“காசுமீரின் சிறப்பதிகாரம் பறிக்கப்பட்டதை பரூக் அப்துல்லா கட்சி எதிர்க்கவில்லை” ரூகுல்லா மேதி நேர்காணல் - பட்டியூர்ப் பாவலர்
“காசுமீரின் சிறப்பதிகாரம் பறிக்கப்பட்டதை பரூக்
அப்துல்லா கட்சி எதிர்க்கவில்லை”
ரூகுல்லா மேதி நேர்காணல்
தமிழாக்கம்: பட்டியூர்ப்
பாவலர்
தனிநாடாக இருந்த சம்மு காசுமீரை இந்தியாவுடன் 1948-இல் இணைத்துப் போடப்பட்ட ஒப்பந்தப்படி, அம் “மாநிலம்” சிறப்புரிமைகள்
சிலவற்றைப் பெற்றிருந்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 வழங்கிய அச்சிறப்புரிமையை பா.ச.க. ஆட்சி 2019 ஆகத்து 5 அன்று நீக்கியது. சம்மு காசுமீர் மாநிலத்தை,
இரண்டு ஒன்றிய
மண்டலங்களாக மாற்றியது. அத்துடன் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுங்கட்சிகளான தேசிய
மாநாடு, மக்கள் சனநாயகக்
கட்சி முதலியவற்றின் தலைவர்களை வீட்டுக் காவலிலும், சிறைக் காவலிலும் அடைத்தது.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களை பா.ச.க. ஆட்சி அண்மையில் விடுதலை செய்தது.
அக்கட்சித் தலைமை 370 சிறப்புரிமையை
மீட்கக் குரல் கொடுக்கவில்லை - அதற்கு முதன்மை கொடுக்காமல், தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டுகிறது
என்ற எதிர்ப்புக் குரல் கொடுப்போரில், அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் ரூகுல்லா மேதியும் ஒருவர். ரூகுல்லா மேதியின்
நேர்காணலை “தி வயர்”
(The Wire) என்ற
இணைய இதழ் (24.05.2020) வெளியிட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட இனங்களின் உரிமை மற்றும் இறையாண்மை மீட்பில் தேர்தலின் பாத்திரம்
என்ன என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தும் செவ்வி இது.
தி வயர் முன்னுரை : ரூகுல்லா மேதி மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக
இருந்தவர். தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் அமைச்சர். இப்போது இக்கட்சியின்
அதிகாரம் பெற்ற முதன்மைப் பேச்சாளர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லாவின் மதியுரைஞரான தன்வீர்சாதிக் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையைத் திறனாய்வு செய்து சுட்டுரை வெளியிட்டார்
ரூகுல்லா மேதி. அதில், “நான்காம் தலைமுறை
அலைப்பேசி இணைப்பு, நாம் அரசியல் பணி
தொடங்குவதற்கு அவர்களின் “அனுமதி” முதலியவை தந்தால் போதும்; பிறகு எல்லாம் சரியாகி விடுமா?” என்று கேட்டிருந்தார்.
“ஆகத்து - 5 இல் காசுமீர்
மீது இந்திய அரசு எடுத்த முடிவு, அதன்பிறகு அது
எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை பற்றி எதுவும் கூறாமல் கட்சி அமைதி காப்பது ஏன்?”
என்றும் கேட்டார்.
“சட்டப்பேரவைத் தேர்தலைக் கோருவது நமது முதல் குறிக்கோளாக இருக்கக் கூடாது.
காசுமீர் மீது தில்லி நடத்திய கொடுந்தாக்குதலை எதிர்ப்பதிலிருந்து நமது செயல்பாடு
தொடங்க வேண்டும்” என்றும் ரூகுல்லா
மேதி கூறியிருந்தார்.
அச்செவ்வி வருமாறு :
வினா : உங்கள் கட்சிக்காரரின் செய்தித்தாள் கட்டுரைக்கு, அது முன்வைக்கப்பட்ட முறைக்குக் கடும்
எதிர்ப்புத் தெரிவித்திருந்தீர்கள். ஏன்?
அவர் (தன்வீர் சாதிக்) எழுதியது எனக்கு மன உளைச்சலாக இருந்தது. 2019 ஆகத்து 5 என்பது சம்மு காசுமீர் மக்கள் மீது
கொடுந்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். எங்கள் கட்சி தன்னாட்சி நிபந்தனையுடன்
இந்தியாவுடன் இணைந்திருப்பது, எங்களுக்கு
இந்திய அரசு உறுதி அளித்தவற்றை அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுவது ஆகிய இலட்சியங்களை
முன்வைத்து வந்தது. இந்த நிபந்தனைகளுடன் நாங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டோம்.
மேற்கண்ட இலட்சியங்களைத் தேசிய மாநாட்டுக் கட்சி தொடர்ந்து எழுப்பி வந்தது. 2019 ஆகத்து 5-இல் நடந்தது சட்டவிரோதச் செயல்; சனநாயகப் படுகொலை; மேற்கண்ட இலட்சியங்களைக் கொலை செய்ததும் ஆகும்.
நான் எதிர்பார்த்தது என்னவென்றால் அனைத்து அரசியல் கட்சிகளும், சம்மு காசுமீரின் அனைத்து மக் களும் மேற்கண்ட
சனநாயகப் படுகொலைக்கு எதிராகப் பேச வேண்டும் என்பதே! ஒரு கட்சி என்ற முறையில் எங்கள்
கட்சிக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
மக்கள் நம்மை விரும்பினாலும் பழித்தாலும் தேசிய மாநாட்டுக் கட்சியிடமிருந்து
அவர்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இத்தனை மாதங்களாக நாம் எதுவும்
பேசாமல் அமைதி காக்கிறோம். ஆனால், அவசரமாக என்
நண்பர், இணக்கம் காண்பது
பற்றி எழுதுகிறார்; ஆகத்து 5
-இல் என்ன நடந்தது,
அரசமைப்பு உறுப்பு 370 என்ன ஆனது என்பது பற்றி எதுவும்
குறிப்பிடவில்லை. இணைய தளம் மற்றும் குடியிருப்புச் சட்டம் குறித்து சமரசம் காணப்
பேசுகிறார்.
இவ்வாறானவற்றில் சமரசம் காண முனைவது வெளி யில் எப்படிப் பார்க்கப்படும்?
நாம் 370-ஐக் கைவிட்டு விட்டோம்; ஒரு எதிர்ப்பைக் காட்டக் கூட நாம் விரும்ப
வில்லை என்று பார்க்க மாட்டார்களா? இதன் பொருள்
ஆகத்து 5-க்குப் பிறகு
நடந்தவற்றை நாம் ஏற்றுக் கொள் கிறோம் என்றாகும். எனவே எனது எதிர்வினையைத்
தெரிவித்தேன்.
அதேவேளை இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கருதுகிறேன். கட்சி, 370 நீக்கம் குறித்த தனது கருத்தை இனிமேலாவது பேச
வேண்டும். இதுபற்றி கட்சியின் கூட்டுக் கருத்து என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், எனது தனிப்பட்ட கருத்து
தன்வீர் சாதிக் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், நான் 70 ஆண்டுகளாக நாம் பேசி வந்த இலட்சியங்களை ஏற்று நிற்கிறேன்.
வினா : ஆனால், உங்கள் கட்சி
இதுபற்றி (370 நீக்கம் பற்றி)
தனது நிலைபாட்டைத் தெளிவு படுத்தவில்லையா?
தன்வீர் சாதிக் கருத்தை மக்கள் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஏனெனில்,
தன்வீர்தான் முதன்மை
மதியுரைஞர் (ஓமர் அப்துல்லாவுக்கு)! தர்க்கப்படி பார்த்தால் நான் தேசிய மாநாட்டுக்
கட்சியின் முதன்மைப் பேச்சாளர் (Spokesperson) என்ற முறையில் எனது மறுப்பு கட்சியின்
அறிக்கை போன்றதாகும்.
வினா : உங்களின் இந்த அறிக்கை கட்சியின் தோற்றத்தில் கீறல் உண்டாக்கவில்லையா?
உண்மைதான். அரசியல் மதியுரைஞர் என்ற முறையில் தன்வீர் அறிக்கைதான் கட்சியின்
நிலைபாடு என்று ஆகும். இது கட்சியைப் பற்றி குழப்பத்தையும் தவறான புரிதலையும்
உண்டாக்கும். அதனால் நான் எதிர்வினை ஆற்றினேன்.
வினா : சம்மு காசுமீரின் சிறப்புரிமை நீக்கப் பட்டது பற்றி கருத்துக் கூறாமல்,
கட்சி அமைதி காக்கிறது
என்கிறீர்கள். கட்சி ஏன் அப்படி அமைதி காக்கிறது?
தனிப்பட்ட முறையில் இதுபற்றி பேசினேன். இதற்குக் கட்சி ஒரு விளக்கம்
கொடுத்தது. அதில் ஒரு பாதியை நான் ஏற்கிறேன்; மறுபாதியை ஏற்கவில்லை. கட்சியின் தலைமைச்
செயற்குழுதான் இதுபற்றி முடி வெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுசரிதான்;
ஆனால் ஆகத்து 5-இல் நடந்தது தவறு என்று கூற செயற்குழு கூட
வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. அது சனநாயகப் படுகொலை என்பது எளிதில்
எல்லோருக்கும் விளங்கும்!
வினா : ஆகத்து 5 பற்றி கட்சித்
தலைமை அமைதி காப்பதும், அதன் பிறகு
புதுதில்லி - காசுமீரில் அரங்கேற்றிக் கொண்டிருப்பதும், உங்களுக்குக் கவலை அளிக்கிறதா?
எங்கள் அமைதியானது கட்சிக்கு சேதம் விளைவிக்கிறது; எதிர்விளைவுகளை உண்டாக்குகிறது. இந்திய அரசோ
தனது திட்டத்தைச் செயல்படுத்திக் கொண் டுள்ளது. அவர்கள் தீவிரமாகத் தங்களது
சித்தாந்தத்தைச் செயல்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிர்ப்பாரின்றி களம் திறந்து
கிடக்கின்றது. அங்கு நிர்வாகம் அலங்கோலமாக நடக்கிறது. எங்கள் தரப்பில் ஏராளமான
வெற்றிடம்; ஆர்.எஸ்.எஸ்.
தரப்போ தனது சித்தாந்தத்தை அங்குலம் அங்குலமாக செயல்படுத்திக் கொண்டுள்ளது.
வினா : எனவே, அமைதி காப்பது
கொடுந் தாக்குதலுக்கான எதிர்வினையாகாது என்று கருதுகிறீர்கள்?
ஆம். அமைதி காப்பது எதிர்வினை ஆகாது. அவர்கள் தங்கள் திட்டங்களை வேகமாக
நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுக்க அங்கு யாருமில்லை.
வினா : இப்போது உங்கள் கட்சி என்ன செய்ய வேண்டும்?
என்னென்ன வாய்ப்பும் வழியும் இருக்கின்றனவோ அவற்றின் வாயிலாக நாம் பேச
வேண்டும்; செயல்பட வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து.
நாம் அமைதி காத்து, முடிவற்ற
கொடுந்தாக்குதலுககு உடந்தை ஆகிவிடக் கூடாது.
வினா : நீங்கள் சிறைக்குப் போகத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இதன்
வழியாக என்ன கூற வருகிறீர்கள்?
அரசியல் வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று தன்வீர் (தமது கட்டுரையில்)
கூறியுள்ளார். இதன் பொருள் என்ன? தேர்தல்களில்
போட்டியிடுவதும் தலைமைச் செயலகத்திற்குச் சென்று நாற்காலியில் உட்காருவதும்
மட்டும்தான் அரசியலா? இல்லை. தேர்தலில்
பங்கெடுப்பது மட்டுமே அரசியல் வழிமுறை அன்று. நீங்கள் உங்களுடைய ஒரே கொள்கை
தேர்தல்கள்தான் என்று கருதினால், தில்லிக்குப்
போங்கள், அவர்களைத் தொழுது
அதற்கான செயல்பாட்டைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
ஆனாலும் அறிவாற்றலும் மனச்சான்றும் சொல் கின்றன - தேர்தல்களும் அதிகார
விளையாட்டுகளும் மட்டுமே அரசியல் வழிமுறை அல்ல என்று! உங்கள் சித்தாந்தத்தை
வெளிப்படையாகப் பேச வேண்டும்; உங்கள்
எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இதன் விளைவாக நீங்கள் சிறையில் தள்ளப்படலாம்.
சிறைக்குப் போவதும் அரசியல் செயல்முறைதான்.
அது ஓர் அரசியல் செய்தி!
அரசியல் செயல்பாட்டைத் தொடங்கும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும்; அதில் போட்டியிட எங்களை அனுமதிக்க வேண்டும்
என்று தன்வீர் சாதிக் தில்லியைக் கேட்டுக் கொண்டால், எங்களின் அனைத்துக் குறிக்கோள்களையும் அவ்வாறு
கேட்பது வீழ்த்தி விடும். நமது இலட்சியங்களையும் வழிமுறைகளையும் தேர்தல்களும்
நாற்காலிகளும் மட்டும்தான் என்று சுருக்கிவிடக் கூடாது.
- தமிழாக்கம் : பட்டியூர்ப்பாவலர்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சூன் 2020 இதழில் வெளியான கட்டுரை
Leave a Comment