அரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!
அரியானா மாநில மண்ணின் மக்களுக்கே தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வலியுறுத்தும் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது என அம்மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் 06.07.2020 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.
உள்ளூர் மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அவசரச் சட்ட வரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் அரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில், அதற்குள் உள் ஒதுக்கீடு ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குசராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசில் 100க்கு 100 வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2018 பிப்ரவரி 3 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் முடிவுக்கிணங்க அணியப்படுத்தப்பட்ட மாதிரி வரைவுச் சட்டத்தை, பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 11.02.2018 அன்று நேரில் வழங்கினார்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பேரியக்கம் முன்வைத்த இக்கோரிக்கையை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.
தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் 100க்கு 100-ம் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று அரியானாவைப் போல், உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், இன்று வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், “தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கு வாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment