ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்க்கடவுள் முருகன் முருக வழிபாட்டுப் பரவல் சுமேரிய ஒப்பீடு - முனைவர் பூரணச்சந்திர ஜீவா அவர்களின் கட்டுரை!


''தமிழ்க்கடவுள் முருகன்
முருக வழிபாட்டுப் பரவல்
சுமேரிய ஒப்பீடு .

தமிழர் வழிபாட்டைத் தேடுதல்
பொய்க்கதைகள் விலக்கல்  
முனைவர் பூரணச்சந்திர ஜீவா அவர்களின் கட்டுரை!    எக்காலத்தும் தமிழர் - வழிபாடு மெய்யியல் என்பது இறை நம்பிக்கை உலக நன்மை என்பதையே மையமாகக் கொண்டிருந்தது . அவர்களது வரலாறு கூறலில் புனைகதைகள் இல்லை; இலக்கியம் பாடுவதில் பொருந்தாக் கற்பனைகள் இல்லை; வாழ்வியல் கோட்பாடுகளில் இயற்கை மரபிற்கு மாறானது எதுவும் இல்லை . வழிபடும் கடவுளர்கூட எளிய தோற்றமும் , இயல் பான தோற்றப் பொலிவும் கொண்டு விளங்குகின்றனர் .

தமிழ்க் கடவுளர் அனைவரும் ஒரு புதிய நாகரிக உருவாக்கத்தின்போது புதிதாக அமைத்துக் கொள்ளப்பட்டோரும் அவ்ல. தமிழர் தொல்பழங்காலம் தொட்டு வளர்ந்து வந்த அவர்களது நாகரிக வளர்ச்சிப் போக்கில் , அவர்கள் கடந்துவந்த சமுதாய வாழ்வின் அடையாளக் குறியீடாகவே அவர்களது கடவுளர் உள்ளனர் என்பதே உண்மை . விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு மனிதனாக வாழத் தொடங்கிய பழங்கற்கால காடுறை வாழ்வின் பெண்ணின் தலைமைப் பண்பின் அடையாளமாகக் கொற்றவை பெண் தெய்வமாகவும் , பின்னர் கிமு 10,000 அளவில் பனியுகம் மறைந்து இதவெப்ப ஹாலோசின் காலத்தில் குகைகளில் இருந்து இறங்கிவந்து வேடனாக வேட்டை வாழ்வைத் தொடங்கியபோது முதல் ஆற்றல் கருவியாக, ஆயுதமாக வேலேந்திய வேட்டை வாழ்க்கையில் பல மனிதக் குழுக்களை எதிர்கொண்ட தலைமைப் பண்பின் அடையாளமாக வேலன் எனப்படும் முருகன் போர்க் கடவுளாகவும் , கிமு 8000 அளவில் புதியகற்காலத்திற்கு முன்னோட்டமாகத் தொன்றிய நுண்கற்கால ( microlithic ) நாகரிகத்தின் பண்பாட்டு வளர்ச்சியில் இறந்தோரைத் திறந்தவெளியில் எறிவதைத் தவிர்த்து நிலத்தைத் தோண்டிப் புதைப்பதும் அதன் அடையாளமாகக் கல்நாட்டி ஈமக் கடமை களைச் செய்து நினைவேந்தல் செய்யும் பண்பாட்டின் அடையாளமாக ஈமத்தாடியாம் ஈசகன் என்னும் சிவனும் தோன்றினர். அத்துடன் அக்கல்லெடுக்கும் வழிபாட்டின் தொடர்ச்சியே இலிங்க வழிபாடாக மாற்றம் கொண்டது .

உலகின் பண்டைக் காலம் தொட்டு நடந்த இறை உருவாக்கத்தின் சமய வரலாறு இதுதான் . என்றாலும் தமிழினம் மட்டுமே இறை உருவாக்கத் தின் வரலாற்றுப் பதிவுகளைத் தன்னுடன் கொண்டுள்ளது. பிற மக்கள் இனங்கள் புதிய வரவான கருத்தாக்கங் களின் காரணமாக தங்கள் வரலாற்றுச் சுவடுகளை இழந்துவிட்டன என்பதே உண்மை . ஆரிய இனம்கூட சிந்து - கங்கைச் சமவெளி களில் தங்கள் இறை சமய வழிபாடுகளை இழந்து , தொடர்ந்து அங்கே எழுச்சியுற்ற புத்த சமண சமயங்களின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளது . ரிக் வேதம் பாடிக்கொண்டு இங்கு வந்தபோது இருந்தது வேறு இன்றிருப் பது வேறு தெய்வங்களே. ஆனால் தொல்பழங்கால இயற்கை வாழ்வின் படிநிலை வளர்ச்சியில் தங்களது சமுதாய உற்பத்திக் கருவிகளுடன் தொடர்புடையதாக உருவாக்கிய இறை வடிவங்களைத் தமிழர் மறக்கவில்லை . உணவு தேடுதல் , வீட்டு விலங்குகளை வளர்க்கும் சமுதாய வாழ்வின் அடையாளமாகத் தாய்த்தெய்வமான கொற்றவ்வையைக் கோட்டுக் கலைமான் மீதேற்றி வழிபடுகிறான் தமிழன். கூரிய வேலைத் தனது உற்பத்திக் கருவியாகக் கொண்ட வேலனும, கற்கருவிகளையே தங்கள் உற்பத்திக் கருவியாகக் கொண்டு இருந்த நிலையில் அக்கல்லையே செழுமையின் அடையாள மாகக் கொண்ட சிவனும் இன்றளவும் வழிபாடு பெறுகின்றனர். செழிப்பின் அடையாளமான சிவனே பின்னர் வளர்ச்சியுற்ற வேளாண்மை, கால்நடை வளர்ப்புச் சமுதாயத்தில் பெருந்தோற்ற மாக மாற்றமுறுவதைச் சிந்து - சுமேரியச் சமுதாயங்களில் காண்கி றோம். இவ்வாறு சமுதாயத்தின் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியோடு பொருந்த சமய - வழிபாட்டு முறைகளை உருவாக்கி அமைத்துக் கொண்ட தமிழ் இனமே உலகின் முத்தெய்வ வழிபாட் டின் ஊற்றுக் கண்ணாக உள்ளது. மேலும் இத்தகைய இயன் முறையாக உருவாக்கம் பெற்ற இறைவழிபாட்டு முறை தமிழினத்தின் நாகரிகப் பரவலுக்கு இயைந்ததாக, ஏற்புடையஜ தாக இருந்ததால் அவர்களுடன் உலகம் முழுதும் பரவிற்று .

அண்மையில் ஒரு இடதுசாரி எழுத்தாளர் முருக வழிபாடு சீனாவில் இருந்தது , சுமேரியாவில் எகிப்தில் இருந்தது உலகம் முழுதும் இருந்தது; அதனைத் தமிழ்க் கடவுளென்ற சிறு சிமிழிற்குள் அடைக்காதீர்கள்; பழனி ஆண்டி முருகனையே உருவாக்கியவர் போகர் என்ற சீனத்துச் சித்தர் என்கிறார் . பழனி முருகனை என்னவோ போகரே அழைத்து வந்தது போலவும் எழுதுகிறார். மலை மீது முருகன் இருப்பதும், அவன் மலையும் மலை சார்ந்தக் குறிஞ்சி நிலத் தலைவனாக இருப்பது எங்கே சீனாவிலா - எகிப்திலா ? அல்லது சீனச் சித்தர் இங்கு வரும்போதே சித்தராக வந்தாரா ? அவர் காலம் என்ன ? அவரது பதிவில் ஆய்வுணர்வே இல்லை. நாம் இன்னும் எவ்வளவு காலம் மண்ணுடன் ஒட்டாமல் வானத்திலேயே உலவிக் கொண்டு இருப்பது ? முருகன் தமிழ்க்கடவுள் என்பதில் ஐயமென்ன ? உலகம் முழுதும் பரவிய அவ்வழிபாட்டின் அடிப்படை என்ன என்று காண வேண்டாமா ?

முருக - வேலன் வழிபாட்டின் முதல் பதிவு இந்தியாவுக்கு அப்பால் வரலாற்றுப் ஏடுகளில் கிமு 4500 அளவில் சுமேரியாவில் உள்ளது. அங்கு BAL பால் - பாலன் என்ற பெயரில் கடவுளாகக் காண்கிறோம். அவனுக்குச் சுமேரியச் சமவெளியில் மலைகளில்லா இடங்களில்கூட செயற்கை மண்மேடு அமைத்துக் கோயில் கட்டினர். ஆய்வா ளர்கள் இம்மரபை உருவாக்கிய மக்கள் மலைக்கோயில் அமைக்கும் மரபுடைய இடத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறு கின்றனர். கிமு 4500 அளவில்தான் நாம் காணும் சுமேரிய நாகரிகமே ( அல் உபைது அகழாய்வுகள் ) தோன்றுகிறது . கிமு 300 இல் சுமேரியத் தொல்வரலாற் றையும், மரபுச் செய்திகளையும் ஆராய்ந்து சுமேரிய வரலாறு எழுதிய Bal பால் கோயில் பூசாரி பெரோசஸ் Berossus என்பவர் சுமேரியர் ஆதிகாலத்தில் நாகரிகம் அற்ற காட்டாண்டிகளாக Brutes இருந்தனர் என்றும் பாரசீக வளைகுடாவிற்கு அப்பாலிருந்து கப்பலில் வந்த பாதி மீனும் பாதி மனித உடலும் கொண்ட மனிதர்களே அவர்களுக்கு வேளாண்மை , எழுத்து முறை , வழிபாடுகள் , உலோகக் கலை , நீதி - சட்டம் , வானியல் போன்ற அனைத்துக் கலைகளையும் கற்பித்தனர் என்று கூறுகிறார் . இவ்வாறு வந்த ஏழு குழுக்க ளில் இரண்டைப்பற்றி Berossus அவர்களும் , சுமேரிய வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் Paschal chronicle என்னும் நூல் அவ்வாறு வந்த அர்பாசட் கோபுரம் கட்டும பணி செய்த வானியலார் ஒருவரைப் பற்றியும் கூறுகிறது . அவர்கள் மூவரும் தமிழரே என்பதை அவர்களது தூய்மையான தமிழ்ப் பெயர்களே உணர்த்துகின்ற . ஒருவர் Oannes ஓவண்ணஸ் . es என்னும் கிரேக்க விகுதியை நீக்கினால் ஓவண்ண - ஒவ + அண்ணல். ஓவர் = கம்மாளர், உலோகக் கலை வல்லுநர் , தொழில்வினைஞர் . சங்க காலத்தில் இவ்வாறு தமிழ்த் தொழில் வினைஞர் அல் கடிம் என்னும் எகிப்து துறைமுக சென்று பணியாற்றியது போல அப்போது கிமு 4500 அளவிலும் சென்றுள்ளனர் . அண்ணல் உயர்வு சிறப்புப் பெயர் . ஆகவேதான் மரியாதைப் பெயராக்க விகுதியுடன் ஓவண்ணஸ் என்றனர் . இரண்டாம் குழுத்தலைவர் பெயர் ஓடக் கோன் Ota kon என்பது . ஓடம் = படகு, கப்பல். கோன் = தலைவன். இவர்பெயரும் ஓடண்ணா என்றிருக்கலாம் . சிந்து முத்திரைகளில் ஓவண்ண , ஓடண்ணா ஆகியோர் குலவழிபாட்டிற்கு உரியோராக உள்ளனர் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும் . மூன்றாவது பெயர் அந்துபரியஸ் Andubaries என்பது . ies என்ற விகுதியை நீக்கினால் அந்துபர் ஆகும். அந்துபர் = அந்துவர் . அந்துவன் என்னும் இயற்பெயர் கொண்ட மனிதர . சேரர் குடிப் பெயர் . இவர்கள் பெயர்களில் சமஸ்கிருதத் தாக்கமோ , பிற்காலப் பெயர்கள் போல தமிழ்த் தொடர்பற்றதாகவோ இல்லை .

கிமு 4500 அளவில் சிந்துவெளி நாகரிகம் கிடையாது. அது கிமு 3300 அளவிலேயே கால் கொள்ளத் தொடங்கியது. கிமு 2600 இல் உயர்நிலை முதிர் சிந்து நாகரிகமாக உயர்ந்தது. ஆனால் சிந்துக்கு முந்திய நாகரிகமான பிராகுயி என்னும் வடதிராவிடத் தமிழின் கிளை மொழி வழங்கிய பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ளதும் மொகஞ்ச தாரோவிலிருந்து 250 கி மீ தொலைவி லுள்ளதுமான மெகார்கர் என்னுமிடத்தில் ஒப்பற்ற நாகரிகம் ஒன்று நிலவியது . உலகின் மிகவும் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. அந்நாகரிகம் போலன் ஆற்றின் கரையில் கச்சி வெளியில் Kachi plain கிமு 8000 அளவில் அப்பகுதி வேடர்களால் உருவாக்கம் பெற்றது . கிமு 7000 அளவில் புதியகற்கால நாகரிகமாகத் தொடங்கி கிமு 6500 - 5500 அளவில் செம்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டு செம்புக்கற்காலமாக உயர்ந்தது. வேளாண்மை சிறந்திருந்தது . இவர்களின் வேளாண் உற்பத்தி வளர்ச்சி நிலையில் நீர்வளம் நிலவளம் தேடியே அவர்கள் கிழக்கே சென்று 250 கிமீ தொலைவில் சிந்து ஆற்றங் கரையில் சிந்து நாகரிகத்தை உருவாக்கினர் . உலகளவில் வணிகம் செய்தனர். அக்காலத்தில் சுமேரியாவுக்கு அண்மை யில் பாரசீக வளைகுடாவுக்கு அப்பால் மக்ரான் கடற்கரையோரம் இருந்தது இந்த நாகரிகமே. அதனுடன் - சுமேரியா - சிந்து மக்கள் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தனர் . இங்கிருந்து வணிகப் பொருட் களைக் கொண்டு சென்றனர் . எள் எண்ணெணய் வணிகம் சிறப்புற்றிருந்ததால் சுமேரிய மொழியில் தமிழ் எள்ளு என்பது எள்ளு - இள்ளு என்றே அங்கு வழங்கியது. இங்கிருந்தே மெகார்கர் தமிழர்கள் சுமேரியா சென்றிருக்க வேண்டும் 

இவர்கள் அழகிய வடிவுடைய தாய்த் தெய்வங்களையே வணங்கினர் . அப்போது அங்கே முருகன் , கொற்றவை, சிவன் வழிபாடு நிலவியதால்தான் அதனை மெகார்கர்கள் சுமேரியருக்குக் கற்பித்திருக்க வேண்டும் . அவர்களிட மிருந்தே சுமேரிய நாகரிக மக்களும் இந்த முத்தெய்வ வழிபாட்டைக் கற்றிருக்க வேண்டும் . சுமேரியர் பால் என்னும் குழந்தைக் கடவுளின் தந்தை பிறைக் கடவுளையும், தாயான மலைமகளையும் வணங்கினர். பிறைக் கடவுளுக்கும் மலைமகளுக்கும் கோயிலில் திருமணம் திருக்கல்யாணம் செய்து வழிபட்டனர் . பால் என்னும் குழந்தைக்டவுளுக்குப் பிறந்தநாள் விழா எடுத்தனர் . சிந்து மக்களைப் போலவே பெண் தெய்வம் அமா Ama ( சிந்து : அமய் ) எனப்பட்டது . சிந்து முத்திரை அமய் - ஆர்தனன் ( அம்மையப்பன் ) என்று இறைவியை அமை என்கிறது . அமை = அம்மை .

இந்த பால் என்னும் குழந்தைக் கடவுள் வழிபாடு சுமேரியா வழியே பாலஸ்தீனம் சென்று ன்னரும் சிந்து நகரங்களில் இருந்து எகிப்துக்கு நேரடி கப்பல் வணிகம் நடந்ததாகத் தெரிய வில்லை . பாலஸ்தீனியர் - பொனிசியர் - அப்போது கடல் வணிகர்களாகத் தலையெடுக்க வில்லை . கிமு 2350 அளவில்கூட சுமேரியப் பேரரசன் சார்கோன் மேற்பார்வையிலேயே சிந்துத் தமிழருடன் கடல் வணிகம் நடை பெற்றது . எகிப்தில் காணும் சிவலிங்க வழிபாட்டிற்கும் இதுவே காரணமாகும் . பாலஸ்தீனத்தில் Bal வழிபாடு சிறப்புற்றிருந்தது . அங்கே முருக வழிபாட்டுக்கான வாய்ப்பூட்டு குத்தும் அலகுகள் , சேவற் கொடி , மயில் வடிவங்கள் ஆகியன கிடத்துள்ளன . இவை வடிவழகிலும் , செய் நேர்த்தியி லும் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் கிடைத்த இத்தகைய வடிவங்களை ஒத்துள்ளன . பாலஸ்தீனத் தில் செம்பிலும் , தமிழகத்தில் இரும்பிலும் இப்பொருட்கள் கிடைத்துள்ளன . இவ்வழிபாடு இவ்வாறே சீனாவை யும் சென்ற டைந்திருக்க வேண்டும் .

நாம் சுமேரியாவில் கண்ட அதே முத்தெய்வ வழிபாடு சிந்துவிலும் உள்ளது . ஒரே முத்திரையில் வய மலை ஆகாவ்வன் என்று முருக வழிபாட்டை யும் , காட்டு மயிலவ்வய் என்று கொற்றவையும் , கரியநிற அய்யிட்ட எழுதப்பட்ட நாகக் கல் என்று சிவன் பற்றியும் கூறுகிறது. மேலும் இளங்கடவுள் மலையில் கோயில் கொண்டிருத்தல் பற்றியும், அவன் இளம் மழவு என்பதையும் கூறுவது இன்றும் வழங்கும் தமிழ்ப் பண்பாட்டை நாம் சிந்து எழுத்திலும் காண்கிறோம் . அங்கு முருகன் என்ற சொல் ஆளப்படவில்லை . அவனது இயற்பெயரான அயிலன் - வேலன் என்றே அழைக்கப்படுகிறான் . முருகன் என்பது , சிவனை சுந்தரர் என்று அழகுப் பண்புடன் வடமொழியில் அழைக்கிறார்களே அத்தகையது . ஆனால் தமிழ்க் கடவுளைத் தமிழால் முருகன் - அழகன் என்று அழகுபட அழைக்கின்றனர் . அவ்வாறே இளம் கடவுளான அவனது அழகிய வடிவழகின் அடிப்படையில் தமிழகத்தில் முருகன் என்பது பண்பு குறித்ததாயிற்று . சிந்து முத்திரைகள் அவனை வேலன் - அயிலன் என்றே அழைக்கின்றன . வேலன் என்பதே அவனது இறைமைப் பெயர் ஆகும். அவ்வாறே முருகன் கார்த்திகை மற்றும் செவ்வாய்க் கோளுடன் தொடர்புடையவன் ஆதலால் ஆரல் செவ்வாய் என்பதால் போர்த் தெய்வமான அவனை ஆரலன் என்று அழைக்கின்றனர் . குறிஞ்சித் தலைவன் ஆதலால் கார்த்திகையில் பிறந்த அவன் நாடன் என்று பெயர் பெறுகிறான் . அவன் அவுணன் எனப்படுகிறான் . அவுளன் ( அவுணன் ) என்றும் அழைத்தனர். ஆகவே அவுணனது அவ்வை என்றும், தந்தை இருணரது குழந்தையாக அயிலன் எனப்பட்டான் . அவுணர் என்போர் தமிழரே என முத்திரை காட்டுகிறது. செவ்வவாய்க் கோளுக்குரிய போர்த் தெய்வமாகை யால் முருகன் வய மலைம- வலிய போரிடுவோன் எனப்பட்டான் . இறைவன் இறைவி திருக்கல்யாண நிகழ்வு முத்திரையாகிறது . அவர்கள் வனம் சென்று ஆடும் வன விழாவில் வழிபடப் பெறுகின்றனர் . குழந்தைக் கடவுளுக்கு ஓலாட்டு என்னும் நிகழ்வை நடத்தினர். ஓலாட்டு = தாலாட்டு. அது ஓலாட்டின் தொன்மைப்பெயர். அதுவே முருகனது பிறந்த நாள்விழா என்பதை உணர்த்துகிறது. அதுபோல நாள் நாடன் என்ற முத்திரை நாடன் என்னும் காரத்திகை நாளின் நட்சத்திரத்தன்று கார்த்திகை விழாவுக்கு முத்திரை வழங்கப் பட்டதை உணர்த்துகிறது. கார்த்திகை விழா சிந்து நாகரிகக் காலம் முதல் வழங்குவதை இது காட்டுகிறது. புத்தரால் முருகன் விளக்கு விழாவைப் பெறவில்லை என்பது தெளிவு .

இதற்குமேல் சிந்து எழுத்தில் இல்லாததைக் கற்பித்து முருகனைப்பற்றிக் கூறுவன யாவும் பிராமணியப் புராணக் கற்பனையே. முருகன், சிவன் ஆகியோரைப்பற்றிய பொய்யான கற்பனைக் கதைகள் , ஆபாச நிகழ்வுகள் கொண்ட புராணங்கள் ஆகியவை தமிழரது அல்ல. எளமையும், இயல்புமே தமிழர் அறம். பொய்யான ஆபாசக் கதைகளையும், நம்ப முடியா கற்பனைகளையும் புறந்தள்ளித் தமிழர் இறையுருக்களையும், இறை வழிபாட்டு முறைகளையும் மீட்டெடுப்போம் .

அவரது முகநூல் பதிவிலிருந்து.......
https://www.facebook.com/poornachandra.jeeva/posts/294266521653495

3 comments:

  1. அற்புதமான கட்டுரை. தமிழினத்தின் தொன்மையும், அறிவார்ந்த வழிபாட்டு முறையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.மீண்டெழுகின்ற தமிழினத்தின் மேன்மைகள் போற்றப்பட வேண்டும்; காக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. படுசிறப்பானதொரு கட்டுரை.பழந்தமிழர் வழிபாட்டுக் கூறுகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தொல்காப்பியத்தில் சிவன் வழிபாடு பற்றிய செய்திகள் இல்லை.அதுபோல இக்கட்டுரையிலும் மாயோன் முதலான தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை.

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.