ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! பெ. மணியரசன்,



கலசத்தில் தமிழ் ஒலித்தது!

கடமை இன்னும் இருக்கிறது!
பெ. மணியரசன்,

ஒருங்கிணைப்பாளர்,
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் (05.02.2020) கோபுரத்தில் தமிழ் மந்திரங்கள் ஒலித்ததைக் கேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெற்ற உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையே இல்லை!

பல நூறாண்டு காலமாக நிலவிவரும் பல கோடித் தமிழர்களின் தாய் மொழி ஏக்கம், தமிழர் ஆன்மிகத் தவிப்பு எத்துணை சோகம் நிறைந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் சம அளவில் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் 31.01.2020 அன்று அளித்தத் தீர்ப்பை இந்து சமய அறநிலையத்துறையும் தஞ்சாவூர் அரண்மனைத் தேவத்தானமும் முழுமையாக செயல்படுத்தாமல் அரைகுறையாகத்தான் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும், தி.பி.2051 தை 22ஆம் நாள் (05.02.2020) அறிவன் (புதன்) கிழமை காலை 9 மணியளவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறைக் கோபுரத்தின் உச்சியிலும், மற்ற கோபுரங்களின் உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் தமிழ்ச் சைவ ஓதுவார் மூர்த்திகளால் முழங்கப்பட்ட போது உண்மையிலேயே தேன் வந்து பாய்ந்தது காதினிலே! நாங்கள் கோபுரத்தின் கீழே நின்று பார்த்தும் கேட்டும் மெய் சிலிர்த்தோம். “நாங்கள்” என்றால் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த நாங்கள் நாலைந்து பொறுப்பாளர்கள் மட்டும் அல்ல, கோபுரத்தின் கீழே நின்ற இலட்சோபலட்ச மக்கள்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்த மறுநாள் (01.02.2020) தொடங்கி, ஒவ்வொரு நாளும் 04.02.2020 வரை பெரிய கோயிலுக்குள் வேள்விச்சாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றனவா என்று பார்த்து வந்தோம். இப்பணியில் நானும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், குடந்தை இறைநெறி இமயவன், அம்மாப்பேட்டை கிருஷ்ணகுமார், வெள்ளாம் பெரம்பூர் துரை இரமேசு, வழக்கறிஞர் அ. நல்லத்துரை, இராமதாசு ஆகியோரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.

நடராசர் சந்நிதியில் தொடர்ந்து சைவத் தமிழ்ச் சான்றோர்கள் திருமுறைகள் பாடி வந்தனர். பெருவுடையார் கருவறை மருந்து செய்தலுக்காக (பந்தனத்திற்காக) நடைசாத்தப்படிருந்தது. வேள்விச் சாலையில் 110 குண்டங்கள். அங்கே ஆரியம் இரட்டை நடைமுறையைக் கடைபிடித்தது.

வேள்விச் சாலையின் நடுவே அகலமான பாதை விடப்பட்டிருந்தது. அப்பாதைக்கு மேற்கிலும் கிழக்கிலும் குண்டங்கள் – தெய்வப் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகலமான நடுப்பாதையில் உட்காருவதற்கு பலகைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்து, தமிழ் மந்திரங்கள் சொல்வோரும், சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும் சமமான அளவில் முறையே தமிழிலும் சமற்கிருதத்திலும் ஓதினார்கள். ஆனால் குண்டங்களும், தெய்வப் படிமங்களும் உள்ள வேதிகையில், பிராமணப் பூசாரிகள் சமற்கிருதம் சொல்லி தீப தூப ஆராதனை செய்தனர். அதாவது கிரியைகள் செய்யுமிடத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இடமில்லை!

இந்த ஆன்மிகத் தீண்டாமையை - ஆரிய வர்ணாசிரம அதர்மத்தை எதிர்த்து அன்றாடம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், அரண்மனை தேவத்தான அதிகாரிகளிடமும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் உள்ளிட்டோரிடமும் முறையிட்டு வந்தோம்.

கிரியைகள் செய்வதற்குரிய தமிழ்மொழி மந்திரங்களை ஐயா குடந்தை இறைநெறி இமயவன் தொகுத்துத் தந்தார். அதைத் தட்டச்சு செய்து அதன் நகல்களை மேற்படி அதிகாரிகளிடமும் விழாக் குழுவினரிடமும் தந்தோம்.

ஆனாலும் வேதிகையில் நடைபெறும் தமிழ்ப் புறக்கணிப்பு கைவிடப்படவில்லை என்ற நிலையில் 04.02.2020 அன்று, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தான உதவி ஆணையரையும் நேரில் சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் புறம்பாகச் செயல்படக்கூடாது, அத்தீர்ப்பை வேள்விச்சாலை வேதிகை, கருவறை, கலசம் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் செயல்படுத்தி தமிழுக்கு சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று எழுத்து வடிவில் கோரிக்கை விண்ணப்பம் அளித்தோம்.

இப்பின்னணியில்தான் மறுநாள் 05.02.2020 குடமுழுக்கில், கோபுரத்தில் தமிழ் ஒலித்தது; கலசங்களில் தமிழ் ஓதுவார்களும் தண்ணீர் ஊற்றித் தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு நடந்தது.

குடமுழுக்கை நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த பேச்சாளர், “பேரரசன் இராசராசன் காலத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலிக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். அதைக் கேட்டு மனிதக் கடல் எழுப்பிய கையொலி நீண்ட நேரம் நீடித்தது. தாய் மொழித் தமிழ் உணர்ச்சி, தமிழ் இன உணர்ச்சி, இயல்பூக்கமாய் எல்லோர் மனத்திலும் உறைந்துள்ளதை உணர முடிந்தது.

தமிழ்நாடெங்கும் உள்ள சைவ, வைணவ, கிராமப்புறக் கோயில்களில் தமிழ் மட்டுமே பூசை மொழியாக வேண்டும் என்பதே தமிழர்களின் நீண்டகால ஏக்கமும் நோக்கமும் ஆகும்.

அந்தப் பயணத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கோபுரக் கலசத்திலும் மற்ற சந்நிதியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலித்தது நமக்கு முதல் கட்ட முன்னேற்றம்!

தமிழர் ஆன்மிகத்தில் இந்த முதல்கட்ட முன்னேற்றம் கிடைக்கப் பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் காரணமாக இருந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும், இன உணர்வாளர்கள் ஆன்மிகச் சான்றோர் எனப் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் அத்துணை பேர் உழைப்பும் இப்பணிகளில் இருக்கின்றது. பா.ச.க.வை தவிர கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன.

தமிழ்க் குடமுழுக்குக் கோரி நான் உள்ளிட்ட நம்மவர்கள் தொடுத்த நான்கு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்கள் சிகரம் ச. செந்தில்நாதன், திருச்சி முத்துகிருட்டிணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி டிபேன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ரூபஸ், மது ஆகியோர் கட்டணமின்றி தன்னார்வமாக வழக்கு நடத்தினர்.

தஞ்சையில் 22.02.2020 அன்று நடந்த தமிழ்க் குடமுழுக்கு வேண்டுகோள் முழுநாள் மாநாட்டில் தமிழர் ஆன்மிகச் சான்றோர்களும், பதினெண் சித்தர் பீடங்களைச் சேர்ந்த குருமார்களும் பெருமக்களும், பொதுவான தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள். அம்மாநாட்டுக்குத் தாராளமாகப் பலரும் நிதி உதவி அளித்தனர்; அனைவருக்கும் காலை மற்றும் பகல் உணவளித்தனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தொலைகாட்சிகளும், நாளேடுகளும், கிழமை ஏடுகளும், சமூக வலைத்தளங்களும் ஊக்கமாக எடுத்துச் சென்றன.

குடந்தை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் மரபு பெருமிதங்களையும், கலை பண்பாட்டு சிறப்புகளையும் தஞ்சை நகர் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்களாகத் தீட்டினர்.

தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட வருவாய்துறையும் காவல் துறையும் பல நாள் திட்டமிட்டு குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தினர். காவல்துறையின் பணி கூடுதலானது. எல்லாவற்றிற்கும் மேலாக பல இலட்சம் மக்கள் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.