ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! கி. வெங்கட்ராமன் அறிக்கை!



சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது
கொலை வழக்குப் பதிவு செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளத்தில், கைப்பேசிக் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, மரணமடைந்த செய்தி, தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்றும், மூடச் சொன்னதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்றும் குற்றச்சாட்டி கைது செய்வது, அடித்துக் கொல்வது என்று தொடங்கிவிட்டால் – தமிழ்நாட்டின் எந்த சிறு நகரத்திலும்கூட வணிகர்கள் கடை நடத்த முடியாது. மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்த முடியாது!
காவல்துறையினர் தனது தந்தை ஜெயராஜை அடிப்பதைத் தட்டிக் கேட்டதற்காக, அவரது மகன் பென்னிக்ஸ் அடிக்கப்பட்டு, இருவரும் 19.06.2020 அன்றிரவு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேஷ் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறையினரால் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்; கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பென்னிக்சின் ஆசனவாயில் தடியை செருகி அடித்துள்ளனர்.
அடுத்த நாள் (20.06.2020) காலை சாத்தான்குளம் நீதிமன்ற நடுவரிடம் நேர் நிறுத்தி, நீதிமன்றக் காவல் ஆணை பெற்றுள்ளனர். நேர் நிறுத்தப்பட்ட போதே, இவ்வளவு சித்தரவதைக்கு உள்ளான ஜெயராஜயையும், பென்னிக்சையும் காவல்துறையினர் அடித்தார்களா என்ற வழக்கமான கேள்வியைக் கூட கேட்காமல், எந்திர கதியில் நீதிமன்றக் காவலுக்கு சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் ஆணையிட்டது வியப்பளிக்கிறது.
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரில் பென்னிக்ஸ் 22.06.2020 அன்றிரவும், செயராஜ் 23.06.2020 அன்று காலையும் அடுத்தடுத்து மரணமடைந்திருக்கிறார்கள். வணிகர்களும், பொது மக்களும் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டம் நடத்தி, அப்போராட்டம் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களுக்குப் பரவத் தொடங்கிய பிறகே, உயரதிகாரிகள் தலையிட்டு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் ஆகிய இருவரையும், இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்தும், காவல் நிலைய ஆய்வாளர் சிறீதரை பணியிடமாற்றம் செய்து, காத்திருப்புப் பட்டியலில் வைத்தும் ஆணையிட்டுள்ளனர்.
செயராஜின் மனைவி செல்வராணி அளித்த மனுவின் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று மருத்துவர்களைக் கொண்டு காணொலிப் பதிவோடு உடற்கூராய்வு செய்யும்படி ஆணையிட்டிருக்கிறது.
இன்று (24.06.2020) இச்சிக்கல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்விருவர் குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிப்படி அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இது வரவேற்கத்தக்கது! ஆனால், இந்நிகழ்வு குறித்து முதலமைச்சரின் அறிக்கையில் கண்டுள்ள விளக்கம் காவல்துறைத் தரப்பினர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது முதலமைச்சரின் பக்கச்சாய்வைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச்சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே இறந்துதான் அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அறிக்கையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவரது பக்கச்சாய்வுக்கு எடுத்துக்காட்டு!
தமிழ்நாடு முதலமைச்சரும், அரசும், தொடர்ந்து காவல்துறையின் அடாவடிக்குத் துணை போவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சென்ற வாரம் - தான் கைது செய்து இழுத்து வந்தவரை அடித்துத் துன்புறுத்தி சாகடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அப்பகுதியில் உள்ளது.
காவல்துறையினர் காசு கொடுக்காமல் கைப்பேசி கேட்டதால்தான் செயராஜுடன் வாக்குவாதமே ஏற்பட்டது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். காவல்துறையின் சட்ட மீறல்களை தமிழ்நாடு அரசு அவ்வப்போது தட்டிக் கேட்டிருந்தால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபட மாட்டார்கள். சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகாவது தமிழ்நாடு அரசு தனது இப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உறுதியாக வழக்கு நடத்த வேண்டும். அதைவிடுத்து, பணியிட நீக்கம் செய்வது, இடமாற்றம் செய்வது என்பதோடு நிறுத்திக் கொண்டு, வழக்கமான வழியில் செயல்பட்டால் காவல்துறையில் உள்ள சிலரின் அடாவடி இதுபோலவே தொடரும்.
எனவே, தமிழ்நாடு அரசு சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலையில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் மற்றும் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து - சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.