ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா? பெ. மணியரசன் கேள்வி!


ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல்
ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு
நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் கேள்வி!

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ஆதிக்கச் செருக்குடன் தமிழில் உள்ள ஊர்ப் பெயர்களை சிதைத்து, மனம்போன போக்கில் மாற்றி ஒலித்தார்கள். திருவல்லிக்கேணியை “ட்ரிப்ளிக்கேன்” (TRIPLICANE) என்றும், தூத்துக்குடியை “தூத்துக்கொரின்” (TUTICORIN) என்றும் மாற்றினார்கள். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினார்கள்.

ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்தச் சீரழிவுகளைப் போக்கிட, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர்ப்பெயர்களை தம்தம் தாய்மொழிகளில் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும் என ஆணைபோட்டுச் செயல்படுத்தியுள்ளார்கள். எடுத்துக் காட்டாக, கர்நாடகத்தில் ஆங்கிலயர் சிதைத்த பிஜப்பூர், குல்பர்கா, பெல்காம் முதலிய ஊர்களின் பெயர்களை முறையே பிஜப்புரா, கலபுர்க்கா, பெலகாம் என்று ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என அம்மாநில அரசு 2014 நவம்பர் 1-இல் ஆணையிட்டது.

ஆனால், “திராவிட இன” அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் மரபுப்படியான மாற்றங்களை ஊர்ப்பெயர்களுக்குச் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் எஸ்.டி.எஸ். முயற்சியின் பயனாய், மயூரம் – மயிலாடுதுறை என மாற்றப்பட்டது. அத்தோடு நின்று போனது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மெட்ராஸ் – “சென்னை” என மாற்றப்பட்டதோடு நின்று போனது. அதுவும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர் நீதிமன்றம் முதலியவற்றுக்குப் பொருந்தாது, அவற்றின் பெயரில் “மெட்ராஸ்” தொடர்கிறது.

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களை தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று ஆணையிடப்படும் என்ற அறிவிப்பை 2018 – 2019 நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்பணிக்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் வழியாக, தமிழ் முறைப்படி மாற்றம் செய்ய வேண்டிய ஊர்ப் பட்டியல்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு அதனை 01.04.2020 அன்று அரசிதழில் வெளியிட்டது. அவ்வாறு தமிழ்வழியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்கள் 1018. எடுத்துக்காட்டாக, எக்மோர் என்பது எழும்பூர் என்றும், சின்ஞ்ஜி என்பது செஞ்சி என்றும் ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அப்பட்டியலில் சில ஊர்ப் பெயர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப சரியான ஆங்கில எழுத்துகளில் மாற்றப்படவில்லை என்றும், அதைச் சரி செய்து இரண்டு – மூன்று நாட்களில் சரியான புதுப்பட்டியலை வெளியிடுவோம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன் 18.06.2020 அன்று அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக, வேலூர் என்பது VEELOOR (வீலூர்) என்று மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மிகமிகச் சில மட்டுமே! இவற்றிற்கு மட்டும் தனியே ஒரு திருத்தம் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, சரியாக உள்ள மிகப்பெரும்பான்மையான பெயர்களை அரசு ஆணையாக வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசின் நோக்கம் வேறொன்றாக இருந்திருக்கிறது. சமற்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கை இதே காலத்தில் ஆட்சியாளர்களை நோக்கி தமிழ் உணர்வாளர்களால் எழுப்பப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வேதாரணியம் என்பதை மரைக்காடு என்றும், விருத்தாச்சலம் என்பதை முதுகுன்றம் என்றும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆரியத்தின் அடிமடியில் கைவைக்கிறார்களே என்று கலங்கிப் போனவர்கள், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென்ற திட்டத்தைக் கிடப்பில் போடச் செய்துவிட்டார்கள் என்று ஐயப்படுகிறோம்.

20.06.2020 அன்று இக்கருத்தை நான் காணொலி உரையில் கூறியிருந்தேன். அதுதான் உண்மை என்பதுபோல் ஆட்சியாளர்களின் நடைமுறை உள்ளது.

இரண்டு – மூன்று நாட்களில் சரி செய்து இப்பட்டியலை வெளியிடுவோம் என்று 18.06.2020 அன்று உறுதியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன், அதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2015 திசம்பரில் தீர்ப்பளித்தும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி! அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை! இப்பொழுது, சமற்கிருதத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களையும் தமிழில் மாற்றி ஆணையிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தவுடன் ஆங்கிலத்தில் செய்யவிருந்த திருத்தத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு, நிரந்தரமாகக் கைவிட்டு விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.

தமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல், தமிழ் உணர்வு அமைப்புகளையும், உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.