புதிய கல்வித் திட்டத்தில் முதலமைச்சர் இந்தியைத் தவிர மற்றவற்றை ஆதரிக்கிறாரா? - பெ. மணியரசன் கேள்வி !
புதிய கல்வித் திட்டத்தில் முதலமைச்சர்
இந்தியைத் தவிர மற்றவற்றை ஆதரிக்கிறாரா?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கேள்வி !
நடுவண் அரசின் புதிய கல்வித் திட்டம் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று (03.08.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில் உள்ள மும்மொழித் திட்டத்தையும், இந்தி மொழித் திணிப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்க செய்தி!
ஆனால், வருந்தத்தக்க செய்தி என்னவெனில் இளம் பிஞ்சுகளின் கல்வி கற்றலைச் சீர்குலைத்து மறைமுகமாகக் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கும் வகையிலும், மழலையர் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை அனைத்தும் நடுவண் அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதையும் விமர்சித்து ஒரு சொல்கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமது அறிக்கையில் கூறாதது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அவற்றையெல்லாம் முதலமைச்சர் ஏற்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இயக்கங்களும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் புதிய கல்வித் திட்டத்தை – அதன் இந்தித் திணிப்பு – வர்ணாசிரம நோக்கு - மாணவர்களை உயர்கல்வி செல்லாமல் கழித்துக்கட்டும் விதிமுறைகள் - மாநில உரிமைப் பறிப்பு - ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்திற்காகவும் எதிர்க்கின்றன.
மோடி அரசின் புதிய கல்வித் திட்டத்தில் திருத்தங்கள் கோரிப் பயனில்லை. முற்றிலும் அத்திட்டத்தைக் கைவிட்டு, மாநில அரசுகளின் பங்களிப்புடன் – பல்துறைக் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் பங்கேற்பில் புதிய ஆய்வுக் குழு அமைத்து, புதிதாக ஒரு வரைவுக் கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மோடி அரசு, தனது புதிய கல்வித் திட்டத்தை முரட்டுத் தனமாகத் திணித்தால், “புதிய கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்காது” என்ற முழக்கத்துடன் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், அனைத்து மக்களும் இணைந்து இந்திய அரசுக்குத் தெரிவிக்கும் பரப்புரைகளையும் அறப்போராட்டங்களையும் நடத்த வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக புதிய கல்வித் திட்டத்தை முற்றிலுமாக மறுக்கிறோம்; அதைச் செயல்படுத்த மாட்டோம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் இந்திய அரசுக்குத் தெரிவிக்க வெண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment