ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும்! - பெ. மணியரசன் வேண்டுகோள்!


பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு
மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் வேண்டுகோள்!


சென்னை பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் அதன் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. அப்பாலத்திற்கு, தனித்தமிழ் இயக்கத் தந்தையாகவும், தமிழர் மறுமலர்ச்சியின் முன்னோடியாகவும் விளங்கிய மறைமலை அடிகளாரின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

1911ஆம் ஆண்டிலிருந்து பல்லாவரம் சாவடித் தெருவிலுள்ள இல்லத்தில் வசித்து வந்த மறைமலையடிகளார், 1912ஆம் ஆண்டு (22.04.1912) இதே இல்லத்தில்தான், வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் கொள்கை வழிநின்று “பொதுநிலைக் கழகம்” (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டார். 1916இல் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் பல்வேறு அரங்குகளில் முன்னணிப் பங்கு வகித்தார். பல்லாவரம் இல்லத்தில் தங்கிக் கொண்டுதான் அப்பணிகளில் ஈடுபட்டார்.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த மறைமலையடிகளார் தமிழர் இன மொழி உரிமைகளுக்காக களப்பணியாற்றியவர். எனவே, பல்லாவரத்தில் திறக்கப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கு, மறைமலையடிகளாரின் பெயரைச் சூட்டுவதே மிகவும் பொருத்தமானது என்று தமிழ்நாடு அரசைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மறைமலையடிகளாரின் குடும்பத்தினரும் இவ்வேண்டுகோளை தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ளார்கள் என்பது முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குரியது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.