உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக! காணொலி வழியில் நடைபெற்ற.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை
அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக!
காணொலி வழியில் நடைபெற்ற..
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (22.04.2020) காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ .மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி, முழுநிலவன் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், வே.க. இலக்குவன், பூதலூர் தென்னவன், தருமபுரி விசயன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் - 1
---------------------
இந்திய அரசே, தமிழ்நாடு அரசே! பேரிடர் துயர்
துடைப்புப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்துக!
கொரோனா நச்சுயிரி பெருந்தொற்று காரணமாக உலகையே உலுக்கிவரும் கோவிட் – 19 நோய், அன்றாடம் அதிர வைக்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக மக்கள் முற்றிலும் முடங்கியிருக்கிறார்கள். இந்த முழு முடக்கம் 2020 மே 3 வரை தொடர வேண்டிய நிலை இருக்கிறதென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நீண்டகால முடக்கம் மக்களின் சமூக – பொருளியல் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. உழைப்பாளர்கள், உழவர்கள், சிறுதொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் இந்த முடக்கத்திற்குப் பிறகு புது தொடக்கம் காண வேண்டிய நிலை இருக்கிறது. பெருமளவு அரசு நிதி உதவி இல்லையென்றால், இவர்களை மீட்க முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், இந்தியாவும் முடங்க நேரிடும்!
எனவே, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கீழ்வரும் வகையில் மீட்பு செயல்பாட்டில் இறங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!
1. குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000 ரூபாய் என்ற வகையில் ஏப்ரல், மே, சூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் வழங்க வேண்டும். இத்தொகையினை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அவரவர் நியாய விலைக் கடைகளின் வழியாக வழங்கலாம். வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் வழியே அவர்கள் இல்லத்திற்கே சென்று உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. தமிழ்நாடு அரசு ஏப்ரல் - மே மாதங்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை விலையில்லாமல் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் சூன் மாதத்தில் மானிய விலையில் இன்றியமையாப் பொருட்கள் அனைத்தும் ரேசன் கடைகளின் வழியாக வழங்க வேண்டும்.
3. உழவர்கள் தங்கள் வேளாண் பணிகளைச் செய்வதற்கு ஆள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோரை, உழவர்களின் வேளாண் பணிகளுக்கும் ஈடுபடுத்தலாம். அவர்களுக்கு அரசு தரும் நாள் ஊதியம் 256 ரூபாயுடன், நில உரிமையாளர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்த்துத் தரும் ஏற்பாட்டைச் செய்யலாம். வேளாண் வேலைகளுக்கு உண்டாகும் ஆள் தட்டுப்பாட்டை இவ்வகையில் தீர்க்கலாம்.
4. வேளாண் விளை பொருட்களுக்கு இந்த நெருக்கடி காலத்தைக் கணக்கில் கொண்டு, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி சாகுபடிச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து, குறைந்தபட்ச இலாப விலை வழங்கவும், வேளாண் விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
5. உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் தாராளமாக வேளாண் கடன்கள் வழங்க ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.
6. இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் ஏறத்தாழ 52 இலட்சம் மெட்ரிக் டன் நெல், கோதுமை ஆகிய உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. கோடை காலத்து இருப்பு போக குறைந்தது, 32 இலட்சம் டன் அரிசி, கோதுமை ஆகியவை மிகை உபரியாக தேங்கியிருக்கின்றன. இவற்றை மாநில அரசுகளுக்கு இந்த நெருக்கடி காலத்தில் தாராளமாக வழங்காமல், அவற்றைக் கொண்டு, கிருமி நீக்கம் (Sanitizer) தயாரிப்பதற்கு வேண்டிய எத்தனால் தயாரிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது கொடுமையானது!
எத்தனால் தயாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, இன்றைய நிலையில் உணவு தானியங்களை அதற்கு திருப்பிவிடுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மிகை உபரி தானியக் கையிருப்பு அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் விலையில்லாமல் – போக்குவரத்துக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, மாநிலங்களுக்கு வழங்கிவிட வேண்டும்.
7. முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வழியே வழங்கப்படும் கொரோனா துயர்துடைப்பு நிதி, அதில் உறுப்பினர் அட்டை பெற்றிராத முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. குறு, சிறு நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பெற்றுள்ள தொழில் கடன்களுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்துவிட்டு, 4% வட்டியில் தேவையான கடன் வழங்க வேண்டும்.
9. இந்திய அரசின் நிதியமைச்சர் சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தருவதாக அறிவித்திருப்பது முற்றிலும் செயலுக்கு வர முடியாத நிபந்தனைகளுடன் இருக்கிறது. 100 தொழிலாளர்களுக்கும் கீழே பணியாற்றும் சிறு தொழில்களுக்கு ஊதியம் வழங்குவது சரிதான். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் 90 விழுக்காட்டிற்கு மேல் எண்ணிக்கையில் 15,000 மும், அதற்குக் குறைவான மாத ஊதியம் பெறுபவர்களும் இருந்தால்தான் இந்த ஊதிய நிதி கிடைக்கும் என்ற நிபந்தனை ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் தட்டி விடும் செயலாக இருக்கிறது.
எனவே, ஜி.எஸ்.டி. கணக்கில் வரக்கூடிய அனைத்து சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களில் 15,000 ரூபாயும் அதற்குக் கீழும் மாத ஊதியம் பெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த ஊதிய நிதி கிடைக்க தொழிலாளர் துறையின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவை அனைத்திற்கும் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி நிதி தேவைப்படக் கூடும். பன்னாட்டுச் சந்தையில் வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை வீழ்ந்துள்ள இச்சூழலில், இந்திய அரசுக்குக் குறைந்தது 3 இலட்சம் கோடி நிதி இதன் மூலம் கிடைத்திருக்கும். எனவே, இப்போதைய நிதித் தேவையை எதிர்கொள்வது இந்திய அரசுக்கு எளிதானதுதான். தேவைப்படும் 6 இலட்சம் கோடி ரூபாயில் குறைந்தது 5 இலட்சம் கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க வேண்டும். மீதித் தொகையை மாநில அரசுகள் வழங்கலாம்.
10. எதிர்பாராத நிலையில், வரலாறு காணாத முறையில் தமிழ்நாடு அரசுக்கும், மற்ற சில மாநில அரசுகளுக்கும் கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நலவாழ்வுத்துறை (Health) செலவினங்கள் பெரிதும் அதிகரித்துவிட்டன. இதை ஈடுகட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இச்சூழலில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாய் இடர்நீக்க நிதியை இந்திய அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையான 12,253 கோடி ரூபாயை தராமல் சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது, நிதி வகையில் தமிழ்நாடு அரசை நிலைகுலையச் செய்யும் சட்டப்புறம்பான நடவடிக்கையாகும். உடனடியாக எந்தத் தாமதமும் இன்றி, தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பங்குத் தொகையை இந்திய அரசு வழங்க வேண்டும்.
11. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் தமிழ்நாடு அரசிடமே கொரோனா துயர் துடைப்புப் பணிக்கான துயர் துடைப்பு நிதியை வழங்க வேண்டும். கொரோனா துயர் துடைப்புக்காக தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்கள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் நன்கொடை நிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibiilty - CSR) செலவினங்களில் வராது என்ற இந்திய அரசின் அறிவிப்பு, கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாகக் களமாடி வரும் மாநில அரசுகளுக்கு நிதி சேரக் கூடாது என்ற உள்நோக்கத்திலான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு நிதி அளித்து, கொரோனா துயர்துடைப்புப் பணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
தீர்மானம் - 2
---------------------
சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு
சிகிச்சை அளிக்க வேண்டும்!
கொரோனா நச்சுயிரிக் கொள்ளை நோய்க்கு இதுவரை அலோபதியில் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்காக மலேரியாக் காய்ச்சலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யூன், அசிட்ரோமைசின் மருந்துகளைக் கொடுக்குமாறு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இம்மருந்துகளைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களையும் இணைத்து கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். அலோபதியை மட்டும் நம்பியிருத்தல் கூடாது! தமிழ்நாட்டு மாற்று மருத்துவ முறை ஆய்வாளர்களும், மரபு மருத்துவர்களும் இதற்கான வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
சீனாவில் அலோபதியை மட்டும் நம்பியிருக்காமல், அவர்களது மரபு மருத்துவத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து, கொரோனா நோயிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்துள்ளார்கள். இந்தியாவிற்குள் கேரளாவில் அதுபோலவே, மண்ணின் மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து முன்னேற்றம் கண்டுள்ளாகள். எனவே, சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம் உள்ளிட்ட மரபான மருத்துவங்களையும் இணைத்து கொரோனாவுக்கு ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு சாறு அளித்தும், டெங்குக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு வழங்கியும் நாம் கடந்த சில ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளோம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவ முறைகளுக்கு உரிய மதிப்பளித்து, தகுதியான சித்த மருத்துவர்களின் ஆய்வுக் கருத்துகளைக் கேட்டு கொரோனாத் தொற்று நோய்க்கு முன் தடுப்பு மருந்தும், நோய் தீர்க்கும் மருந்தும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!
தீர்மானம் - 3
---------------------
தமிழ்நாடு அரசு வெளி மாநிலத் தொழிலாளர்களை
அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்!
வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக, இங்கேயே மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். நோய்த் தொற்று போன்ற பெருந்துயர் காலங்களில் அவரவரும் சொந்தக் குடும்பத்தோடு சொந்த ஊரில் இருக்க விரும்புவது இயல்பானது; அது அடிப்படையான உளவியல் தேவையும் ஆகும்.
கொரோனா பெருந்தொற்று வெளிநாட்டினர் வழியாகவும், வெளி மாநிலத்தவர் வழியாகவும் தான் அதிகம் வருகிறது என்ற இன்றைய நிலையிலாவது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுத் தொழிலகங்களிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பணியாற்றக்கூடிய வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் பேசி தொலைதூர சிறப்புத் தொடர்வண்டிகளை ஏற்பாடு செய்து, வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து எல்லையோர மாவட்டங்களுக்கு வந்திருக்கிற வெளி மாநிலத் தொழிலாளிகளுக்கு சிறப்புப் பேருந்து வசதிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் தொடர்வண்டி மற்றும் பேருந்து பயணங்களின்போது, கொரோனா பெருந்தொற்றைத் தவிர்ப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்படி அனுப்பலாம்.
அதேபோல், வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கிற தமிழ்த் தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர இதே போன்ற சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்குள்ளேயே பிற மாவட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் அங்கங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க, அதற்குரிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தீர்மானம் - 4
---------------------
கொரோனா நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும்
உரிய மதிப்பு வழங்க வேண்டும்!
கொரோனா நச்சுயிரி நோய்த் தடுப்புப் போரில் முன் வரிசைப் படைபோல நிற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர், அந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செய்தி வேதனையைத் தருகிறது. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!
கொரோனா நோயால் இறந்த மருத்துவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய, சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அவர்கள் வன்முறையில் இறங்கியதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இறந்தவரால் கொரோனா நச்சுயிரியைப் பரப்ப முடியாது என உலக பொதுநல நிறுவனமே (WHO) அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையாததால் இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்கின்றன.
தமிழ்நாடு அரசு, பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியதை உணர வேண்டும். மக்களிடையே உள்ள தேவையற்ற அச்சத்தைக் களையும் வகையில், கொரோனாவில் இறந்த மருத்துவர்கள் உடலை அரசே உரிய முறையில் மதிப்பளித்து தகனம் / அடக்கம் செய்ய வேண்டும். அதேபோல், அறியாமையால் விழிப்புணர்வின்றி இறந்தவர் உடலைப் புதைக்கக் கூடாதெனப் போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சரியல்ல. அப்போக்கைக் கைவிட வேண்டும்.
கொரோனா நோய்த் தடுப்பு வீரர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நமக்காகத்தான் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு பணி செய்கிறார்கள் என்ற மெய்நடப்பை உணர்ந்து கொண்டு, அவர்களையும் நம் உறவினர்களாகக் கருதி, பொது மக்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் - 4
---------------------
கொரோனா கெடுபிடி காலத்திலும்
மோடி அரசின் தொடரும் அடக்குமுறை!
அரசின் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பெரும் கடமை உள்ள சூழலிலும், மோடி அரசு தனது அதிகாரக்குவிப்பு அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதுக்குமான முழு முடக்கத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 2020 மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா நடத்திய பொறுப்பற்ற செயலை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிய “தி வயர்” (The Wire) – இணைய இதழின் ஆசிரியர் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 505 (2)இன் கீழ் சமூக மோதலை உண்டாக்க முயற்சித்தாக குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
விசாரணைக் கைதிகளையும், சிறு குற்றங்களுக்காக சிறையிலுள்ள கைதிகளையும் பிணையிலோ, முன் விடுதலையிலோ சிறையிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, முன் விடுதலை – பிணை விடுதலை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அரசு, பீமா கொரேகான் வழக்கில் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கல்வியாளர் பேராசிரியர் கவுதம் நவலாக்கா ஆகியோரை கைது செய்திருக்கிறது. இதே வழக்கில் மக்கள் கவிஞர் வரவரராவ், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் ஃபரைரா, கோன்சல்வஸ் உள்ளிட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் கொடிய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பாய்ந்திருக்கிறது.
அதேபோல், ஊடகவியலாளர் என்ற வகையில் செய்தி வழங்கும் தனது கடமையைச் செய்த இந்து செய்தியாளர் அஷிக், ஒளிப்பட ஊடகவியலாளர் ஜாஸ்ரா ஆகியோர் சம்மு காசுமீர் மாநிலத்தில் இதே UAPA சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்கள் வளாகத்திற்குள்ளேயே போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.
முகநூல் பதிவுகளுக்காக பல பேர் மீதும் அன்றாடம் கொடிய வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மக்கள் கவனம் கொரோனா நெருக்கடியில் இருக்கும்போது, நாடு முழுவதும் முழு முடக்கத்தில் இருக்கும்போது, எந்த வகை சனநாயக வழிப்பட்ட எதிர்ப் போராட்டங்களையும் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இந்த சூழலைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி அரசும், மாநில அரசுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது ஆரியத்துவ அடக்குமுறைப் பயணத்தில் நரேந்திர மோடி இன்னும் தீவிரமாகச் செயல்படுவார் என்பதன் அறிகுறியாகவே இந்தக் கைதுகள் உள்ளன.
இந்திய அரசு இந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் - 5
---------------------
இந்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை
திரும்பப் பெற வேண்டும்!
இந்திய அரசு நடப்பிலுள்ள மின்சார சட்டம் – 2003இல் திருத்தங்கள் செய்வதாகக் கூறி, முற்றிலும் புதிய சட்டமாக “மின்சாரத் திருத்தச் சட்ட வரைவு – 2020” (Electricity (Amendment) Bill, 2020) முன்வைத்திருக்கிறது.
ஏற்கெனவே, மின்சார உற்பத்தி பெருமளவு தனியார்மயமாகிவிட்டது. அதிக விலை கொடுத்தும், உற்பத்தியும் வழங்கலும் நடக்காத காலங்களிலேயே தக்க வைப்புக் கட்டணம் (Retaining Charge) என்ற பெயரில் அரசுப் பணத்தை வாரி வழங்கியும் தனியார் நிறுவனங்கள் ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இதுவரை பெருமளவு மின்சார வழங்கல் என்பது அரசு நிறுவனங்களின் வழியாகவே நடந்து வருகிறது.
இந்தப் புதிய வரைவு இதையும் தனியாருக்கு வழங்க ஏற்பாடு செய்கிறது. வீடுகளுக்கும், தெருக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்குவதை தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விட இத்திருத்தச் சட்டம் வழி ஏற்படுத்துகிறது.
வீடுகளுக்கு மானியக் கட்டணத்திலும், வேளாண்மைக்கும் குடிசை வீடுகளுக்கும் கட்டணமின்றியும் மின்சாரம் வழங்கும் மானிய முறையை (Cross Subsidy) முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் நுகர்வோரிடம் முழுச் செலவையும் கட்டணமாக வசூலித்துவிட வேண்டுமென்றும் இத்திருத்தச் சட்டம் ஆணையிடுகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக மின்சார உற்பத்தி – வழங்கல் அனைத்தையும் மாநில அதிகாரத்திலிருந்துப் பறித்து, இந்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்கிறது.
“தேசியக் கல்விக் கொள்கை” வழியாக செய்திருப்பது போலவே, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே மாநில அதிகாரத்திலுள்ள மின்சாரம் என்பதை முற்றிலும் இந்திய அரசின் அதிகாரத்திற்குப் பறித்துக் கொடுப்பதை இத்திருத்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, மாநில அதிகாரத்தைப் பறிக்கிற - மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் கிடைப்பதைத் தட்டிப் பறிக்கிற – மின்சார உற்பத்தியையும், வழங்கலையும் முற்றிலும் தனியார்மயமாக்குகிற இப்புதிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் 2020-ஐ இந்திய அரசு கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இதை முற்றிலும் எதிர்க்க வேண்டுமெனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!
தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மின்சார சட்டத்திருத்தம் – 2020-ஐ எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!
தீர்மானம் - 6
---------------------
டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக!
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளை மூடியதனால், குடிப்பழக்கத்திலிருந்த பெரும்பாலோர் குடியைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மீண்டும் குடிகாரர்களாக மாற்றவும், இளைஞர்களை புதிய குடிகாரர்களாக உருவாக்க வாய்ப்பளிக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!
அதேபோல், தமிழ்நாட்டிலுள்ள சாராய உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் இப்போது மூடியுள்ளதுபோல் நிரந்தரமாக மூடிவிட ஆணையிட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment