ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா? சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை பெ. மணியரசன்!


தி.மு.க.வும் தி.க.வும்
இந்திய எதிர்ப்புக் கட்சிகளா?

சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


என்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “ராஜீவ் மல்கோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கியமான சில கருத்துகளுக்கு என்னுடைய மறுமொழி வருமாறு :
“பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று இவாள் பேசுவார்கள். அதாவது இதுவொரு கத்திரிக்கோல் உத்தி” என்று எழுதியுள்ளார் பேரா. சுப.வீ.
இதில், “அவாள்” என்பது பிராமணர்களையும், “இவாள்” என்பது தமிழ்த்தேசியர்களையும் குறிக்கிறது.
தி.க.வினரை காங்கிரசில் சேரச் சொன்னார் பெரியார்
-----------------------------------------------------------------------------------
பிராமணர்களுக்கும் இந்தியாவிற்கும் திராவிட இயக்கம் நிரந்தரமாக – எதிராகச் செயல்படுவதாக சுப.வீ. கூறுகிறார். 1957 பொதுத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவைத் தோற்கடித்து காங்கிரசின் சீனிவாச ஐயரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை செய்த பெரியார், அண்ணாவை “வேசிமகன்” எனத் திட்டினாரே, அப்போது கூட பிராமணர் எதிர்ப்பில்தான் பெரியார் பரப்புரை செய்தாரா?

அதே 1957ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட நீதிக்கட்சியின் முக்கிய சிந்தனையாளர்களில் – செயல்பாட்டாளர்களில் ஒருவராய் இருந்த “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தோற்கடித்து, காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களை வெற்றிபெறச் செய்ய பெரியார் பரப்புரையில் ஈடுபட்டாரே, அப்போதும் பிராமண எதிர்ப்புக்காகத்தான் அதைச் செய்தாரா?
“திராவிடர் கழகச் சார்புடையவர்கள் ஆனாலும் சரி, தி.க. ஆதரவாளர்கள் ஆனாலும் சரி; அவர்கள் காங்கிரசில் சேர்ந்து தொண்டாற்ற ஆசைப்படுவார்களானால் தாராளமாக அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்” என்றார் பெரியார். (விடுதலை, 18.08.1961). அனைத்திந்திய ஆட்சியையும் தமிழ்நாட்டு ஆட்சியையும் அப்போது காங்கிரசுதான் வைத்திருந்தது. அப்போது, அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி. அப்போது தலைமையமைச்சர் காசுமீர் பிராமணரான பண்டித நேரு! இதுதான் திராவிட இயக்கத்தின் இந்திய எதிர்ப்பா? பிராமணர் எதிர்ப்பா?
1965இல் இந்தி எதிர்ப்பு மாணவர்களை
சுட்டுக் கொல்லச் சொன்னார் பெரியார்
-------------------------------------------------------------
இந்திய அரசு இந்தியைத் திணித்தபோது, தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மாணவர்களிடம் உருவாக்கியதில் தி.மு.க.விற்கு முக்கியப் பங்குண்டு. அந்த மாணவர் போராட்டம் தமிழர்களின் மக்கள் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையையும், இந்திய இராணுவத்தையும் மத்திய மாநில காங்கிரசு ஆட்சிகள் ஏவிவிட்டன. நானூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, பெரியார் விட்ட அறிக்கையை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

“தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்? பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு, எல்லா மக்களும் 'இந்தி' 'இந்தி' என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகக் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” - பெரியார். (சான்று : 1965 மே 28 முதல் 30 வரை பெரியாரின் அறிக்கைகளையும், உரைகளையும் தொகுத்து வந்துள்ள “கிளர்ச்சிக்குத் தயாராவோம்” நூல், பக்கம் 6, 10, 14, 15).
தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக - இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பெரியாரின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிரானதா? தமிழ்நாட்டிற்கு எதிரானதா? திராவிடத் “தத்துவ”த்தில் இதற்கு விடை உண்டா?
இந்தித் திணிப்பை அப்போது எதிர்த்த தி.மு.க. திராவிடக் கட்சியா? இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுக் கொன்ற பெரியாரின் தி.க. திராவிடக் கட்சியா? சுப.வீ. சொன்ன உவமையை இங்கு பொருத்தலாம் – தி.க.வும், தி.மு.க.வும் கத்தரிக்கோல் போல், எதிரெதிராக இயங்கி இணைந்து செயல்பட்டிருப்பார்களோ?
பெரியாரின் தி.மு.க. எதிர்ப்பும் திராவிடக்கொள்கை தானா?
1957 தேர்தலிலிருந்து 1967 தேர்தல் வரை அண்ணாவையும், தி.மு.க.வையும் வீழ்த்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்ய கடும் பரப்புரையும், களப்பணியும் ஆற்றிய பெரியாரும் திராவிடர் கழகத்தினரும் திராவிடவாதிகளா? இந்தியத்தேசியவாதிகளா? திராவிடர் கழகத்தின் – பெரியாரின் முதல் எதிரிகளாக அவர்களால் கருதப்பட்ட தி.மு.க.வினர் திராவிடவாதிகளா? இல்லையா? பேராசிரியர்தான் ஆய்வுரை வழங்க வேண்டும்.

“அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு!” என்று முழங்கிய அண்ணா அவர்கள், 1963ஆம் ஆண்டு தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்போது, “எல்லையில் சீனப் படையெடுப்பு! வீடு இருந்தால்தான் ஓடு மாற்றிக் கொள்ளலாம்; இந்தியா இருந்தால்தான் திராவிடநாடு அடைய முடியும்” என்று சொல்லி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டாரே, அப்போது அண்ணா இந்திய ஆதரவாளராக இருந்தாரா? எதிர்ப்பாளராக இருந்தாரா? இந்தியாவைத் தன் வீடாகக் கருதினார் அண்ணா! அதுதான் இந்திய எதிர்ப்பா?
தி.மு.க. – காங்கிரசு, பா.ச.க.
கூட்டணிகள் திராவிட உறவுதானா?
---------------------------------------------------------
1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டணி சேர்ந்தார். 1975 நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்குப் பின் 1976 சனவரி 31-இல் முதலமைச்சர் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. 1980 மக்களவைத் தேர்தலில் அதே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கலைஞர் கருணாநிதி, “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று முழக்கம் விடுத்து மீண்டும் கூட்டணி சேர்ந்தார். அப்போது கலைஞர் இந்திய ஆதரவாளராக இருந்தாரா? இந்திய எதிர்ப்பாளராக இருந்தாரா?

1999இலிருந்து 2003 வரை பா.ச.க. தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. பதவி வகித்தது. அப்போதும் தி.மு.க. இந்திய எதிர்ப்பாளராக, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பாளராக, இந்துத்துவா எதிர்ப்பாளராகத்தான் இருந்ததா?
சுப.வீ. போன்ற தி.மு.க.வின் தீவிரப் பரப்புரையாளர்கள் திராவிடத்தின் இந்துத்துவா எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், “இனிமேல் பா.ச.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேராது” என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுமாறு கோருவார்களா? அவ்வாறு அறிக்கை வெளியிடச் செய்வார்களா?
மாநிலக்கொடியில் கருணாநிதியின் சரணாகதி
--------------------------------------------------------------------------
1970களில் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான மாதிரிக் கொடியை வெளியிட்டார். அதில், இந்திய அரசுக் கொடியின் படத்தை மேலே போட்டு, அதற்குக் கீழே தமிழ்நாடு அரசின் கோயில் முத்திரைச் சின்னத்தைப் பொறித்திருந்தார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்திய ஆதரவாளராக இருந்தாரா, எதிர்ப்பாளராக இருந்தாரா?

அடுத்து, தான் கேட்ட தனிக்கொடி திட்டத்தை அம்போவெனக் கைவிட்டு குட்டிக்கரணம் போட்டு, இந்திய அரசுக் கொடியை இந்திய விடுதலை நாளில் ஏற்றுவதற்கு இந்தியத் தலைமையமைச்சரிடம் மனுப் போட்டு, அவர் அனுமதியைப் பெற்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மூவண்ணக்கொடி ஏற்றினார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்தியதேசியவாதியா? “மாநில சுயாட்சி” வீரரா?
கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சராக இருந்த சித்தராமையா தயாரித்த மாநிலக் கொடியில் இந்திய அரசுக் கொடி இல்லை. ஒரு காங்கிரசுத் தலைவருக்கு இருந்த இனப்பற்று, மாநிலப்பற்று, துணிச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக கலைஞர் கருணாநிதியிடம் இந்தப் பண்புகள் இல்லை!
கலைஞர் கருணாநிதி தன்னையும் தி.மு.க.வினரையும் “இனத்தால் திராவிடன்; மொழியால் தமிழன்; நாட்டால் இந்தியன்” என்று அடையாளப்படுத்தி “திராவிட சித்தாந்தப் பொன்மொழி” ஒன்றை உருவாக்கிப் பேசி வந்தாரே, அப்போதும் கலைஞர் இந்தியதேசிய எதிர்ப்பாளர் தானா?
தி.க - தி.மு.க.வின் பிராமணிய சரணாகதிப் படலம்
-------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதிக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திராவிடர் கழகம், தி.மு.க. ஆதரவு நிலையை விலக்கிக் கொண்டு செயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆதரவு நிலையை 1990களில் எடுத்தது. சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று சவால் விட்டு அறிவித்துக் கொண்ட செயலலிதா புகழ் பாடுவதையே அப்போது அன்றாட அரசியலாக்கிக் கொண்டார் ஆசிரியர் வீரமணி. புகழ்ச்சியின் உச்சமாக வல்லம் பெரியார் கல்லூரிக்கு செயலலிதாவை அழைத்து “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் அவருக்கு வழங்கினார் வீரமணி. அதுவும் பிராமணிய எதிர்ப்புதானா?

திராவிட முன்னேற்றக் கழகம் 1962-க்குப் பிறகு, இராசாசியுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1967 பொதுத்தேர்தலில் இராசாசியின் சுதந்திரா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்து தொகுதிப் பங்கீடு செய்து கொண்டது. அப்போது, தேர்தல் பரப்புரையில் பிராமணர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் இராசாசி! “பிராமணர்கள் ஒரு கையால் தங்கள் பூணூலைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார். அப்பொழுதும், திராவிடம் இந்துத்துவா எதிர்ப்பில் – பிராமண எதிர்ப்பில்தான் இருந்ததா?
திராவிடர் பற்றிய பெரியாரின்
வர்ணணை சமூக அறிவியலா?
-------------------------------------------------
“தமிழர் என்றால் தாங்களும் தமிழர் என்று பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்வார்கள். திராவிடர் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது” என்று வரலாற்றியல், மானிடயியல் அறிஞர்கள் யாரும் கூறாத ஒரு கருத்தை பெரியார் கூறினார். ஆனால், உண்மையில், ஆரிய பிராமணர்களுக்கு மட்டுமே “திராவிடர்” என்ற பெயர் உருவானது என்ற செய்தியை வரலாற்று ஏடுகளிலிருந்து நாங்கள் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

திராவிடத்தின் தந்தைமாரில் ஒருவராக விளங்கக்கூடிய கால்டுவெல் ஆரிய நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகாவிலிருந்தும் “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்று தன்னுடைய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ”திராவிட பிராமண மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) என்பதை இணையதளத்தில் தட்டினால், எத்தனை திராவிட பிராமண சங்கங்கள் இருக்கின்றன, எத்தனை திராவிட பிராமணப் பிரிவுகள் இருக்கின்றன என்பது தெரிய வரும்!
இன்றைக்கும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் “புதூரு திராவிட சங்கம்” என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.comhttp://pudurdravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் - பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) - பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).
பிரித்தானியக் கலைக்களஞ்சியம் “திராவிடன்” என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும்போது, “இச்சொல் முதன் முதலில் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்களை மட்டுமே குறித்தது. பிற்காலத்தில், கெடு வாய்ப்பாக இந்தப் பெயரால் மண்ணின் மக்களையும் குறிக்கும் நிலை உருவானது” என்று கூறுகிறது. (காண்க : http://gluedideas.com/Encyclopedia-Britannic…/Dravidian.html).
குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசும் தாயகங்களில் வாழும் பிராமணர்களைக் குறிக்க “பஞ்ச திராவிடர்கள்” என்ற சொல்லும் வரலாற்று ஏடுகளில் காணக்கிடைக்கிறது. பிராமணர்களைத்தான் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைத்தார்கள். ஐயமிருந்தால், பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
தி.மு.க. கோவையில் 1950இல் நடத்திய “முத்தமிழ்” மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப் பேசினர். அப்போது, திராவிடர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் சான்று எதுவுமில்லை என்று கூறி, திராவிடம் என்ற சொல்லைக் கைவிடுமாறு அண்ணாவிடம் இவ்விருவரும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அண்ணா விடையிறுக்கும்போது, சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே.சாமிநாதய்யர் சிலையின் கீழே “திராவிட வித்யா பூசணம்” என்று எழுதப்பட்டிருப்பதையும், “சனகணமன” பாட்டில் “திராவிட” என்ற சொல் வருவதையும் சான்றாகக் காட்டினாரே தவிர, சங்க இலக்கியத்திலிருந்தோ, காப்பிய இலக்கியத்திலிருந்தோ சான்று காட்டவில்லை! அப்போதும், அண்ணா காட்டிய “திராவிட”ச்சான்றுகள் ஆரியம் சார்ந்தவையே!
மேற்கண்ட வரலாற்றுப் பின்னணியில்தான், ஆய்வு அடிப்படையிலும் அரசியல் நிலைபாட்டு அடிப்படையிலும் திராவிடம் என்பது ஆரியத்தின் இளைய பங்காளி என்று துல்லியமாகச் சொல்கிறோம். இப்பொழுதும், ஆரியத்தின் இளைய பங்காளியாகத்தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு காவல் அரணாகத்தான் திராவிடம் செயல்படுகிறது.
2008 – 2009 ஆண்டுகளில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை நடத்தியது. அதற்கு, எல்லா வகையிலும் இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். இந்திய அரசு ஈழத்தில் போர் நிறுத்தம் கோர வேண்டுமென்று கூறி, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரை நாள் உண்ணாப் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்திய அரசு போர் நிறுத்தம் கேட்க மறுத்துவிட்டது. உண்ணாப்போராட்டத்தோடு முடித்துக் கொண்டது மட்டுமில்லை, ஈழத்தில் தமிழினப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசில் தி.மு.க. பதவி வகித்துப் பலன் அனுபவித்தது. இந்த தமிழினத்துரோகமும் திராவிடத்தின் இந்திய எதிர்ப்பு தானோ?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் குறித்து..
-------------------------------------------------------------------------
பேராசிரியர் சுப.வீ. அவர்களுடைய இன்னொரு முகாமையான கேள்வி இதோ : “தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏன் திராவிடத்தை எதிர்ப்பதில்லை? பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதாலா? உண்மையில் வெங்கட்ராமன்தான் பேசுகிறார். மணியரசன் வாய் அசைக்கிறார். அவர் நெஞ்சில் கள்ளம் இல்லையென்றால், அவரும் நேரடியாகப் பேச வேண்டும் தானே?”

“பிராமண வகுப்பில் பிறந்த தோழர் வெங்கட்ராமன்தான் சிந்திக்கும் ஆற்றல் உடையவர். பிராமணர் அல்லாத தமிழினத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர். வெங்கட்ராமனுக்கு ஊதுகுழலாக இருக்கிறார்” என்று சுப.வீ. பேசும்போது, அவர் மணியரசனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தமிழினத்தையே அவமானப்படுத்துகிறார்.
ஏனெனில், “தமிழர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி” என்று பேசிய பெரியார் மரபில் வந்தவரல்லவா! எனவே, பிராமணர்களால் மட்டுமே கூர்மையாக சிந்திக்க முடியும் என்ற அடிமை உளவியலில் இருந்து சுப.வீ. போன்றவர்கள் இன்னும் விடுபடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது!
எனது இந்தக் கருத்தை, சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீ. அவர்களிடம் தஞ்சாவூரில் எங்களது இயக்க அலுவலகத்தின் வாசல் அருகில் மரநிழலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் கூறியிருக்கிறேன். அப்போதும், “வெங்கட்ராமன் தான் உங்களைக் கெடுத்துவிட்டார்” என்று சொன்னார். “தமிழனுக்கு சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லை எனக் கருதுகிறீர்களா சுப.வீ.?” என்று நான் கேட்டேன்.
தோழர் கி. வெங்கட்ராமன் திராவிடத்தைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பதற்குக் காரணம், திராவிடவாதிகள்தான்! நீங்கள் கருத்தளவில் விவாதம் செய்ய மாட்டீர்கள், பிராமணியர்களைப்போல பிறப்பிலிருந்து விவாதம் செய்வீர்கள். கருத்துக்கு விடை சொல்லாமல், அவர் பிராமண வகுப்பில் பிறந்ததைக் கூறி, உடனே உங்களின் ஆதரவாளர்களை களிப்படையச் செய்வீர்கள். அப்போது, கருத்தளவில் தருக்கம் நடக்காது. அது பிறப்பளவில் திசைமாறிப் போகும்!
எனவே, தோழர் கி.வெ. திராவிடம் குறித்த தருக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம், தி.க. – தி.மு.க.வில் இருப்பவர்களைவிட நடைமுறையில் பிராமணிய எதிர்ப்பாளர் தோழர் கி. வெங்கட்ராமன். படிக்கும் காலத்திலேயே பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மனித சமத்துவ சிந்தனை வசப்பட்டு, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத் தேடி வந்து எங்களோடு இணைந்தவர் தோழர் கி.வெ.! தன்னுடைய இரு மகள்களுக்கும் பிராமணரல்லாத வகுப்பில் பிறந்தவர்களைத் தேடித் திருமணம் செய்து வைத்தவர். ஆரியத்தை - பிராமணியத்தை அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் வாயிலாக மட்டுமின்றி, நடைமுறையிலும் எதிர்த்து வருபவர். இந்துத்துவாவை எதிர்த்து, அரிய கருத்துகள் கொண்ட பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.
திராவிடவாதிகள் தருக்கம் செய்வதைவிட, குறுக்குவழியில் குதர்க்கம் செய்வதில் நாட்டமுடையவர்கள். அதனால்தான், அவர்களோடு நேரடி தருக்கத்தில் அவர் ஈடுபடவில்லை.
தமிழ்த்தேசியத்தின் மரபும் வீரமும்
--------------------------------------------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கம், திராவிடவாதிகளைப் போல் பிராமணர்களைக் கண்டு அஞ்சும் இயக்கமல்ல! வர்ணாசிரமத்தை – பிராமணியத்தை எதிர்க்கக்கூடியவர்கள் பிராமணர்களில் இருந்தாலும், வெளிப்படையாக அவர்களை வரவேற்கக்கூடிய இயக்கம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். எங்கள் இயக்கத்தில் உறுப்பினராக்கிக் கொள்வோம். இதில் எந்த ஒளிவுமறைவுமில்லை! அதேபோல், ஆரிய எதிர்ப்பில் - பிராமணிய ஆதிக்க எதிர்ப்பில் ஈடுபடாதவர்களை – அவர்கள் மரபுவழித் தமிழினத்தில் பிறந்திருந்தாலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுப்பினர்களாக ஏற்பதில்லை!

வெளிப்படையாக ஆரியத்தை – பிராமணியத்தை – இந்துத்துவாவை – இவற்றை செயல்படுத்தி வரும் இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்த்து வருகிறது. நாங்கள் தி.மு.க.வைப் போல், காங்கிரசுடனோ, பா.ச.க.வுடனோ கூட்டணி சேர்வதில்லை. கூட்டுப் போராட்டங்களும் நடத்துவதில்லை!
தமிழ் இனம் வரலாறு நெடுக ஆரியத்தை – பிராமணியத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வர்ணாசிரம தர்மம், சாதி உயர்வு தாழ்வு இவற்றையெல்லாம் தமிழினம் எதிர்த்தே வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்றவை மனித சமத்துவத்தைத்தான் பேசுகின்றன.
தமிழர் ஆன்மீகம் கூட பழங்கால ஆசீவகமாக இருந்தாலும், சிவநெறியாக இருந்தாலும், திருமால் நெறியாக இருந்தாலும், ஆரிய வர்ணாசிரம தர்மத்தை ஏற்கவில்லை; எதிர்த்தே வந்திருக்கிறது. திருமூலர் கூறிய “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற பொன்மொழியைத் தான், அண்ணா தன்மொழியாக ஏற்றுக் கொண்டார். வள்ளலாரின் சமத்துவ ஆன்மீகம் ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பில் கருக்கொண்டது. தமிழர் ஆன்மீகம், தமிழ்ப் பெருமையைத்தான் – தமிழர் பெருமிதத்தைத்தான் கூறி வந்திருக்கிறது. இவ்வாறான வரலாற்று வழியில் வந்த எங்களது இக்காலத் தமிழ்த்தேசியம், ஆரிய பிராமணிய சித்தாந்தத்தையும் அதன் இன மேலாதிக்கத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும், சாதி ஒடுக்குமுறைகளையும் இந்திய ஏகாதிபத்தியத்திய அரசியலையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
அதேபோல், வெளியார் சிக்கலில் 1956 நவம்பர் 1-க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழக்கூடியவர்களும், அவர்களின் வழி வந்தவர்களும் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களே, அவர்கள் சம உரிமை உள்ளவர்கள் என்றுகூறி, அவர்களின் தமிழ்த்தேசிய ஈடுபாட்டிற்கேற்ப அவர்களையும் உறுப்பினராக்கிக் கொள்கிறோம். அவர்களும் பொறுப்புகளுக்குத் தேர்வாகிறார்கள். தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் நானூறு – ஐநூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மரபுவழித் தமிழர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கை!
பேராசிரியர் சுப.வீ. அவர்களை, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் விமர்சித்தபோது, அதை நாங்கள் கண்டித்தோம். பிறமொழி பேசுவோர் பற்றிய எங்கள் மேற்கண்ட நிலைபாட்டை அப்பொழுதும் கூறியிருக்கிறோம். சுப.வீ. அவர்கள் மரபுவழித் தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் கூறியிருக்கிறோம்.
மேற்கண்ட எமது வினாக்களுக்கு சுப.வீ. அவர்கள் விடை கூறட்டும்; அதன்பிறகு பார்ப்போம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam


காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.