ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சுவாதியைக் கொலை செய்தது இராம்குமார் மட்டுமா? தூண்டிய காம வணிகர்களுக்கு யார் தண்டனை தருவது? - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!




சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது. என்ன காரணம் கூறியும், சுவாதியைக் கொலை செய்ய எந்தக் கயவனுக்கும் உரிமையில்லை. எனவே சுவாதியைக் கொலை செய்தவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன்.

அதே சமயம், இளையோர் முதல் முதியோர் வரை இருபாலரிடமும் எந்நேரமும் காமப்பசியை வளர்த்து அவர்கள் காமத்திருடர்களாக, காமக்கொலைகாரர்களாக மாறும் அளவிற்கு மிகை உணர்ச்சியை ஊட்டிய திரைப்படங்கள், இதழ்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், விளம்பரங்கள் போன்றவை பாலியல் குற்றங்கள் புரிய தூண்டியவை அல்லவா?

இவற்றின் பொறுப்பாளர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை தருவது?

இரவு 11 மணிக்கு மேல் உடலுறவுக் காட்சிகள் காட்டிப் பணம் பார்க்கும் தொலைக்காட்சிகள், பகல் நேரத்தில் – “ஐயோ சுவாதி கொலைகொலை செய்த கொடியவனை இன்னும் பிடிக்கவில்லையாஎன்று ஒப்பாரி வைக்கின்றன. பாலியல் கவர்ச்சிப் படங்கள், செய்திகள் வெளியிடும் ஏடுகளும் அப்படியே ஒப்பாரி வைக்கின்றன.

வயிற்றுப் பசி போலவே, காமப்பசியும் மனித உயிரின் இயற்கை உணர்வு; இயல்பூக்கச் செயல்! ஆனால், வயிற்றுப் பசியைவிடக் காமப்பசி ஆபத்தானது! காமத்திற்குக் கண்ணில்லை என்றார்கள் நம் முன்னோர்கள்.

நெடுங்காலமாக ஆணாதிக்கச் சமூகம் நிலவுவதால்தலைமுறை தலைமுறையாக வந்த ஆணாதிக்க ஆணவம்பெண்களை வல்லுறவு கொள்ளத் துணிச்சல் தருகிறது. கட்டுக்கடங்காத காமப்பசி, காமவெறியாக மாறிவிட்ட பிறகு, பெண்குழந்தையா அல்லது குமரியா அல்லது கிழவியா என்ற பாகுபாடுகூட இல்லை! காமவெறியைத் தீர்த்தாக வேண்டும் என்று வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்; வெளியே தெரிந்து விடும் என்று அஞ்சி கொன்றும் விடுகிறார்கள்.

காதல் உறவின் அடிப்படை பாலியல் உணர்வுதான்! அதனைக் குடும்ப உறவுக்குப் பக்குவப்படுத்திக் கொள்வதுதான் வளர்ச்சியடைந்த பண்பாடு. ஆனால், காதல் உறவுகணவன் மனைவி உறவு ஆகியவை பற்றி, நடைமுறைக்குப் பொருந்தாத கற்பனைகளைக் கட்டமைத்து இளைஞர்களைக் கனவுலகில் மிதக்க விடுவதும், அதற்காக உயிரீகம் செய்யத் துணிவது போன்று சித்தரிப்பதும் இலக்கிய அழகியலையும் தாண்டிய வணிக உத்திகளாகும்.

இந்த வணிக உத்திப் படைப்பாளருக்கும் வெளியீட்டாளருக்கும் பாலியல் வன்கொடுமைகளில் பங்கிருக்கிறது.

ரோமியோவும் ஜூலியட்டும்அம்பிகாபதியும் அமராவதியும் திருமணம் செய்து கொண்டிருந்தால், எல்லோரையும்போல் பிள்ளை பெற்றுக் கொண்டு சண்டையும் மகிழ்ச்சியும் கலந்த குடும்பம் நடத்தியிருப்பார்கள். அவ்வளவுதான்! கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல், “காதலில் தோற்றால் காவியம்; வென்றால் வெறும் காரியம்!” எல்லாம் கற்பனைச் சுகம்தான்!

இந்தக் கற்பனைச் சுகத்தை மிதமிஞ்சிய பிரபஞ்சப் பெருங்களிப்பாக, இலட்சியத் தேடலாக சித்தரிப்பதைப் பார்த்த படித்த - இளைஞர்கள், காதல் தோல்வி ஏற்பட்டால் ஒன்று தங்களை கொலை செய்து கொள்கிறார்கள்; அல்லது தாங்கள் காதலித்த பெண்ணைக் கொலை செய்கிறார்கள்.

இவ்வாறான கற்பனைச் சுக உணர்வில் திருமணமான பெண்களில் சிலர் வேறொரு பாலுறவுக்காக தங்கள் கணவரையே கொலை செய்கிறார்கள்.

இருவரும் இசைந்தால் வாழலாம்! இல்லையேல் நாகரிகமாகப் பிரிந்துவிட வேண்டும். இதற்கான மனப்பக்குவத்தை சமூகத்தில் விதைக்க வேண்டியவைவளர்க்க வேண்டியவை குடும்பங்கள்கல்வி நிலையங்கள்ஏடுகள்தொலைக்காட்சிகள்இணைய தள நிறுவனங்கள் - வணிக நிறுவனங்கள்! இவை அனைத்திற்கும் பொறுப்புண்டு.

சுவாதி போன்ற பெண்கள் கொலை செய்யப்படும் போது, ஒவ்வொரு திரை மற்றும் தொலைக்காட்சி ஊடகமும் ஏடும் இணையதள நிறுவனமும் வணிக நிறுவனமும் தற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தான் தவறிழைத்திருந்தால் அதை ஏற்கும் மனப்பக்குவமும் திருந்தும் மன முதிர்ச்சியும் வேண்டும்.

எனவே, சுவாதியைக் கொலை செய்தவன் ஒற்றைக் கயவன் மட்டுமல்ல என்பதை உணர்வோம்!



(கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர்).

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.