ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தீவினை இரட்டையர்! காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை! - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

 தீவினை இரட்டையர்!

காலாவதி ஆகிப்போன
நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

எலுமிச்சை மரம் எட்டிக் காய்களைக் காய்த்தால் என்ன செய்வது? தேனீக்களின் தேனடையில் தேள் கூட்டம் குடியிருந்தால் என்ன செய்வது? நாடாளுமன்ற, சட்டமன்ற சனநாயகம் தலைவர்களின் சர்வாதிகாரமாய், கொள்ளையர்களின் கூடாரமாய் மாறிப் போனால் என்ன செய்வது?

சனநாயகம் என்பதை “வாக்களிப்பது - ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது” என்று சுருக்கிவிட்டார்கள். விவரம் தெரியாமல் இப்படிச் சுருக்கவில்லை; வேண்டுமென்றே தன்னலவாதிகள் இப்படிச் சுருக்கிவிட்டார்கள்.

இப்போதுள்ள தலைவர்கள் கெட்டுப்போய் விட்டார்கள்; தன்னலமற்ற மாற்றுத் தலைவர்கள் உருவானால் நிலைமை சரியாகிவிடும் என்று சிலர் சிந்திக்கிறார்கள். தன்னலமற்ற மாற்றுத் தலைவர்கள் வளர்ச்சியடையத் தன்னலத் தலைவர்கள் வழி விடுவார்களா? மாட்டார்கள்.

தன்னலத் தலைவர்கள் மட்டுமா தடையாய் இருப்பார்கள்? அவர்கள் கட்சிகளின் அடிநிலைத் தொண்டர்கள் வரை தடையாய் இருப்பார்கள்! வெகு மக்களில் கணிசமானோர் ஊழல் தலைவர்களையே சார்ந்திருப்பார்கள்!

ஊழல் தலைவர்கள், கை தேர்ந்த உளவியல் விற்பன்னர்கள்! மக்களை ஊழல் பேர்வழிகளாக மாற்றினால்தான் தங்களின் ஊழல் பேரரசு நிலைக்கும் என்ற உத்தியைக் கண்டறிந்தவர்கள்.

பெருங்கட்சிகள் ஊழல் பேரரசுகள்; அதேவேளை அவை ஊழல் கூட்டரசுகள்! ஒவ்வொரு கட்சியும் ஓர் ஊழல் கூட்டாட்சி நடத்துகிறது. கிளைச் செயலாளர் வரைக்கும் ஊழல் வருமானம் ஈட்ட வழி வகுத்துள்ளார்கள். ஓர் ஊரில் ஒப்பந்தக்காரர் ஒரு பொது வேலை செய்கிறார் என்றால், ஆட்சியில் உள்ள தலைவர் மற்றும் அமைச்சர்கள், மாவட்டங்கள், ஒன்றியங்கள், கிளைப் பொறுப்பாளர்கள் வரை உள்ளோருக்கு அந்த ஒப்பந்தக்காரர் விகித அடிப்படையில் தொகை வெட்டியாக வேண்டும். கறாராக வரையறுக்கப்பட்ட விகிதம் இருக்கிறது.

எதிர்க்கட்சியினரும் அந்த ஒப்பந்தக்காரரிடம் தொகை வெட்டி விடுகிறார்கள். தராவிட்டால் வேலை சரியில்லை என்று போராட்டம் நடத்துவோம் என்று எதிர்க்கட்சியினர் மிரட்டுவர்! ஒப்பந்த வேலையை ஊழலாகச் செய்யும் ஒப்பந்தக்காரர் அஞ்சுவார். எதிர்க்கட்சிக்கும் பணம் வெட்டுவார்.

கட்சிப் பொறுப்புகளில் இல்லாத - கட்சிகளில் உறுப்பினர் ஆகாத பல பேர் ஊழல் கட்சிகளை - ஊழல் தலைவர்களைச் சார்ந்திருக்கக் காரணம் என்ன? இலவச ஆடு, மாடு, வீடு, கோழி, வேளாண் கருவிகள், மானி யங்கள், வங்கிக்கடன்கள் என்று எத்தனையோ ஆதாயங்களை எதிர்பார்த்து, எத்தனையோ சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவு தேடி அவர்கள் கட்சிகளை அண்டி வாழ்கிறார்கள்.

“மக்களின் உரிமைகளைக் காப்பதற்காகவும் மீட்பதற்காகவும்” மேற்படிக் கட்சிகள் நடத்தும் கண்டனப் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் கட்டணம் வாங்காமல் கலந்து கொள்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

அரசுத் துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் கையூட்டு வாங்குவது சட்டப்படியான வசூல் போன்ற “தார்மீக” ஏற்பைப் பெற்றுள்ளது.

அரசு வேலையில் சேர்க்க அமைச்சர்களுக்குக் கையூட்டு; இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றிற்குத் தரவாரியாகக் கையூட்டு!

தனக்குக் கீழே பணியாற்ற வருபவரிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு வேலை கொடுக்கிறார்கள், “தலைவர்கள்”! இவர்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, உழைப்பாளர்களைச் சுரண்டி, உற்பத்தி செய்த பொருளைக் கொள்ளை இலாபத்திற்கு விற்கும் பெரும் பெரும் தொழில் நிறுவனங்களிடம் எவ்வளவு கையூட்டு வாங்குவார்கள்!

பெருங்குழும நிறுவனங்களோடு, பன்னாட்டு நிறுவனங்ளோடு ஆட்சித் தலைவர்கள் போடும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்” அடிநாதம் - “தலைவருக்குக் கையூட்டு எவ்வளவு” என்ற புரிந்துணர்வுதான்! அதன்பிறகுதான் பிற புரிந்துணர்வுகள்!

இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் - ஆட்சியாளர்கள் கோலோச்சும் சமூகத்தில் காவல்துறையும் நீதித்துறையும் எப்படி இருக்கும்! இவர்களைப் போல்தான் பெரும்பாலும் இருக்கும்! “மன்னர் எவ்வழி, குடிகள் அவ்வழி” என்று நம் முன்னோர்கள் சொன்னது எவ்வளவு பெரிய கோட்பாடு!

ஊழலைச் சமூக மயமாக்கி விட்டார்கள் அரசியல் தலைவர்கள்.

பெரும் முதலாளிய நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் ஊழல் சமூகக் கட்டமைப்பின் இரட்டைக் கதாநாயகர்கள்! இரட்டைப் பிள்ளைகள்! இவர்களின் படைத் தளபதிகள் அதிகாரவர்க்கத்தினர்!

அரசியல் தலைவர்கள் சமூகவியலில் பெரு முதலாளிகள்; பெருமுதலாளிகளோ பொருளியல் துறையில் அரசியல் தலைவர்கள்! இருவரும் இரட்டையர்கள்!

இவர்கள் இருவரும் ஒற்றை மைய அதிகாரக் குவியலில் உயிர்ப்பை வைத்துள்ளவர்கள்!

இந்த இரட்டையர்கள் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் மட்டுமல்ல, பெரும்பாலான உலக நாடுகளில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த இரட்டையர்கள் தோன்றிய தொன்மை மண்! இவர்கள் தீவினை இரட்டையர் (Evil Twins).

இவர்களுக்கு முந்தையத் தலைமுறையினர் ஓரள வாவது உருவாக்கிய சமூக சமத்துவச் சிந்தனைகள், சமூக அறம், மனித உரிமைகள் அனைத்தையும் இந்த இரட்டையர் தகர்த்துத் தவிடு பொடி ஆக்கினர்.

மனித சமூக மாண்புகளை, மன அமைதியை, குடும்ப இணக்கத்தை, மனித நேயத்தை, சமத்துவப் போக்கை, அறத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கினர் தீவினை இரட்டையர்கள். அதைவிட அதிகமாக இயற்கை வளங்களை - சுற்றுச்சூழலை இவர்கள் படுகொலை செய்கிறார்கள்; சூறையாடுகிறார்கள். மனித உயிர்கள் வாழத் தகுதியற்றதாக இந்த நிலக்கோளத்தை சீரழித்து வருகிறார்கள்.

வணிகக் கொள்ளைக்காக வரம்பற்ற நுகர்வை - நலக்கேடான நுகர்வு வெறியை மக்களிடம் ஊக்கப்படுத்தி வளர்க்கின்றன பெருங்குழுமங்கள்!

அரசியல் தலைவர்கள் - பெருமுதலாளிகள் என்ற இந்த இரட்டையர் தங்களின் தன்னலத்திற்காகத் தங்கள் தாயகத்தை அயல்நாட்டு ஆதிக்கவாதிகளிடம் அடமானம் வைக்கவும் துணிந்தவர்கள்! இவர்கள் முறையே தங்களின் அரசியல் ஆதிக்கத்தையும் - பொருளியல் ஆதிக்கத்தையும் வளர்த்துக் கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் சீரழிவின் எந்த எல்லைக்கும் போவார்கள்! சமூகத்தில் தாங்கள் வளர்க்கும் நுகர்வு வெறியும் பண்பாட்டுச் சீரழிவும் தங்கள் குடும்பத்தினரையும், தங்களது அடுத்த தலைமுறையினரையும் பாதிக்குமே என்றெல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் எந்நேரமும் பதவி வேட்டை, பணவேட்டைச் சிந்தனையிலேயே மூழ்கி - இந்த வகையில் மன நோயாளி ஆகி விடுறார்கள்!

இப்பொழுது நிலவுகின்ற நாடாளுமன்ற - சட்டமன்ற சனநாயக அரசியல் இந்தத் தீவினை இரட்டையர்களுக்கு ஏகபோக வாய்ப்பைத் திறந்து விட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வணிக நிறுவனம் சந்தையில் வெற்றி பெறுகிறது. வாக்காளர்களைக் கவரும் அரசியல் நிறுவனம் தேர்தலில் வெற்றி பெறுகிறது. இரண்டிற்கும் போலிக் கவர்ச்சியும் இலவசங்களும் பொது உத்தியாய் உள்ளன.

அரசியல் கட்சியும் - பெருங்குழுமமும்
-------------------------------------------------------------
இப்போது பெரும்பாலும் மக்களுக்காகப் போராடி வளர்ந்த தலைவர்கள் இல்லை. மக்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களே அரசியல் தலைவர்கள் - ஆட்சியாளர்கள்! மக்களுக்கும் நாட்டிற்கும் தேவையான உயரிய இலட்சியங்களைத் தந்திரமாக முன்வைத்து, மக்களைப் பயன்படுத்தி, அவர்களை மந்தையாய்த் திரட்டிக் கொள்வோரே இப்போது தலைவர்கள்.

கட்சிகள் பெரும்பாலும் பெருங்குழுமங்களாக - அதாவது கார்ப்பரேட் கம்பெனிகளாகச் செயல்படுகின்றன. பெரிய கட்சி - பெரிய கம்பெனி; சிறிய கட்சி - சிறிய கம்பெனி! இவை தங்களுக்குள் தனித்தனி கூட்டணி அமைத்துக் கொள்கின்றன.

ஆட்சியைப் பிடிக்கும் பருமன் உள்ள கட்சிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்கின்றன. மக்களை மயக்கிக் கவரும் உத்திகளைச் செயல்படுத்து வதற்குத் தனியே நிறுவனங்கள் செயல்படுகின்றன. இப்பொழுது தி.மு.க.விற்கு - 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பிரசாந்த் கிசோர் என்பவரின் ஐபேக் (I-PAC) வடநாட்டு நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் குத்தகைத் தொகை ரூபாய் 380 கோடி என்கிறார்கள்.

இந்த உத்தி வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பா.ச.க. - காங்கிரசுக் கட்சிகளால் இறக்குமதி செய்யப் பட்டது. இதே பிரசாந்த் கிசோர் நிறுவனம், இதற்கு முன் வடநாட்டுக் கட்சிகளான பா.ச.க., ஐக்கிய சனதாதளம் போன்றவற்றிற்கு விளம்பர முகவராக செயல்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வோ, ஏற்கெனவே தி.மு.க. முகாமில் இருந்த சுனில் என்பவரின் விளம்பர நிறுவனத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வதற்காக வாடகை ஏற்பாடுகள் இருக்கின்றன. எதிர்த்தரப்பை இழிவுபடுத்தி கருத்துப் போடுவதற்கு ஒரு பதிவுக்கு, ஒரு வதந்திக்கு இவ்வளவு தொகை என்று பணம் கொடுக்கின்றன கட்சிகள். அதேபோல் தன் தரப்பை ஆதரித்துக் கட்டுக்கதைகள் எழுதுவோர்க்கும் பணம் கொடுக்கின்றன.

தனியார் தொழில் - வணிக நிறுவனங்களுக்கு சந்தை முகவர்கள் இருப்பதைப் போல கட்சிகளுக்கும் சந்தை முகவர்கள் இருக்கிறார்கள்! “நீதி கோரி” இக்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இவர்கள் “நிதி கொடுத்து” வாடகைக்கு ஆள் பிடித்து வருவார்கள்!

எல்லா நிலைகளிலும் அரசியல் கட்சிகள் தொழில் - வணிக நிறுவனங்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம், மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை.

வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுத் தொகை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆட்சி சார்பில் இக்கட்சிகள் மக்களுக்குக் கொடுக்கும் “இலவசப் பொருட்கள்” அனைத்தும் மக்கள் வரிப்பணத் திலிருந்து, வாக்காளர்களுக்குக் கொடுக்கும் கையூட்டுகளே!

வணிக நிறுவனங்கள், தேங்கிபோன தங்கள் சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்கின்றன. விழா நாட்களில் கூடுதலாக சிறப்புத் தள்ளுபடி விலை அறிவிக்கின்றன; ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று தருகின்றன. அப்படித்தான் இந்தக் கட்சிகள் மக்களின் வரிப் பணத்திலிருந்து இலவசங்கள் கொடுக்கின்றன.

அனைத்து மக்களுக்கும் அவரவர்க்குரிய வேலை வாய்ப்பு கிடைக்கவும், வருமானம் கிடைக்கவும், மக்கள் செய்து வரும் சிறிய - நடுத்தர தொழில்கள் வளரவும், கைத்தொழில்களை வளர்க்கவும், உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு மற்ற பொருட்களின் சந்தை விலைக்குச் சமமாக விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்ய மாட்டா இக்கட்சிகள்!

மக்கள் இதே நிலையில் வளர்ச்சியடையாமல் இருந்தால்தான் மலிவான செலவில் அவர்களை மடக்கிக் கொள்ளலாம் என்பது இக்கட்சிகளின் அந்தரங்கத் திட்டம்!

வாய்ப்பளிக்கும் தேர்தல் முறை
--------------------------------------------------
உலகெங்கும் இப்பொழுதுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முறை பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. (நாடாளுமன்றத் தேர்தல் முறை என்று சொல்வதில் சட்டமன்ற - உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் அடக்கம்.)

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும்தான் இப்பொழுதுள்ள தேர்தல் முறை முதலில் செயல்படுத்தப் பட்டது. (அனைவருக்கும் வாக்குரிமை, தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிகளே அதிகாரம் படைத்தவை, நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் என்பன போன்றவை படிப்படியாய் வளர்ந்தன. அவை இங்கு வரிசைப்படுத்தப்படவில்லை.)

புதிதாய்ப் புரட்சியாய்த் தோன்றியவை காலப் போக்கில் பழைமை அடைந்து காலாவதி ஆகிப்போவது உலக வழக்கம்! அவ்வாறே இப்போதுள்ள தேர்தல் முறையும் அருதப் பழசாகிக் காலாவதி ஆகிவிட்டது.

மன்னராட்சியை நீக்கிய நாடாளுமன்றத் தேர்தல், கட்சி மன்னர்களை உருவாக்கி விட்டது. மன்னர் பரம்பரைக்கு மாற்றாக கட்சித் தலைவர் பரம்பரை யையும் உருவாக்கி விட்டது.

பரம்பரை மன்னர்களைவிடக் கொடியவர்களாக சனநாயக மன்னர்கள் செயல்படுகிறார்கள். இட்லர், முசோலினி, மோடி போன்ற எதேச்சாதிகார மன்னர்களை நாடாளுமன்ற சனநாயகமே உருவாக்கியது. தி.மு.க. போன்ற பல கட்சிகளில் குடும்பப் பரம்பரைத் தலைமை இந்த நாடாளுமன்ற வழிமுறையிலேயே உருவானது.

மன்னராட்சி கால மத ஆதிக்கம், சனநாயக ஆட்சிக் காலத்தில் இசுலாமிய நாடுகளிலும், சில பௌத்த நாடுகளிலும், இந்தியாவிலும் மீண்டுள்ளன. மன்னராட்சிக் கால சாதித் தீவிரம் இந்தியாவில் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல்கள் வழி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

கவியரசர் கண்ணதாசன் நகைச்சுவையாகக் கூறிய கருத்துதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது. “சர்வாதிகாரத்தில் மக்கள் ஒரே ஒரு அயோக்கியனைச் சுமக்க வேண்டியுள்ளது; சனநாயகத்திலோ, மக்கள் பல அயோக்கியர்களைச் சுமக்க வேண்டியுள்ளது” என்றார்!

இக்கருத்தை ஏற்கெனவே இங்கிலாந்தில் பெர்னாட்சா கூறிவிட்டார். நாடாளுமன்ற அரிசயலின் ஒழுங்கீனங்களை - மோசடிகளை - பாசாங்குகளைப் பார்த்து வெறுத்துப்போன பெர்னாட்சா, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்” என்றார்.

ஹென்றி டேவிட் தோரோ வட அமெரிக்காவில் (USA) 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் (1817 - 1866). நாடாளுமன்ற சனநாயகம் தோற்று விட்டது என்று அப்போதே எழுதிய முன்னோடிச் சிந்தனையாளர். டால்ஸ்டாய், காந்தியடிகள் போன்றோர் தோரோவின் அறச்சிந்தனைகளை - மனித உரிமைச் சிந்தனைகளை ஏற்றுப் போற்றினர். மக்கள் பகை ஆற்றலாக மாறிவிட்ட “சனநாயக அரசுக்கு” எதிராக வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்மொழிந்தவர் தோரோ! அவர் வட அமெரிக்காவின் அனுபவத்தில், “தேர்தல் என்பது சூதாட்டமாக மாறிவிட்டது” என்றார்.

“வாக்களிப்பது என்பது ஒரு சதுரங்க விளையாட்டுப் போல், அதற்கொரு நியாயச் சாயல் உண்டு; அவ்வளவே. சரியா, தவறா என்ற அறக்கேள்வி அதனுடன் இணைந்துள்ளது. வாக்களிப்போருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. நான் நல்லதற்காக வாக்களிக்கலாம். ஆனால் அதற்காக நல்லது நடக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அது பெரும்பான்மையினரின் பொறுப்பு என்று விட்டு விடுகிறேன். கடமை என்பது எதிர் பார்ப்பை விஞ்சியதாக இல்லை. மக்கள் வாக்களிப்பதுடன் சரி, நல்லதை நிலை நாட்டப் பொறுப்பேற்பது இல்லை; போராடுவதும் இல்லை”

... ...

“சனநாயகம் தான் அரசு முறையின் இறுதிக்கட்ட வளர்ச்சியா? இதனை மிஞ்சிய, மனித உரிமைகளை மதிக்கும் அரசு முறை இனி இல்லையா? தனி மனிதனே உயர்ந்த சுதந்திரமான உன்னத சக்தி! அவனிலிருந்தே அனைத்து அரசு அதிகாரங்களும் பிறக்கின்றன என்பதையும் உணர்ந்து, அந்த மரியாதையுடன் அவனை நடத்தும் நாடே உண்மையில் முழுமை பெற்ற ஒளிரும் நாடாகும்”.

- “ஒத்துழையாமை” - ஹென்றி டேவிட் தோரோ - தமிழாக்கம் டாக்டர் ஜீவா - சர்வோதய இலக்கியப் பண்ணை - மதுரை.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தோரோ நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற சனநாயகத்திற்கு மாற்றாக மற்றொரு சனநாயகம் - அறம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ள மாற்று சனநாயகம் தேவை என்றார்.

மாற்று சனநாயகம்
-------------------------------
தோரோ சொல்கிறார் :

“அமெரிக்க அரசு என்பது என்ன? இது ஒரு மரபே! நாட்டில் கேடு நேராமல் அடுத்தத் தலைமுறைக்குக் காத்து ஒப்படைக்கும் கடமை கொண்ட ஒன்றே அரசு. ஆனால் ஒவ்வொரு முறையும் அது தனது நேர்மையை இழந்து கொண்டே இருக்கிறது. இந்த அரசுக்கு ஒரு தனி மனிதனுக்குள்ள வலிமையும் ஆற்றலும் இல்லை. அதனால் தனி மனிதன் அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக் கொள் கிறான். மக்களைப் பொறுத்தவரை அது பயனற்ற மரத் துப்பாக்கியே! அது மக்களின் தேவைக்குக் குறைவானதே!”

தோரோ, மாற்று சனநாயகத் தேவைக்குத் தமது வட அமெரிக்க நாட்டை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டார். நாம் நமது தமிழ்நாட்டை மாற்று சனநாயகத்திற்கான எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனது கொள்கை அறிக்கையில் மாற்று சனநாயகத்தைப் பற்றி ஓரளவு கூறியிருக்கிறது.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசமாகத் தமிழ்நாடு உருவானால் அதில் சனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முன்மொழிவுகளை வைத்துள்ளோம். அதை மேலும் விரிவுபடுத்தவும் விளக்கப்படுத்தவும் வேண்டும். அந்த அடிப்படையில் இங்கு சில கருது கோள்கள் முன்வைக்கப்படுகின்றன.

சனநாயகம் - தனிநபர்களின் அதிகாரக் குவியலுக்கான செங்குத்து அமைப்பைக் கொண்டிராமல் கிடைநிலை (Horizontal) வடிவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே மாற்று சனநாயகத்திற்கு முதல் தேவை. இயன்ற வரை அனைவருக்குமான அதிகாரமாகச் செயல்படு வதற்குரிய கட்டமைப்பு மாற்றமே இதற்கு முதல் தேவை.

அரசியலில் இவ்வாறு சமூகக் கிடைநிலை மாற்றம் நடைபெற வேண்டுமானால் - அதற்கு பொருள் உற்பத்தியும் - வழங்கலும் செங்குத்துக் குவியல்களாக இல்லாமல் - ஏகபோகங்களாக இல்லாமல் - கிடைநிலைப் பன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

மின்சாரம், மோட்டார் எந்திரங்கள், ஆடைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உட்பட பெரும் பாலான பொருட்களின் உற்பத்தியும் வழங்கலும் இவ்வாறு கிடைநிலையில் அந்தந்த வட்டாரத்திலும், மண்டலத்திலும் உருவாக வேண்டும்.

அரிதான சில பொருட்கள் மட்டுமே - விதிவிலக்காக மொத்த உற்பத்தியில் இருக்க வேண்டும். ஏராளமான சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்கள் பெருக வேண்டும்.

இயற்கை வேளாண்மை, சித்த மருத்துவம், கைத் தொழில்கள், சூழலியலை அழிக்காத சிறுசிறு தொழிற்சாலைகள் என்ற அளவில் பொருள் உற்பத்தியும் வழங்கலும் இருக்க வேண்டும்.

அரசுக் கட்டமைப்பும் கிடைநிலை அதிகாரங்களைக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இறையாண்மையுள்ள தமிழ்நாட்டில் அதன் அதிகாரங்கள் தலைநகரிலும் தலைமைச் செயலகத்திலும் குவிக்கப்படுவதை மாற்றி கிடைநிலைப் பரவலாக்க வேண்டும்.

முதல் வேலையாக, மாவட்ட அமைப்புகளைக் கலைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பதவிகள் நீக்கப்பட வேண்டும். அதைப்போல சட்டப்பேரவை உறுப்பினர் (MLA), நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவிகள் - இப்போது இருப்பது போல் கூடாது. இந்தத் தொகுதி வடிவங்களும் கூடாது.

ஊராட்சி - ஒன்றிய ஆட்சி - நகராட்சி - மாநகராட்சி - தமிழ்நாடு ஆட்சி என்ற வரிசை நிலை வேண்டும்.

ஊராட்சி - ஒன்றிய ஆட்சி - நகராட்சி - மாநகராட்சி ஆகியவற்றுக்கு உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மக்களிடம் நேரடித் தேர்தல் நடத்த வேண்டும். பெரும்பான்மை வாக்குகளுக்கு மட்டும் மதிப்பளிக்கும் இப்போதுள்ள தேர்தல்களைப் போல் அல்லாமல், அனைவரது வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் விகிதாச்சார முறையில் இத்தேர்தல்கள் நடக்க வேண்டும்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டு ஆட்சிக்குரிய பேரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு நேரடித் தேர்தல் கூடாது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு பேரவை உறுப்பினர்கள் - தமிழ்நாட்டிற்கான அமைச்சர், தலைமை அமைச்சர் போன்ற பொறுப்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

முதலமைச்சர், அமைச்சர், ஒன்றியத் தலைவர் போன்ற பதவிகள் முழுநேரப் பணி உள்ளவையாக, மாதச் சம்பளம் பெறக் கூடியவையாக இருக்க வேண்டும். மற்ற உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர் ஆகியோர்க்கு முழுநேரப்பணி இல்லை. கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு படித்தொகை பெறும் நிலை மட்டும் இருக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுநேரச் சம்பளக்காரர்கள் அல்லர். சட்டம் அனுமதிக்கும் தொழில்களை அவர்கள் செய்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டங்களுக்குப் போகும்போது படிப்பணம் உண்டு.

முழுநேர அரசியல்வாதிகள் - இப்போது ஏராளமாக இருக்கிறார்கள். முழுநேர அரசியல் - கொள்ளை இலாபம் தேடும் தொழிலாகவே பலருக்கு இருக்கிறது. மேற்படிக் கட்டமைப்பு மாற்றத்தால் சமூகத்திற்குத் தேவைப்படாத முழுநேர அரசியலார் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போகும்.

இந்திய ஆட்சிப்பணி இருக்காது. தமிழ்நாட்டிற்குரிய ஆட்சிப்பணி இருக்கும். ஒன்றியப் பேரவை முடிவுகளை - தமிழ்நாட்டுப் பேரவை முடிவுகளை நிறைவேற்று பவர்களாக - அதிகாரிகள் இருப்பார்கள்.

நீதித்துறை, காவல்துறை போன்றவை தன்னாட்சி பெற்றவையாக இருக்கும்.

மேற்கண்ட மாற்றங்களுக்கேற்ப அரசமைப்புச் சட்டம், மற்ற சட்டங்கள் முதலியவை இருக்கும்.

மேலே கூறப்பட்டவை மாற்று சனநாயகத்திற்கான முதல்நிலைக் கருதுகோள்கள்; இவற்றை மேலும் செறிவுபடுத்த, இவற்றில் குறைகள் இருந்தால் திருத்திட, அனைத்துக் கூறுகளும் கொண்டதாக இதனை முழுமைப்படுத்திட - உரியவாறு கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல்கள் நடத்தலாம்; மாற்றங்கள் செய்து முழுமையாக்கலாம்.

என்ன செய்யப் போகிறோம்?
-----------------------------------------------
அரசியல் தலைவர்களின் - அவர்களது பரிவாரங்களின் ஊழல்கள், அவர்கள் அதிகாரத்தைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்துதல், அவர்களின் அத்துமீறல்கள் ஆகியவற்றைக் கண்டு பொருமுகின்றவர்கள் - சீற்றம் கொள்வோர் இருக்கின்றார்கள்.

பெருமுதலாளிகளின் பெருங்குழுமங்கள் அரசு எந்திரத்தைத் தங்களுக்கானதாக வளைத்துக் கொள்வதையும், மக்களைச் சூறையாடுவதையும், அவற்றின் நேர்மையற்ற வணிகத்தையும் கண்டு ஆத்திரம் கொள்வோர் இந்த மாற்றுச் செயல் திட்டத்தைச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் அதிகாரக் குவியலையும் பெருங் குழுமங்களின் பொருளியல் குவியலையும் செங்குத்தாக வைத்துக் கொண்டு இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது.

நாம் கூறியுள்ள மேற்படி மாற்றுத் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் தமிழ்நாட்டு மக்களால் - தமிழ்நாட்டு அமைப்புகளால் கொண்டு சேர்க்க முடியாது. இந்தியா முழுவதிலும் மாற்றம் வர வேண்டுமானால் அந்தந்த மாநிலத்திலும் அந்தந்த மக்கள் இவ்வாறு மாற்றுத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுபோன்ற மாற்று சனநாயக சிந்தனை முன்வைக்கப்படுமா, வளருமா என்பதற்கெல்லாம் நாம் சோதிடம் கூற முடியாது. தமிழ்நாட்டிற்குத் தேவையான மாற்றங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

காந்தியடிகள் முன்வைத்த கிராம ஆட்சி (கிராம ராஜ்யம்), மாநிலத் தன்னாட்சி, ஏகபோகமற்ற கிடை நிலைப் பொருள் உற்பத்தி, மரபுவழிக் கைத் தொழில், இயற்கை வேளாண் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டதே தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்துள்ள மேற்படித் திட்டம்! மற்ற மாநிலங்களில் இம்மாற்றம் வர வேண்டும் என்று காத்திருந்தால் தமிழ்நாடும் தமிழினமும் அழிவை நோக்கிச் செல்லும்.

தமிழ்நாட்டில் இந்த மாற்று சனநாயகத்தையும், மாற்றுப் பொருளியலையும் செயல்படுத்துவதற்குரிய தத்துவம்தான் தமிழ்த்தேசியம்!

முதலில் இதுபற்றி சிந்தியுங்கள்; மற்றவற்றை பிறகு சிந்திக்கலாம்.

நிலவுகின்ற அவலங்களையும் அநீதிகளையும் உரிமைப் பறிப்புகளையும் கண்டு உள்ளுக்குள் பொருமிப் பொங்கிக் கொண்டிருக்கும் இளையோரும் பெரியோரும் கருத்தளவில் ஒரு முடிவுக்கு வாருங்கள்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடஅமெரிக்காவில் ஹென்றி டேவிட் தோரோ சொன்னவை, இன்று நமக்காகச் சொன்னவை போல் உள்ளன.

“நேர்மையான மனிதனின் நிலை என்ன? மனு போடுகிறார்கள்: மற்றவர்கள் தீர்வு காணட்டும் என்று காத்திக்கிறார்கள். தங்க ளுடைய வாக்கை மலிவாகத் தருவது, தயக்கத் துடன் எதிர்ப்பைத் தெரிவிப்பது, கடவுளை வேண்டிக் கொள்வது ஆகியவையே அவர்களின் பங்களிப்பு!”

... ...

“அரசுக்கு ஓத்துழைக்க மக்கள் மறுத்தால், வேலையை விட்டு அதிகாரிகள் விலகினால், புரட்சி வந்து விட்டது என்று பொருள். இதில் இரத்தம் சிந்த நேர்ந்தால் என்ன? மனச் சான்றுக்காக உண்மையுடன் போராடியவர்கள் இரத்தம் சிந்தவில்லையா? இந்தக் காயம் ஆண்மை ஏற்கும் காயம்! விழுப்புண்! இதில் கசிவது மரணமற்ற தன்மானக் குருதி! மரணத்தை வெல்லும் மரணத்திற்கான காயம் இது!”.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 ஆகத்து மாத இதழில் வெளியான கட்டுரை இது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.