ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில் வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை தமிழர்கள் புறக்கணிப்பு! - பெ. மணியரசன் கண்டனம்!
பொன்மலை இரயில்வே தொழிற்சாலையில்
வட இந்தியர்களுக்கு மட்டுமே வேலை
தமிழர்கள் புறக்கணிப்பு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில், ஆர்.ஆர்.பி. மூலம் கிரேடு – 3 தொழில்நுட்பப் பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த 540 பேரில் சற்றொப்ப 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சியவர்கள் பெரும்பகுதி இந்திக்காரர்கள் மற்றும் ஆந்திர – கேரள மாநிலத்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.

ஏற்கெனவே, தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணி (ஆக்ட் ஆப்ரண்டிஸ்) பார்த்து, வேலை வழங்கப்படாமல் உள்ள திருச்சி மாவட்ட இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலை வாயிலில், தங்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

கொடுமையான கொரோனா பொது முடக்கம் செயல்பாட்டில் இருக்கும் இந்தக் காலத்திலும், வடமாநிலங்களில் இருந்து இந்திக்காரர்களைக் கொண்டு வந்து வேலை கொடுக்கிறார்கள். தகுதியுள்ள தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியாற்றி வேலையில்லாமல் இருப்போர் சற்றொப்ப 5,000 பேர் இருப்பர் என்று அச்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2019 மே 3 அன்று, இதே பொன்மலை தொடர்வண்டித்தொழிற்சாலை வாயிலில் இக்கோரிக்கைக்காகப் போராட்டம் நடத்தினோம்.

அப்போராட்டத்தை தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் ஆதரித்தன. அதன் விளைவாக, பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ் – கிரேட் 4) வேலைக்கு தென்னகத் தொடர்வண்டித்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற புதிய விதிமுறையை தொடர்வண்டித்துறை உருவாக்கியது. அதை வரவேற்றோம்! ஆனால், இப்போது மண்ணின் மக்களின் வயிற்றில் அடிப்பதைப் போல் வடநாட்டுக்காரர்களைக் கொண்டு வந்து வேலை கொடுத்து, தகுதியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணிப்பது மனித நீதிக்கு எதிரானதாகும்!

தொடர்வண்டித்துறையில் பழகுநர் வேலை முடித்து, பணி மறுக்கப்பட்டோர் தங்களுக்குள் சங்கம் ஒன்றை உருவாக்கி, அதன் சார்பில் 07.08.2020 அன்று பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தக் கொரோனா காலத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 540 பேருக்கு அளிக்கப்பட்ட பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டுமென்று தென்னகத் தொடர்வண்டித்துறையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் தலையிட்டு – நடுவண் அரசைத் தொடர்பு கொண்டு - மேற்படி பொன்மலை தொழிற்சாலைக்கான பணித்தேர்வு ஆணையை முழுமையாக இரத்து செய்து, தகுதியுள்ள தமிழ்நாட்டு பணியாளர்களுக்கு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் மக்களும் மண்ணின் மக்களுக்கான இந்த வேலை உரிமையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.