ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

எதிர்வினை: தொல்காப்பியச் சமூகம் - 2 - ம. செந்தமிழன்

எதிர்வினை:
தொல்காப்பியச் சமூகம் - 2
ம. செந்தமிழன்

தொல்காப்பியம் வகுத்த அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் பகுப்பு, சமூகப் பிரிவினரிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் நோக்குடையது என்பது முனைவர். இராம. சுந்தரம் அவர்களது கருத்து.

இக்கருத்தை பின்வரும் இரு சான்றுகளைக் காட்டி நிறுவ முனைந்துள்ளார்.

1. நால்வகைப் பிரிவினருக்கும் உரிய கருவிகள் குறித்து, தொல்காப்பியர் செய்துள்ள வரையறைகள் அந் நால் வகையினரின் படிநிலைகளைக் காட்டுவதாக இருப்பதாகவும், ஒரு பிரிவினரின் கருவிகளைப்
பிற பிரிவினர் பெற இயலாது என்றும் தொல்காப்பியர் வரையறுத்துள்ள பாகுபாட்டின் வெளிப்பாடு
என்றும் முனைவர். இராம. சுந்தரம் கூறியுள்ளார்.

2. 'இந்தச் சமூகப் பிரிவுகள் மொழியிலும் கூட பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. செந்தமிழ் என்பது  உயர்வழக்காக, செய்யுள் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.' என்று கூறியுள்ளார் கட்டுரையாளர். இதன் வாயிலாக, சமூகப் பிரிவுகளில் தொல்காப்பியம் காட்டிய ஏற்றத் தாழ்வு அணுகுமுறை மொழியிலும்
பிரதிபலித்தது என்கிறார்.

    இவ்விரண்டு கூற்றுகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

சமூகப் பிரிவுகளைப் பொறுத்தவரை அவை நான்கும் சாதிகளாகப் பிரிக்கப்படவில்லை. வேலைப் பிரிவினையினடிப் படையிலமைந்த வர்க்கப் பிரிவுகள் என்பதைக் கடந்த இதழில் கண்டோம்.

எந்தவொரு சமூக உருவாக்கத்திலும் வேலைப் பிரிவினையினடிப்படையிலான வர்க்கப்பிரிவுகள் உருவாவது இயல்பு. இப்பிரிவுகளிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்தலே சமூக விரோதம். மனுதர்மம் சமூக
வேலைப் பிரிவினையைப் பிறப்புடன் இணைத்தது. இதன் வழியே, சாதியச் சமூகத்தை அது கட்டமைத்தது. இக்கட்டமைப்பை மீறுவோருக்குக் கடுமையான தண்டனைகளை விதித்தது. 'மனுதர்மம் கூறும் வர்ணப்
பாகுபாட்டோடு இந்தப் பாகுபாட்டையும் (தொல்காப்பியம் கூறும் நான்கு பிரிவுகளை) ஒப்பிட்டுக்  காணும்போது, மனுதர்மம் கூறும் சூத்திரர் இங்கு விடுபட, தொல்காப்பியம் கூறும் வேளாளர் அங்கு இடம்
பெறாததைக் காணமுடிகிறது.

தமிழ்ச் சமூக அரசு உருவாக்கத்தில் வேளாளர் ஆகிய உழுதும், உழுவித்தும் உண்ணும் நிலக்கிழார்கள் முக்கியபங்காற்றியதால் அவரகள்; தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது.' என்கிறார் முனைவர் இராம. சுந்தரம்.

'அரசு உருவாக்கத்தில் வேளாளர் இடம் பெறாவிடில், அவர்களுக்கு சமூகப் பிரிவுகளில் அடையாளம் மறுக்கப் பட்டிருக்கும்' என்ற மறைபொருள் இதில் பொதிந்துள்ளது. இது தமிழியக் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது. தமிழர் மெய்யியல் நிலத்துடன் பிணைந்தது. நிலவுடைமை, அரச உருவாக்கம் ஆகியவற்றிற்கு
எதிரானது தமிழர் மெய்யியல். ஆகவே உழவுத் தொழில் புரிவோரை தமிழ்ச் சமூகம் அங்கீகரிப்பதற்கும் அரசு
உருவாக்கத்திற்கும் கட்டுரையாளர் குறிப்பிடும் தொடர்பு கிடையாது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அங்கீகரிக்கும் மரபு தமிழர் மரபு. சமூகப் பரிணாமத்தின் தவிர்க்கவியலா போக்கில், அரசு உருவாக்கம் நிகழ்ந்தபோது, அந்த எதார்த்தத்தை உள்வாங்கியது தொல்காப்பியம். அதே வேளை, அரச உருவாக்கத்தின் தீய விளைவுகளை இயன்ற மட்டும் களைய வேண்டும் என்ற முனைப்பும் தொல்காப்பியத்தில் காணக்கிடக்கிறது. இந்த முனைப்பின் காரணமாகவே, மனுதர்மம் கூறும் சூத்திரர் எனும் பிரிவு தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. உண்மையில்,  தொல்காப்பியம் தமிழ்ச் சமூகத்தில் எப்பிரிவினரையும் சூத்திரர்களாகப் பார்க்கவில்லை. முனைவர். இராம. சுந்தரம் வெளிப்படுத்தியுள்ள கூற்றில் 'அரசு உருவாக்கத்தில் சூத்திரர் இடம் பெறாததால் தொல்காப்பியம்
அவர்களை சமூகப் பிரிவினரில் ஒருவராகக் கருதவில்லை' என்ற பொருள் தொனிக்கிறது. இது மிகவும் ஆபத்தான புரிதலாகும். தொல்காப்பியம் - மனுநீதி என்ற ஒப்பீடு, மனுநீதியின் மனிதகுல விரோத  கருத்தியலைப் பறைசாற்றத்தான் உதவும். ஆனால், முனைவர் இராம. சுந்தரம் மனுநீதி தொல்காப்பியத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சமத்துவ வெளி கொண்டது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

சூத்திரர்களை சமூகப் பிரிவினரில் அடக்கி இருப்பது மனுநீதியின் முற்போக்கு முகம் என்ற மறை பொருள் அவரது வாதத்தில் அடங்கியுள்ளது. அரச உருவாக்கத்தில் ஈடுபட்டதனால் வேளாளரை தொல்காப்பியம்
அங்கீகரித்ததாகக் கூறும் கட்டுரையாளர் மனுநீதி சூத்திரரை நால்வருணத்தில் சேர்த்ததற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. மேலும், கட்டுரையாளர் |அரசு உருவாக்கம் நிலக்கிழார்களையும் பிற சாதிய - வர்க்கப்
பிரிவினரையும் அரவணைத்துச் செல்கிறது.| என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தின் அடிப்படையில் கட்டுரையாளர் தொல்காப்பியம் கூறும் நால்வகைப் பிரிவினரையும் மனுநீதியின் நால் வர்ணங்களையும் ஒப்பிட்டுள்ளார். அவரது பார்வை சாதியையும் வர்க்கத்தையும் கட்டுரையாளர் சமமாகப் பார்க்கிறார் என்பதற்கு மேற்கண்ட அவரது வரிகள் சான்று. மேலும், ஆரியரது அரச உருவாக்கத்திற்கும் தமிழரது அரச
உருவாக்கத்திற்கும் வேறுபாடுகள் மிக விரிவானவை. மேய்ச்சல் சமூக ஆரியர், தந்தை உரிமையை நிலைநாட்டவும் பார்ப்பன மேலாதிக்கத்தை உயர்த்தவும் இனக்குழுக்;களைச் சிதைத்து அரசுகளை உருவாக்கினர். தமிழர் மரபிலோ இனக்குழு வாழ்க்கை முறையின் இயல்பான சமூகப் பரிணாம  வளர்ச்சியினால் அரசு உருவானது. மேலும் ஆரியக் கருத்தியல் படையெடுப்பு தமிழர் அரச உருவாக்கத்தில் அநீதியான தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆரியரது அரச உருவாக்கத்திற்கு சாதி எனும் ஒடுக்குமுறைக்
கருத்தியல் அடிப்படையாகச் செயல்பட்டது. தமிழர் அரச உருவாக்கத்திற்கு வேலைப் பிரிவினையின் அடிப்படையிலான வர்க்கப் பிரிவுகள்தான் அடித்தளம். முனைவர் இராம சுந்தரம் அவர்கள் இந்த வேறுபாடுகளை ஆய்ந்து மனுநீதியில் சூத்திரர் இடம் பெற்றதன் காரணத்தை விளக்கியிருந்தால் அது பெரிய
பங்களிப்பாக அமைந்திருக்கும்.

மாறாக, மேலோட்டமாக இரண்டையும் 'பாகுபாடு" என்று பொதுமைப்படுத்துகிறார். 'பார்ப்பார் பூணூல், கரகம்,
முக்கோல், மணை ஆகியவற்றைப் பெற்றிருப்பர். அரசர்கள் படைக்கலன், கொடி, குடை, முரசு, குதிரை, யானை, தேர், மாலை, முடி முதலியவற்றைக் கொண்டிருப்பர். வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள போன்றவற்றை இழிந்தோர் (வேளாளரை இது குறிக்கலாம்) பெற இயலாது என்கிறார் கட்டுரையாளர்.

தொல்காப்பியம் வேளாளரை 'இழிந்தோர்' என்று குறிப்பிடவில்லை. 'இழிந்தோர்' எனும் சொல் வேளாளரைக்
குறிக்கலாம் என்ற கட்டுரையாளரின் கருத்துக்கு யாதொரு சான்றும் அடிப்படையும் இல்லை. அடுத்ததாக, 'வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகிய கருவிகளை வேளாளரும் பெறலாம்.' என்று
தொல்காப்பியர் குறிப்பட்டுள்ளாரே தவிர, 'பெறக் கூடாது' என்று கூறவில்லை. சமூகப் பிரிவுகளில்
நால்வகையினருக்கும் உரிய கருவிகள் குறித்த வகை விளக்கம் மரபியல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவ்விளக்கம் ஒவ்;வொரு தொழில் பிரிவினருக்கும் தேவையான கருவிகள் என்ற அடிப்படையிலிருந்தே எழுதப்பட்டுள்ளது. மாறாக, எந்தக் கருவியின் மீதும் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்படவில்லை. நால்வகையினருக்கும் உரிய தனித்தனிக் கருவிகளை உரைக்கும் தொல்காப்பியர் பின்வரும் குறிப்பையும்
வலியுறுத்தியுள்ளார். 'ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தி அவைஅவை பெறும்.' 1
- ஊர், பெயர், செய்யும் தொழிலுக்கு ஏற்ற கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப வருதல் பெறும் என்பது இதன் உட்பொருள். இதன் வாயிலாக, கருவி எனப்படுவது, அவரவர் தொழிற்சார்ந்த ஃ தொழிலுக்குத்
தேவையான கருவிகளை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகிறது. இதில் பாகுபாடு எங்கிருந்து வந்தது.?

மேலும் ஒரு முகாமைச் சான்றையும் காண்போம். 'வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே' 2 எனும் பாடலில், வேந்தர் ஆணையிடும்போது படையும் கண்ணியும் வேளாளருக்கும் உரியதாகும் ' என்கிறார் தொல்காப்பியர். இதற்கு முந்தைய பாடலில், 'வேளாளருக்கு உழுது}ண் வாழ்க்கை மட்டுமே உரித்து' என்று குறிப்பிட்டுள்ளார். வேளாளரின் தொழில் உழவு மட்டுமே. ஆயினும், வேந்தன் ஆணையிடும்போது, வேளாளர் படைத் தொழிலும் புரிவர் என்பதே, இப்பாடல்களின் பொருளாகும்.
மேலும் வேளாண்மாந்தர் என்று தொல்காப்பியம் குறிப்பிடும்  பிரிவினர் முழுவதும் நிலக்கிழார்கள் அல்லர். 'உழுது}ண் வாழ்வோர '; என்றுதான் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வேளாளரில் உழுதுண்போர்,
உழுவித்துண்போர் என இருவகையினரும் இருப்பதாக உரையாசிரியர்கள் குறிக்கின்றனர். உழுதுண்போர் என்பவர்கள் உழவர்களாக இருக்கமுடியுமே தவிர அவர்களை நிலக்கிழார்கள் என்று வகைப்படுத்த முடியாது.
இந்த வகைப்பாடும் உரையாசிரியர்கள் கூறும் விளக்கமே தவிர தொல்காப்பியரின் நேர்கூற்று அல்ல. உரையாசிரியர்கள் காலம் நிலக்கிழமை நிலைபெற்றுவிட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்கால  உரையாசிரியர்களின் கருத்தை அப்படியே வழிமொழிவது கட்டுரையாளரின் அணுகுமுறையில் தெரிகிறது.
அரசு உருவாக்கத்தின் உடன் விளைவான போர் புரிதலுக்கு, சமூகத்தின் பல பிரிவினரும் தேவைப்படுவர். ஒவ்வொரு பிரிவினருக்கும் தொழில் வௌ;வேறாக இருப்பினும் போர்க்காலத்தில் அவர்கள் போர்த்
தொழிலில் ஈடுபடவேண்டும் என்ற தொல்காப்பியர் மேற்கண்ட விதிகளைப் பதிவு செய்துள்ளார்.

'வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், மா ஆகியவை மன்னன் ;வழங்கும் மரபினடிப்படையில்  ஏனோர்க்கு;கும் உரிய' என்கிறது மரபியலின் மற்றொரு பாடல். 3 'ஏனோர்க்கும் உரிய" என்ற விதி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, இக்கருவிகளை வேளாளர் பெற இயலாது' என்ற முடிவுக்கு
முனைவர். இராம. சுந்தரம் சென்றிருப்பது முரணாக உள்ளது. மேற்கண்ட கருவிகள் 'இழிந்தோர்க்கு இல்லை' என்று தொல்காப்பியம் குறிப்பிடும் பொருள் எது எனக் காண்போம். மேற்கண்ட பாடலில் 'ஏனோர்க்கும் உரிய' என்று உரைக்கும் தொல்காப்பியம், அடுத்த பாடலில், 'அன்னவ ராயினும் இழிந்தோர்க் இல்லை' 4
என்கிறது. அதாவது, 'மன்னரால் வில் முதற்கொண்ட கருவிகள் வழங்கப்பெறும் மரபுடையோர் ஆனாலும், அம்மரபினருள் இழிந்த நிலையில் உள்ளோருக்கு அக்கருவிகள் வழங்கப்படமாட்டா.' என்பது இதன் பொருள்.
போர்க்கால நெருக்கடியில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வழங்கப்படும் கருவிகள், அப்பிரிவுகளில் இழிந்த நிலையில் உள்ளோருக்கு வழங்கப்படாது. ஏனெனில், அத்தகைய நிலையில் உள்ளோர் போர் புரிதலில் சிறப்புடன் ஈடுபடமுடியாது. மேலும், சமூகத்தின் கடைநிலை மாந்தரை, போரில் ஈடுபடுத்தல் அறமும் ஆகாது.
இது உயரிய சிந்தனையின் வெளிப்பாடு. மாறாக, பாகுபாடு அல்ல. தொல்காப்பியம், 'இழிந்தோருக்கு' அவர் தம்
மறுக்கவில்லை. போர்க்கருவிகளை மட்டுமே மறுத்துள்ளது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய
விரும்புகிறேன். முனைவர் இராம. சுந்தரம் ஒப்புமை காட்டும் மனுநீதி, 'போர்களில் இழிந்தோர் நிலை'
குறித்துப் பின்வருமாறு விதி வகுக்கிறது. 'வலிமையில்லாத வீரர்கள் கும்பலாகவும், சூசிகா வச்ர
வியூகங்களாகவும் இருந்தும், பலமுள்ளவர்கள் தனித்தனியாகவும் நின்று எதிர்க்குமாறு கட்டளையிட
வேண்டியது.' 4 என்கிறது மனுநீதி. சூசிகா வியூகம் என்பது,  'அரசனுக்கு ஃ படைக்கு முன் புறமிருந்து மட்டும் அச்சுறுத்தல் வரும்போது மேற்கொள்ள வேண்டிய வியூகம்.' 5 ஆகும். 'பலமில்லாத வீரர்களைக் கூட்டமாக நிறுத்தி அவர்களைப் பலி கொடுத்து முன்னிருந்து வரும் பகையிடமிருந்து அரசனைப் பாதுகாக்க  வேண்டும்' என்பது இதன் பொருள். தொல்காப்பியம் இதற்கு நேர் முரணான விதியைப் பதிவு செய்துள்ளது. மேலும், மனுநீதியின் ஏழாம் அத்தியாயமான 'அரசநீதி' எனும் பிரிவை வாசித்தால், ஆரியரது கோட்பாடு பார்ப்பன
மேலாதிக்கத்திற்கு அரசனை எவ்வாதங்களெல்லாம் அடிபணியச் செய்தது என்பதைப் புரிந்து கொள்ள  முடியும்.

முனைவர் இராம சுந்தரம் அவர்களின் 'சமூகப் பிரிவுகளில் பாகுபாடு' குறித்த இரண்டாவது கருத்தான 'செந்தமிழ்' என்பதன் விளக்கத்தைக் காண்போம். 'செந்தமிழ்' என்பது உயர்வழக்காக, செய்யுள் வழக்காக
எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார் கட்டுரையாளர். மேலும், இது ஒரு 'பாகுபாடு' என்றும்  குற்றம் சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டு மெய்யானது அல்ல என்பதை நிறுவ பெரும் விளக்கம் தேவையில்லை.
பின்வரும் தொல்காப்பியச் செய்யுளே போதுமான சான்று. 'இயற்சொல் திரிசொல் திசைச் சொல்  வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே' 6 என்கிறார். தொல்காப்பியர். 'இயற்சொல், திரிசொல்,
திசைச் சொல், வடசொல் ஆகிய நான்குமே செய்யுள் ஈட்டுவதற்கு உரிய சொற்கள்தாம்' என்பது இதன் பொருள். இந்த நான்கு வகைச் சொற்கள் குறித்த விளக்கத்தை அடுத்தடுத்த பாடல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றுள் இயற்சொல் என்பது, 'செந்தமிழ் நிலத்தில்' வழங்கப்படும் சொற்கள் என்கிறார். அவ்வளவே. 'செந்தமிழ்' மட்டுமே செய்யுள் வழக்கு அதுவே, 'உயர்ந்தது' என்று தொல்காப்பியர் குறிப்பிடவே
இல்லை. உண்மை இவ்வாறிருக்க, வழமைபோல் கட்டுரையாளர் செந்தமிழையும் சமஸ்கிருதத்தையும்
ஒப்பிட்டுக் காட்டியிருப்பது வேதனையளிக்கிறது. தொல்காப்பியம் பதிவு செய்துள்ள திருமணம் மற்றும்
குடும்பம் குறித்த முனைவர். இராம. சுந்தரம் அவர்களின்  கருத்துகளும் உண்மைக்கு மாறான புரிதல்களைக் கொண்டுள்ளன.

தொல்காப்பியச் சமூகம் 'ஆணாதிக்க வகைப்பட்டது' என்பது அவரது கருத்துகளின் சாரமாக உள்ளது. தமிழர் மெய்யியல் 'தாயுரிமைக் கூறுகள் மிகுந்தது' என்பதையும் தொல்காப்பியம் தாயுரிமை மரபின் அழுத்தத்தை
விளக்கும் ஆவணம் என்பதையும் 'நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்' எனும் எனது நூலில் நிறுவியுள்ளேன். ஆகவே, அப்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் எழுத வேண்டியதில்லை எனக் கருதுகிறேன்.

தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை ஆரியக் கோட்பாடுகளின் தளத்தில் நின்று கொண்டு அணுகுவதும், 'ஆரியமும், தமிழியமும் ஒன்றே' என்ற புனைவை உருவாக்குவதும் தமிழக ஆய்வுக் களத்தில்
அவ்வப்போது நிகழ்கின்றன. முனைவர். இராம. சுந்தரம் இவ்வித அணுகுமுறைக்கு எதிரானவர் என்பதே நமது
புரிதலாக இருந்து வந்துள்ளது. குறிப்பிட்ட அவரது கட்டுரைக்கு மறுப்புரை எழுதியது தமிழியத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சான்றுகள்
1.    தொல்காப்பியம் - மரபியல் - 75
2.     தொல்காப்பியம - மரபியல் - 82
3.     தொல்காப்பியம - மரபியல் - 84
4.     மனுதர்ம சாஸ்திரம் - (அலைகள் வெளியீடு) - பக். 104
5.     மனுதர்ம சாஸ்திரம் -(அலைகள் வெளியீடு) பக். 103
6.     தொல்காப்பியம் - எச்சவியல் -1

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.