும்.

ஆன்மிக முகமூடியுடன் வரும் ஆரிய – பிராமண – சமற்கிருத – இந்தி ஆதிக்க அரசியலை எதிர்கொள்ளும் களத்தில் தமிழர்களின் மெய்யியல் வாளாக ஆசீவகத்தைக் களமிறக்கிடுங்கள்! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!”

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.