கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்? - ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை
இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
தான் எழுதுவதை, பேசுவதை மற்றவர்கள் படிப்பார்கள் – பார்ப்பார்கள் என்ற குதூகலத்தில் கொச்சை மொழியைப் பயன்படுத்துவோர் சமூக ஊடகங்களில் பலதரப்பிலும் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்தை திறனாய்வாகச் சொல்லாமல், மற்றவர்களை தனிப்பட்ட முறையில் சாதியை – மதத்தை – இனத்தை சொல்லியும், பாலியல் சொற்களைப் பயன்படுத்தியும் வசவு செய்து இன்பம் காணுவோர் அதிகரித்து வருவது பொறுப்புள்ள மக்களுக்கு பெருங்கவலையை ஏற்படுத்துகிறது.
இவற்றைத் தடுக்க சட்டங்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவோர் அரசியல், சாதி, மத பாகுபாடு காட்டக்கூடாது. சொந்தக் காரணங்களுக்காகப் பழிவாங்கவும் கூடாது!
கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முருகக் கடவுளை இழிவுபடுத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தது சரி. ஆனால், அவர்கள் அலுவலகத்தை மூடி முத்திரையிடுவது, அவர்களுடைய வலையொளிப் பக்கத்தை முற்றிலுமாக முடக்குவது போன்றவை அதிகாரத்தை விருப்பு வெறுப்பு அடிப்படையில் மிகையாகப் பயன்படுத்தும் செயலாகும்.
அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையகத்தை கேவலமாகக் கொச்சைப்படுத்தியும், மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை இழிவுபடுத்தியும் முகநூல் பதிவு வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியும், தோழமை அமைப்புகளும் சனநாயக உணர்வாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு காவல்துறை அந்த இளைஞரைக் கைது செய்யவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? அந்த இளைஞர் பா.ச.க. தரப்பில் இருந்து கொண்டு, பா.ச.க.வை எதிர்க்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தியதால் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் அமைதி காக்கிறார்களா?
ஏற்கெனவே இவ்வாறான போக்கு வெளிப்பட்டு வருகிறது. எச். இராசா, எஸ்.வி. சேகர் போன்ற பா.ச.க. புள்ளிகள் மீது வழக்குகள் பாய்ந்தபோது அவர்களைக் கைது செய்யாமல் தமிழ்நாடு அரசு விலகி நின்றதை நாடறியும். ஆனால், எதிர்க்கட்சியினர் மீது புகார் வரும்போது, அவர்களைப் பாய்ந்து கைது செய்வது நடந்துள்ளது.
கோவை மாவட்டம் – அன்னூர் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்குக் காவல்துறையினர் உடனே கைது செய்திருக்கிறார்கள். மறுநாள், பெரியாரை இழிவுபடுத்திய பா.ச.க.வினர் எழுதியது தொடர்பாக த.பெ.தி.க.வினர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, த.பெ.தி.க.வினரும், சனநாயக உணர்வாளர்களும் போராட்டம் நடத்திய பிறகுதான் பா.ச.க.வைச் சேர்ந்த அந்த நபரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
சட்டத்தை நடுநிலையோடு செயல்படுத்தாமல் பா.ச.க. தரப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்தால், தமிழ்நாடு அரசு செயலற்று இருக்கும் அல்லது அவர்களைப் பாதுகாக்கும் என்ற நிலை தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்!
எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் தனிநபர்களைக் கொச்சையாக இழிவுபடுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, தலைவர்களுடைய – இயக்கங்களுடைய – செயல்பாடுகள் மீதும், கருத்துகள் மீதும் திறனாய்வு (விமர்சனம்) செய்யும்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வரம்பு வேண்டும்.
எனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தையும், தலைவரையும் இழிவுபடுத்திய நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment