தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்? பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்?
ஐயா பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழர்களின் கலைச்சின்னமாக - தமிழர்களின் பொறியியல் ஆற்றலின் வடிவமாக - தமிழர் ஆன்மிகச் சின்னமாக தஞ்சையில், தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் எழுப்பியுள்ள பெருவுடையார் கோயிலுக்கு, வரும் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இருபத்து மூன்று ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு அக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முன்வருவதை வரவேற்ற நாம், கடந்த 2019 திசம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அக்குடமுழுக்கை முழுக்க முழுக்க தமிழர் ஆன்மிக நெறிப்படி - தமிழில் நடத்த வேண்டுமென மனு அளித்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மனுவை அளித்தனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் மனு அளித்தனர்.
அடுத்த கட்டமாக, இதுகுறித்து கலந்தாய்வு செய்ய கடந்த 28.12.2019 அன்று தஞ்சையில் ஆன்மிகப் பெரியவர்களையும், தமிழின உணர்வாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடினோம். தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து ஒரு பெருந்திரள் மாநாடு நடத்துவது என்று முடிவானது. கடந்த 22.01.2020 அன்று மிக எழுச்சியாக அந்த மாநாடு நடந்து முடிந்தது.
இம்மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்குக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டன. தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், காங்கிரசுத் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, சி.பி.எம். தமிழ்நாடு செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமலகாசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவான தங்கள் கருத்துகளை அறிக்கைகளாக வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் எழுதினர். பல்வேறு இயக்கங்கள் இக்கோரிக்கையை ஆதரித்தன. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழ்க் குடமுழுக்கிற்காக சென்னையில் போராட்டம் நடத்தியது.
அ.இ.அ.தி.மு.க. அரசு பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்துவோம் என முதல் தடவையாக அறிவித்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பதில் மனுத் தாக்கல் செய்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறையில், கோபுரக் கலசத்தில் தமிழ் மந்திரங்களும் அர்ச்சிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தனது பதில் மனுவில் கூறியது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் மட்டுமே நடத்துவதற்கு ஆணையிடு மாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் என் பெயரிலும், நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி சார்பில் திரு. து. செந்தில்நாதன் பெயரிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு சிலரும் வழக்குகள் போட்டிருந்த னர்.
இப்படி எல்லோரும் தமிழுக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தஞ்சைப் பெரிய கோயில் பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்துவதா, சமற்கிருதத்தில் நடத்துவதா என்பதில், எந்தக் கருத்தும் சொல்லாத ஒரே கட்சி - பாரதிய சனதா கட்சிதான்! அதிகாரப்பூர்வமாக அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை! ஏன்? எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் அறிக்கை விடும் அவர்கள், இந்தச் சிக்கலில் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை?
இப்போது, பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான கே.டி. இராகவன் மற்றும் எச். இராசா ஆகியோர் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதியுள்ள கருத்துகளைப் பார்த்தால், அவர்கள் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்துவதை ஆதரிக்கவில்லை, சமற்கிருதத்திலேயே அதை நடத்தத் துடிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
இதையும்கூட, அவர்கள் நேரடியாகச் சொல்லாமல், தமிழ்வழிக் குடமுழுக்கிற்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் “பெ. மணியரசன் - இந்து அல்ல கிறித்தவர்” என்றும், அவரது உண்மையான பெயர் “டேவிட்” என்றும் கூறியிருக்கிறார்கள். அத்துடன், தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத் துண்டறிக்கை யில், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஜெனுலாப்தீன், மனித நேய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு ஆகியோரின் பெயர்கள் இருப்பதை வட்டமிட்டுக் காட்டி, இப்போராட்டத்தைப் பிற மதத்தினர் தூண்டுவதைப் போல எழுதியுள்ளார்கள். மேற்கண்ட இருவரும் “இசுலாமிய பயங்கரவாதிகள்” என்றும் எழுதியுள்ளார்கள்.
இது எச். இராசா - கே.டி. இராகவன் வகையறாக்களின் வழக்கமான பாணிதான்! ஒருவரின் கருத்தை அல்லது செயலை திறனாய்வு செய்யாமல், பிறப்பை இழிவுபடுத்தும் ஆரிய வர்ணாசிரமப் “பண்பாடு” அப்படித்தான் சிந்திக்க வைக்கும்!
ஆரிய வர்ணாசிரமத்தை - சமற்கிருத மேலாதிக்கத்தை - சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்துக் களம் காணும் பிராமணப் பெருமக்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றிக் கொள்ளாத கே.டி. இராகவன் - எச். இராசா போன்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஒருவேளை, பெ. மணியரசன் கிறித்தவராகப் பிறந்திருந்தால்தான் என்ன குற்றம்? ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா? பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச்சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும், இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே! கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே! கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே! கிறித்தவ - இசுலாமிய நாட்டு மன்னர்களுடனும் ஆட்சித் தலைவர்களுடனும் உறவு வேண்டுமென பா.ச.க.வினர் தவம் கிடக்கிறார்களே!
கிறித்தவர்களோ, இசுலாமியர்களோ தீண்டத்தகாதவர்களா? மனிதர்களில் தீண்டத்தகாதவர்கள் யாருமில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு! வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது? தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில்! அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது? அவர்கள் தாய்மொழி தமிழ்; அவர்கள் தமிழர்கள்!
பெரிய கோயில் குடமுழுக்கிற்காக நாங்கள் நடத்தியக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, இத் தோழர்கள் தங்கள் முன்னோர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தானே என்று உரிமையோடு பேசினார்கள்.
இசுலாமியத் தமிழர்களின் மசூதிகளில் அரபியில் ஓதுகிறார்களே, அதைக் கேட்டீர்களா என்கிறார்கள். நாங்கள் கேட்டோம். இனியும் கேட்போம். மசூதிகளில் உரையாற்றும் போது தமிழ்ப் பயன்படுத்தப்படுவதைப் போல், மசூதி வழிபாட்டிலும் அரபியில் செய்யாமல் தமிழில் தொழுகை நடத்த முயலுங்கள் என்கிறோம். அதற்கான குரலும் தமிழுணர்வுள்ள இசுலாமியரிடத்திலிருந்து வர வேண்டும். இசுலாமியர் அல்லாதவர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. இசுலாமியர்கள் முன்னெடுத்து மற்ற மதத்தினர் அதை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு வரும்போது, அப்போராட்டத்திற்கு நாங்களும் துணை நிற்போம்.
கிறித்தவ தேவாலயங்களில் 1960 வரைகூட இலத்தீன் மொழியே வழிபாட்டு மொழியாக இருந்தது. பின்னர், போப் அரசர்களிடம் கிறித்தவ மக்கள் தங்கள் மொழிக்காக எழுச்சி பெற்றுப் போராடினார்கள். பல பாதிரியார்களும்கூட தாய்மொழியில் வழிபாடு செய்யப் போராடினார்கள். இப்போது, 1962லிருந்து கிறித்துவத்தில் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நடக்கிறது.
அதுபோல, இந்து மதத்திலும் சமற்கிருத மேலாதிக்கத்தை நீக்கி - அந்தந்த மொழிகளில் வழிபாடு நடத்துங்கள் என்கிறோம்! இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? இந்து மதம் அவர்களின் தனிப்பட்ட சொத்தா?
இந்து மதம் பல தெய்வங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கென்று ஒற்றைத் தலைமை குரு யாருமில்லை. பல்வேறு உட்சமயப் பிரிவுகளைக் கொண்டது. பல்வேறு மொழிகளைக் கொண்டது. பல்வேறு இனங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கு பிராமணர்களோ, மற்ற யாருமோ தலைவர்கள் அல்லர்!
சிவபெருமான் தமிழ்த்தெய்வம்! “கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தவிப் பசுந் தமிழ்” என்று இறையனார் அகப் பொருள் கூறுகிறது. முதல் தமிழ்ச் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கினார் என்பது இதன் பொருள்.
தமிழையும், சிவனையும் பிரிக்க முடியாது. “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறு!” என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறினார்.
இந்த உரிமையும், உறவும் உள்ள தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு நாங்கள் கோரும்போது, குறுக்கே நின்று எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் தடுப்பது ஏன்? எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஆரியத் துவாவாதிகள் இந்து விரோதிகளாக அல்லவா செயல்படுகிறார்கள்!
நான் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் என்றும், இந்துக்கோயில் வழிபாட்டில் நான் தலையிடக் கூடாது என்றும் எச். இராசா - கே.டி. இராகவன் போன்ற வைதிக வர்ணாசிரமவாதிகள் கேட்கிறார்கள்.
மணியரசன் என்ன மர்ம மனிதரா? தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது! ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கோயிலிலிருந்து எங்கள் வீட்டுக்கு என் தந்தை பெரியசாமி பெயரிலும், இப்போது என் தம்பி ரெங்கராசு பெயரிலும் கடிதம் வரும். நாங்கள் விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவோம்.
நான் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்திரா காந்தி அம்மையார் 1975இல் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். 1976 சனவரி 31-இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினார்.
அந்த நெருக்கடி நிலை காலத்தில், சி.பி.எம். கட்சியில் அனைத்திந்திய அளவில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. தலைமையிலிருந்து கீழ் வரை ஒரு குழுவினர் தலைமறைவாக இயங்கிக் கைதாகாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதே அம்முடிவு.
அம்முடிவின்படி, சி.பி.எம். கட்சியின் தலைமைக் குழுவில் செயல்பட்ட பி.டி. இரணதிவே, பி. சுந்தரய்யா போன்றோர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றினர்கள். அதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் - ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டிய தோழர்கள் முடிவு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு அப்போது தலைமறைவு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் - அண்மையில் காலமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள்! அப்போது எனக்கு எதிராக பிடிவாரண்ட் போடப் பட்டிருந்தது. என்னைத் தேடிக் கொண்டிருந்தது காவல்துறை!
இப்போதைய சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்கள் அப்போது திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்தபோது, அவரது அரவணைப்பில் தான் இருந்தேன். எனது மீசை மழிக்கப்பட்டது. உருவத்தை மாற்றிக் கொண்டேன். “டேவிட்” என்றொரு கற்பனையான புனைப்பெயரை எனக்கு தோழர் டி.கே. ரங்கராசனும், அவர்களுடைய தோழர்களும் சூட்டினர். 1977இல் நெருக்கடி நிலை தளர்ந்த பிறகுதான் நான் மீண்டும் மணியரசனாக வெளிவந்தேன். இதையெல்லாம், இப்போது சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களிடமும், சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள்.
நெருக்கடிநிலையும், சனநாயக உரிமை மறுப்பும் நீண்டகாலம் தொடரும் என்று அப்போது சி.பி.எம். மத்தியக்குழு முடிவு செய்து அறிவித்தது. சனநாயக உரிமை மீட்கப்படும் வரை தலைமறைக் கட்சி இயங்க வேண்டுமென்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. இப்பின்னணியில், தலைமறைவு காலத்தில் எனக்குத் திருமணமும நடைபெற்றது. தலைமறைவு மாவட்டச் செயலாளர் தோழர் கோ. வீரய்யன் அவர்கள் தலைமையில் என் திருமணம் தலைமறைவாக நடந்தது. இதுகுறித்து, என் மனைவியும், மகளிர் ஆயம் தலைவருமான தோழர் ம. இலட்சுமி தனது “லட்சுமி எனும் பயணி” என்ற நூலில் எழுதியுள்ளார். டேவிட் என்ற தலைமறைவுப் பெயருடன் செயல்பட்ட பெ. மணியரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து, “ஆனந்த விகடன்” வார ஏட்டுக்கும் பேட்டி அளித்துள்ளார். கே.டி. இராகவன் - எச். இராசா - வகையறாக்கள் இதை ஏதோ ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி பிறப்புத்திரிபு செய்திருக்கிறார்கள். தோழர் சீமான், தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலரையும் வெவ்வேறு மதப்பெயர் சொல்லி அழைப்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.
கிறித்துவராகவே இருந்தால் என்ன குற்றம்? அது என்ன இழிவான பிறப்பா? இவையெல்லாம் எவ்வளவு மலிவான - கேவலமான - அற்பத்தனமான உத்திகள்!
ஒருவேளை, ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டவராகவே இருந்தால்கூட, அவர் மாற்றி வைத்துக் கொண்ட பெயரைத்தானே சொல்ல வேண்டும்! அது தானே நேர்மையும், நாகரிகமும் கொண்ட செயல்!
முதலில், இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகள் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரசியல் பேசலாம்! இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள்! இவர்களின் அசல் வாரிசுகளாக எச். இராசாவும் – கே.டி. இராகவனும் இன்றும் நவீன வடிவத்தில் செயல்படுகிறார்கள். அந்த வடிவத்தின் பெயர்தான் “இந்துத்துவா”!
இப்போது, தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கைத் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடந்து, தமிழையும் சமற்கிருதத்தையும் சம அளவில் பயன்படுத்தி குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தீர்ப்பும் வந்துவிட்டது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் “சிகரம்” செந்தில்நாதன், திருச்சி முத்துக்கிருஷ்ணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி திபேன் ஆகிய ஆளுமைகள் அருமையான வாதங்களை முன்வைத்தார்கள்.
தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கை இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகளுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் வருகிறது? உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன? இவர்கள் கூறுவதையெல்லாம் பார்த்தால், இரண்டிற்கும் மேற்பட்ட நாக்குகள் இருக்கும்போல் தெரிகிறதே!
தமிழ் மொழி தமிழ்நாட்டில் முதன்மை பெறுவதை - முழுமையான ஆட்சி மொழியாவதை – முழுமையான ஆன்மிக மொழியாவதை – முழுமையான கல்வி மொழியாவதை இந்த ஆரியத்துவாவாதிகள் தங்களின் ஆதிக்கக் கொள்கைப்படி எதிர்க்கிறார்கள். “தமிழர் ஆன்மிகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமற்கிருதத்தின் துணை கொண்டு தமிழர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஆபத்து தொடங்கியிருக்கிறதே!” என்று இவர்கள் அலறுகிறார்கள்! தமிழ் உரிமைக்கு – தமிழர் உரிமைக்குப் போராடுவோர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் உள்ள உறவைவிட, எனக்கும் பெரிய கோயிலுக்கும் உள்ள இனவழி உறவும், மொழிவழி உறவும் அதிகம்!
எங்கள் தொல்காப்பியம் தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழும் மக்களாக எங்கள் முன்னோர்களைக் குறித்துள்ளது. அதில், எங்கள் ஒவ்வொரு மக்களின் சொந்த நிலமும், அதற்குரிய கடவுளும் குறிக்கப்பட்டுள்ளன. எம் முன்னோர்கள் அந்த நான்கில் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தெய்வமும் குறிக்கப்பட்டிருக்கிறது. எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோரின் முன்னோர்க்கு அவ்வாறான உண்மையான தமிழ் நில உரிமை குறிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை! இவர்களின் முன்னோர்கள் வடக்கே இருந்து வந்த ஸ்மார்த்தர்கள்! கோயில் வழிபாடு இல்லாதவர்கள்! சமற்கிருத சுலோகங்களை ஒதிக் கொள்வோர். ஆகமப்படி பார்த்தால், பிராமண ஸ்மார்த்தர்கள் எங்கள் கோயிலின் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது.
எங்கள் கடவுள்களின் அழகானத் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆரியமயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களை, இவர்களின் முன்னோர்கள் எங்களின் கடவுள்களுக்கு சூட்டினார்கள். அவர்களின் வாரிசுகள் அல்லவா எச். இராசா - கே.டி. இராகவன் வகையறா! உங்களுக்கு எங்கள் இந்துக் கோயில்கள் மீது என்ன உரிமை இருக்கிறது?
ஐந்து ஆறுகள் ஓடக்கூடிய இடம் திருவையாறு! அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக? அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி! அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக? கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர்! கருகாத்தநாயகியை கர்ப்பரட்சகாம்பிகா என்று எதற்காக மாற்றினீர்கள்?
தமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமணிய” என்று பெயர் மாற்றி தீட்டுக் கழித்து ஆரியமயப்படுத்தியவர்கள் யார்? கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள்! அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா? இல்லை!
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திரு. என். நாராயணன் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென அறிக்கை வெளியிடுகிறார். அதுவும், தஞ்சைப் பெருவுடையார் என்றுகூட சொல்ல அவருக்கு மனம் வரவில்லை, “பிரகதீசுவரர்” என்கிறார். இப்படி எங்கள் தெய்வங்களை சூத்திரக் கடவுளாகக் கருதி, “தீட்டுக் கழித்து”, சமற்கிருதத்தில் பெயர் மாற்றுவதன் பொருள் என்ன? இதுதான் கடவுளுக்கும் வர்ணாசிரமம் கற்பிக்கும் ஆரியத்துவா அதர்மம்!
எங்கள் தெய்வங்களின் பெயர்களில் கூட தமிழ் இருக்கக் கூடாது என சமற்கிருதத்தில் மாற்றிய ஆரியத்தின் வழிவந்த எச். இராசா - கே.டி. இராகவன் போன்றோர், எந்தத் துணிச்சலில் தமிழ்க் குடமுழுக்கை எதிர்க்கிறீர்கள்? எங்கள் தோளில் அமர்ந்து எங்கள் செவியைக் கடிக்கும் வேலையை அல்லவா, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்!
பா.ச.க.வில் வழிமாறிப் போய் சேர்ந்துள்ள அப்பாவித் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ்க் குட முழுக்கு - தமிழில் வழிபாட்டுரிமை என்று கேட் கிறோம்.
தமிழர் கோயில்களில் சமற்கிருத வழிபாடு பழமையானது என்கிறீர்களே, எவ்வளவு ஆண்டு பழமையானது? எங்கள் தொல்காப்பியத்தைவிட பழமையானதா? தொல்காப்பியர் கட வுளை வணங்க காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்து என ஆறு வகை முறைகளைச் சொல்கிறார். எங்களுக்கு ஆதியிலேயே உருவத்தால் ஆனக் கடவுள் வணக்கம் உண்டு, உங்களைப் போல் நாங்கள் “ஸ்மிருதி” வழிபாட்டாளர்கள் அல்லர்! கோயில் கட்டி வழிபடும் மரபினர்! உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா? இல்லை!
கடவுளையே உரிமையுடன் கேள்வி கேட்ட மரபு எங்களுடைய தமிழ் மரபு! கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? உன் கண் அவிந்து போச்சா? என் துன்பத்தை ஏன் போக்கவில்லை?” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது?” என்ற ஏக்கத்தில் வரும் உரிமைச் சீற்றம்!
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி” என்று சிவபெருமானை “தோழன்” என்று பல இடங்களில் அழைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்! ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய்!” என்று உரிமையோடு இறைவனிடம் வேண்டுகிறார். சுந்தரர் அந்தக் காலத்திலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
திருநாவுக்கரசர், அம்மையுமாய் அப்பனுமாய் அன்புடைய மாமனுமாய் மாமியுமாய் என்று குடும்பப் பாசத் துடன் சிவபெருமானை அழைத்தவர். இறைவனோடு தமிழர் ஆன்மிகத்தில் உள்ள இந்த நெருக்கமும், உறவும் ஆரிய ஆன்மிகத்தில் இருக்கிறதா?
தமிழர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்கலாம். ஆனால், தமிழர்களின் தெய்வங்களை ஆரியத்தின் கைப் பாவைகளாக சித்தரிக்க உங்களை அனுமதிக்க மாட்டோம்.
வைணவத்தில், கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பாடிய கம்பர், “ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவே யாம் / அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் / இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் / நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!” என்றார். அதாவது, கடவுள் ஒன்றே என்றால், ஒன்று தான். பல என்றால் பல தான். இல்லை என்றால் இல்லை தான். கடவுள் பிழைப்பே இப்படி இருக்கும் போது, நம் பிழைப்பு என்னாவது என்று கடவுள் வாழ்த்துப் பாடுகிறார் கம்பர்!
தமிழினத்தில் பிறந்த கடவுள் மறுப்பாளர்களுக்கும் தமிழர்களின் இந்து மதத்தில் இடமுண்டு! அவர்களின் தங்கள் இனத்தின் ஆன்மிக உரிமையை, தங்களின் தாய் மொழி உரிமையை பாதுகாக்கப் போராடுவதற்கு உரிமையுள்ளோர் ஆவர். அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதற்கு, எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஸ்மார்த்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
கடவுளை உரிமையோடு நெருங்கி உறவாடும் சுதந்திரம் - விமர்சிக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உள்ளது. இதுதான் இந்து மதத்தின் தனிச்சிறப்பு! இந்து மதத்தை விமர்சிப்பதற்காக ஒருவரை, இந்து மதத்தைவிட்டு நீக்கிவிடவும் முடியாது. அந்த அதிகாரம் இந்து மதத்தில் யாருக்கும் கிடையாது.
இந்தியாவுக்கே சிவ நெறி (சைவ) – திருமால் நெறி (வைணவ) ஆன்மிகத்தை வழங்கிய இனம் – தமிழினம்! இந்து மதம் என்ற பெயர் ஆங்கிலேய ஆட்சி கொடுத்தது. இதை காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள், “தெய்வத்தின் குரல்” நூலில் குறிப்பிட்டுள்ளார். “நாமெல்லாம் சிவனை வணங்குவோர், விஷ்ணுவை வணங்குவோர், காளியை வணங்குவோர், வைசேஷியர்கள், நியாய வைசேஷியர்கள் என்று பலவாறு பிரிந்து கிடந்தோம். நம்மையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வெள்ளைக்காரன் “இந்து” என்று பெயரிட்டான். நாம் பிழைத்துக் கொண்டோம்” என்று நன்றியுடன் கூறுகிறார். (“தெய்வத்தின் குரல்”, பாகம் – 1, பக்கம் 267).
இப்படிப்பட்ட பன்மைத்தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைக் கோட்பாடும், ஆரியத் தலைமையும் கொண்ட புதிய இந்து மதமாக மாற்றிட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் படாதபாடுபடுகின்றன. ஆட்சி அதிகாரத்தை தன்னல நோக்கில் தவறாகப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள் இருந்தாலும், அது ஒரே தேசமாக இல்லை! இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை! ஏனெனில், மதம் ஒரு மெய்யியல்! அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம்? பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம்! இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது! இந்து மதம் வெளி நாடுகளில் பரவாமல் போனதற்கு எச். இராசா - கே.டி. இராகவன் வலியுறுத்தும் ஆரிய வர்ணா சிரம வைதீக வாதம்தான் காரணம்!
இந்து மதத்தில், ஒரே தெய்வம் - ஒரே ஆசான் - ஒரே தத்துவம் என்பதெல்லாம் கிடையாது. இங்கு யாரும் இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்க முடியாது! யாரையும் அதிகாரம் செய்ய முடியாது! இதில், தமிழுக்கு எதிராக - தமிழர்களுக்கு எதிராக வாத்தியார் வேலை பார்ப்பதற்கு ஆரியத்துவாவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆரியத்தை பேசிக் கொண்டு, அதைத் தந்திரமாக இந்துத்துவா என்று நீங்கள் திரிக்கிறீர்கள்! இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா? இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா? பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா? தடுத்தார்களா? இல்லை! அந்த சிங்களர்கள், ஆரியர்கள் என்பதால் அவர்களுடன் இன்றைக்கும் பா.ச.க. அரசு நல்லுறவு பேணி வருகிறது! தமிழினப் படுகொலைக் குற்றவாளி கோத்தபய, இலங்கையின் குடியரசுத் தலைவரானவுடன் அவர்களுடன் உள்ள உறவு மேலும் நெருக்கமாகிவிட்டது.
இந்து மத பாதுகாப்பில் உங்களுக்கு உண்மையான அக்கறையில்லை! ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை! அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை! ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதைத்தான் உங்களது பேச்சுகள் - செயல்பாடுகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த இசுலாமியத் தோழர்களை “பயங்கரவாதிகள்” என எழுதுகிறார் பா.ச.க.வின் எச். இராசா அவர்கள். அவர் பார்வையில், அறவழி ஆர்ப்பாட்டம் நடத்துவதுகூட “பயங்கரவாதம்” போலிருக்கிறது!
முசுலிம்களுடன் உங்களுக்கு எந்த உறவும் இல்லையா? இந்த இசுலாமியர்கள் “பயங்கரவாதிகள்” என்றால், உங்கள் பா.ச.க. அமைப்பில் முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோரை வைத்துள்ளீர்களே, அவர்கள் யார்?
சொந்த மதத்தை, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்தால் நீங்கள் யாரையும் சேர்த்துக் கொள்வீர்கள், தங்களின் ஞாயமான உரிமைக்குக் குரல் கொடுப்போரை “பயங்கரவாதிகள்” என்பீர்கள்! பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற முசுலிம்களை சொல்ல வைக்கிறீர்கள். அதற்காக அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறீர்கள்.
நீங்கள் - ஆரியத்துவாவை இன்னும் விரிவாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம்! நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங்களிடம் ஏமாந்து கிடக்கும் எங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்! உங்களின் உண்மை உருவத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்!
நாங்கள் தமிழர்கள் - எல்லோரையும் அரவணைக்கும் இனத்துக்குச் சொந்தக்காரர்கள்! மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே! ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள்! மதம் என்பது ஒரு மெய்யியல்! ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம்! எங்களுக்குள் நீடித்த உறவு உண்டு!
விவரம் தெரியாத சில அப்பாவித் தமிழர்களை நீங்கள் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் ஏமாற்ற முடியாது!
தமிழர்கள், இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழின் பக்கம் இன்னும் உறுதியாக நிற்க வேண்டும். தமிழில் பெயர் வைத்துக் கொள்வது தொடங்கி, சமற்கிருத வழிபாட்டு முறையில் குடும்பச் சடங்குகளை - கோயில் விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு முற்றிலும் தமிழ்வழியில் செய்வது - தமிழில் வழிபாடு செய்வது என மறைமலையடிகள் போன்ற நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்னும் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்!
நம் பாதை மக்கள் திரள் அறப்போராட்டப் பாதை! ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம்! தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டும், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்! ஆனால், தேர்தல் வேலிக்குள் முடங்காத தமிழர்களின் இலட்சியப் பாசறையாகத் தமிழ்த்தேசியத்தை வளர்ப்போம்!
நம் கோயில் உரிமைகள் மீட்புக்காகவும், பல துறை உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. அதற்கான தலைமுறையாக, இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்கத் தமிழ்ச் சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment