“தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே” பொன்மலை தொடர்வண்டித் தொழிற் சாலையில் - ஒரு வாரம் தொடர் மறியல்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே”
பொன்மலை தொடர்வண்டித் தொழிற்
சாலையில் - ஒரு வாரம் தொடர் மறியல்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2020 ஆகத்து 29, 30 ஆகிய நாட்களில், திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே!”
ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டம்
================================
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். – நெய்வேலி அனல் மின் நிலையம் – திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி – சரக்கு சேவை வரி – சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது. சொந்தத் தாயகத்திலேயே வேலைக்குத் தகுதியுள்ள தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வடநாட்டுத் தேர்வு மையங்களில் நடக்கின்றன. திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி திண்ணூர்தித் தொழிற் சாலை, தமிழ்நாடு அஞ்சல் துறை முதலிய வற்றில் அவ்வாறான ஊழல் வழிகளில் தேர்வெழுதி தமிழ்நாட்டில் வேலையில் சேர்ந்த வடநாட்டினர் அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; வழக்குகள் நடக்கின்றன.
தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2017இல் நடத்திய தேர்வில், வடநாட்டினர் கலந்து கொண்டு தேர்வெழுதி மோசடியாக அதிகம் பேர் வெற்றி பெற்றனர். அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப் பட்டனர். அந்தத் தேர்வு முடிவுகள் இரத்து செய்யப்பட்டன.
இவ்வாறான மோசடி வழிகளில் இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வேலையில் சேர்வதை இந்திய ஆட்சியாளர்கள் ஊக்கப்படுத்தி, தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்குக் கிடைக்காமல் செய்து வருகிறார்கள்.
இந்த ஊழல் பின்னணியில்தான், 2019இல் தமிழ்நாடு தொடர்வண்டித்துறையில் பழகுநர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கு 95 விழுக்காட்டினர் வடமாநிலத்தவர்களாக இருந்தார்கள். அதை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2019 மே 3ஆம் நாள் பொன்மலை தொடர்வண்டித்துறைத் தொழிற்சாலை வாயிலில் மறியல் போராட்டம் நடத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த அநீதியை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பின.
இதன் விளைவாக, பழகுநர் பயிற்சிக்கான பணி சேர்ப்புக்கு தென்னகத் தொடர்வண்டித் துறையின் எல்லைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்றும், அதற்கு வெளியே உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாதென்றும் தென்னகத் தொடர்வண்டித்துறை முடிவெடுத்து அறிவித்தது. ஆனால், தொடர்வண்டி பணித்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் தொடர்வண்டி பணித்தேர்வு அலகு (ஆர்.ஆர்.சி.) ஆகியவற்றின் மூலம் பணியமர்த்தம் பெறும் வேலைகளுக்கு அனைத்திந்திய அளவில் விண்ணப்பிக்கலாம், தேர்வெழுதலாம் என்ற அநீதி இப்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனால், அண்மையில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். இதில் பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே! தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
பழகுநர் பயிற்சி முடித்தவர்களில் 20 விழுக்காட்டினரை மேற்படி வேலைகளுக்கு பணியமர்த்தம் செய்ததாகச் சொல்லும் தென்னகத் தொடர்வண்டித்துறை, இந்தப் பணிகளைக் கூட பயிற்சி முடித்தத் தமிழர்களுக்கு வழங்கவில்லை. இதிலும் இந்திக்காரர்களே அதிக இடங்களை ஆக்கிரமித்தனர். இதிலும், தொடர்வண்டித் துறையின் இனப்பாகுபாட்டுக்கு தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.
தொடர்வண்டித்துறையில் திட்டமிட்டு மண்ணின் மக்களாகிய தமிழர்கள் வேலை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறார்கள். இதேபோன்ற தமிழினப் புறக்கணிப்பு நடுவண் அரசின் மற்ற துறைகளிலும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டுள்ளது. மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள – தமிழ்நாட்டின் நடுவண் அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் வடமாநிலத்தவரையும் பிற மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறார்கள்.
இது தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை உரிமைப் பறிப்பு, வாழ்வுரிமைப் பறிப்பு மட்டுமல்ல – தொலைநோக்கில் தமிழர் தாயக உரிமையைப் பறிக்கும் இன ஒதுக்கல் கொள்கையாகும்.
தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் இந்திய அரசின் இன ஒதுக்கல் கொள்கையைக் (Aparthied) கண்டித்தும், இவற்றில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இவற்றின் அடுத்தகட்டமாக, பின்வரும் அட்டவணைப்படி தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை வாயிலில் 11.09.2020 முதல் 18.09.2020 வரை காலை 10 மணிக்கு – ஒவ்வொரு நாளும் ஓர் அணி என்ற நிலையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தவிருக்கிறது!
கோரிக்கைகள்
---------------------
1. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்! 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்!
2. தொடர்வண்டித்துறையின் தென் மண்டலப் பணிகளுக்கான தேர்வுகளையோ, நேர்காணல் களையோ அனைத்திந்திய அளவில் நடத்தக்கூடாது. தென்னகத் தொடர்வண்டித் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலங்காலமாக வசித்து வரும் மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், கலந்து கொள்ள முடியும் என்று வரம்பு விதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள இதர இந்திய நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்குமான வேலைத் தேர்விற்கும், நேர்காணலுக்கும் தமிழ்நாட்டில் காலங்காலமாக வசித்து வரும் மக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும்.
3. அண்மையில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் உதவி ஓட்டுநர் (அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட்) மற்றும் தொழில்நுட்பப் பணியாளர் (டெக்னீசியன்) பணிகளுக்குத் தேர்வு செய்த 3,218 பேரில் 10 விழுக்காட்டினருக்கு மேலுள்ள வெளி மாநிலத்தவர் பணிகளை இரத்து செய்து, அந்த இடங்களுக்கு ஏற்கெனவே தேர்வெழுதியுள்ள தமிழர்களை மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.
தென்னகத் தொடர்வண்டித் துறையில் பழகுநராக (ஆக்ட் அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்த தமிழர்களுக்கு, பணியமர்த்தத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களை வடிகட்டும் முறையில் நடத்தப்படும் ஓட்டப்பந்தயம் போன்ற உடல் தகுதித் தேர்வை இரத்து செய்ய வேண்டும்.
4. மண்ணின் மக்களுக்கு வேலையை உறுதி செய்யும் சட்டங்கள் கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலைக்கு உறுதியளிக்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்! இச்சட்டம் நடுவண் அரசு மற்றும் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காடு வேலையும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடு வேலையும் தமிழர்களுக்கே என விதிமுறை வகுக்க வேண்டும்!
போராட்ட அட்டவணை
--------------------------------
நாள் கிழமை தலைமை
11.09.2020 வெள்ளி வே.க. இலக்குவன்
த.தே.பே. திருச்சி மாநகரச் செயலாளர்
12.09.2020 காரி நா. வைகறை
த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர்
14.09.2020 திங்கள் க. முருகன்
த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்
15.09.2020 செவ்வாய் க. அருணபாரதி
த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்
16.09.2020 அறிவன் மு. தமிழ்மணி
த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்
17.09.2020 வியாழன் கோ. மாரிமுத்து
த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர்
18.09.2020 வெள்ளி ம. இலட்சுமி
தலைவர் - மகளிர் ஆயம்
அன்னையின் மடியில் அனாதையா?
சொந்த மண்ணில் அகதிகளா?
================================
தமிழர்களே, இந்தியா என்பது பல்வேறு இனங்களின் இணைப்பு! இன அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மறுப்பதும் இந்திக்காரர்களையும் மற்ற வெளி மாநிலத்தவர்களையும் வேலையில் மிக அதிகமாகச் சேர்ப்பதும் பச்சையான தமிழின ஒதுக்கல் கொள்கையாகும்!
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன ஆதிக்கவாதிகள் மண்ணின் மக்களாகிய கருப்பினத்தவர்களை ஒதுக்கி ஓரங்கட்டியதைப் போல் (Aparthied), தமிழ்நாட்டில் தமிழர்களை இந்திய ஆட்சியாளர்கள் இன ஒதுக்கல் செய்கிறார்கள். உரிய கல்வித் தகுதி பெற்று வேலை கேட்டு, ஒரு கோடிப் பேருக்கு மேல் ஆண்களும் பெண்களும் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளார்கள்.
இந்த இன ஒதுக்கல் அநீதிக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வுரிமை இழந்து வறுமையில் மடிவதா? போராடி தாய்மண்ணின் வாழ்வுரிமையை மீட்பதா? இந்த வினாவுக்கு இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் விடை கண்டாக வேண்டும்!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்கீழ் அன்றைய சென்னை மாகாணத்தில் நடந்த காங்கிரசு ஆட்சி, 1938இல் இந்தியைத் திணித்தது. அதை எதிர்த்து, இதே திருச்சியிலிருந்து – தமிழின உணர்வாளர்கள் மாபெரும் பரப்புரை நடைப்பயணம் சென்னையை நோக்கி நடத்தினார்கள். அவர்களை வரவேற்க சென்னைக் கடற்கரையில் மறைமலையடிகளார் தலைமையில், பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தலைவர்களும் தமிழறிஞர்களும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் 11.09.1938 அன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அந்த மக்கள் கடலில்தான், “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற முழக்கத்தைத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். அந்தத் தமிழினத்தின் இன்றையத் தலைமுறையினர் நாம்! அதே செப்டம்பர் 11 இல், “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்துடன் போராட்டக் களத்தில் குதிக்கின்றோம்! வாருங்கள் தமிழர்களே!
தீர்மானம் 2 :
இந்திய அரசின் இன உரிமை ஆக்கிரமிப்பை
“மாநில உரிமைப் பறிப்பு” என்று
மென்மைப்படுத்தக் கூடாது!
================================
கொரோனா பேரிடரால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உயிருக்கு அஞ்சி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இக்காலகட்டத்தில், நாள்தோறும் புதிய அறிவிப்புகள் மற்றும் சட்டங்கள் வழியாக தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது மோடி தலைமையிலான இந்திய அரசு!
இந்தி – சமற்கிருத மொழிகளைத் திணிப்பது, புதிய கல்விக் கொள்கையின் வழியே கல்வி பெறும் மக்களின் உரிமையையும், புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வழியே கருத்துக்கேட்பு உள்ளிட்ட சனநாயக உரிமைகளை நீக்கி - சுற்றுச்சூழலை நாசமாக்குவது, புதிய மின்சார சட்டத்தின் வழியே மாநில அரசின் மின்சார உரிமையைப் பறிப்பது, புதிய மீன்பிடிக் கொள்கை வழியே மண்ணின் மக்களுக்கும் மாநில அரசுக்குமுள்ள மீன்பிடி உரிமையைப் பறிப்பது, ஒரே நாடு – ஒரே ரேசன் திட்டம் வழியே ஞாயவிலைக் கடைகளை மூடி உணவு உரிமையைப் பறிப்பது என, கொடிய இக்கொரோனா காலத்தில் - எதேச்சாதிகார ஆணவத்துடன் இந்திய அரசு நடத்திக் கொண்டிருக்கும் உரிமைப் பறிப்புகள் மிகமிகக் கொடூரமானவை!
இந்த உரிமைப் பறிப்புகளை “மாநில உரிமைப் பறிப்பு” என்பதாகவே, பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இது “மாநிலங்கள்” என்ற பெயரில் அமைந்துள்ள தேசிய இனத் தாயகத்தின் – தேசிய இனத்தின் உரிமைப் பறிப்புகள் ஆகும்!
தமிழ்த்தேசிய இனம் உள்ளிட்ட இயற்கையான தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து, ஆரிய - இந்தி இன ஆதிக்க மையத்தில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்கிறது.
இந்திய அரசின் இந்த ஆரிய இன அதிகாரக் குவிப்பை “மாநில உரிமைப் பறிப்பு” என்று நிர்வாகச் சிக்கலாக சுருக்கிக் காட்டக்கூடாது. அதிகார ஆக்கிரமிப்பை மென்மைப்படுத்தும் இச்சொல்லாடலைக் கைவிட்டு, இந்திய அரசின் உண்மையான ஆரிய – இந்தி ஆதிக்க இன அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை பறிக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்தப் புரிதலோடு தமிழர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் 3 :
காவிரி நீர்ப் பகிர்வில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
செத்துக் கிடக்கிறது! உபரி நீர்த் திட்டங்கள்
கூறி ஏமாற்றுகிறது எடப்பாடி அரசு!
================================
கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வங்கிய காவிரி இறுதித் தீர்ப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் முழுநேரப் பணி கொண்ட “காவிரி மேலாண்மை ஆணையம்” அமைக்கக் கட்டளையிட்டது. ஆனால், இந்திய அரசு “பெயருக்கு” ஒரு ஆணையத்தை அமைத்துத் தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டது. முழுநேரத் தலைவரே, முழுநேர அதிகாரிகளோ இல்லாத மேலாண்மை ஆணையத்தையும் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்துள்ளது.
இந்திய அரசின் 01.06.2018 நாளிட்ட அரசிதழில் வெளியான அறிவிக்கையில், ஒரு முழுநேரத் தலைவரும், 2 முழுநேர உறுப்பினர்களும், 6 பகுதி நேர உறுப்பினர்களும் காவிரி ஆணையத்தில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை முழுநேரத் தலைவரோ, முழுநேர உறுப்பினர்களோ அமர்த்தப்படவில்லை.
இதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய காவிரி நீரையும் கர்நாடக அரசு 2018லிருந்து இப்பொழுது வரை திறந்துவிடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மாதந்தோறும் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிடச் செய்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தவில்லை.
இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது தொடர்கதை! ஆனால், தமிழ்நாடு அரசும் தனது மக்களுக்குரிய சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட முன்வராமல் இந்திய அரசின் வஞ்சகத்திற்குத் துணை போவது மிகப்பெரும் துயரம்; மிகப்பெரும் இனத்துரோகம்!
உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி, 2020 சூன் மாதம் 9.19 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 6.2 ஆ.மி.க. தண்ணீர்தான் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. சூலை மாதம் 31.24 ஆ.மி.க. கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 11.3 ஆ.மி.க.தான் மேட்டூர் அணைக்கு வந்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் இவ்வாண்டு கர்நாடகத்தில் முன்கூட்டிய தென்மேற்குப் பருவமழை கூடுதலாகப் பெய்து, அம்மாநில அணைகளில் தண்ணீர் இருப்பு போதிய அளவு இருந்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தவில்லை. தமிழ்நாடு அரசு அதன்படி தண்ணீர் தர உரிய முயற்சி எடுக்கவில்லை! ஆனால், 28.08.2020 அன்று திருவாரூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மாதந்தோறும் பெற வேண்டிய காவிரி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்ற செய்தியாளர்களிடம் மார்தட்டிப் பேசினார்.
2020 ஆகத்து மாதம், எதிர்பாராத வகையில் பெருமழைப் பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டு, கிருட்டிணராஜ சாகர், கபிணி அணையில் நிரம்பியதால், அவ்வணைகளைப் பாதுகாக்க கர்நாடகம் திறந்துவிட்ட மிகை வெள்ள நீரை மாதாமாதம் வந்தக் கணக்கில் முதலமைச்சர் சேர்த்துப் பேசியதைப் பார்த்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சராகவே பேசுகிறார் என்ற எண்ணம்தான் உழவர்களுக்கு ஏற்பட்டது.
கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை அளிக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற, முழுநேர அதிகாரிகளைக் கொண்ட காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை அந்தந்த மாதமும் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றியமையாத இப்பணிகளைச் செய்யாமல், மேட்டூர் மிச்ச நீரை தமிழ்நாடு முழுவதற்கும் கொண்டு செல்ல பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் புதிய புதிய திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு தீட்டுவதும், செயல்படுத்துவதும், காவிரி டெல்டா மக்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் ஆதாயத் தந்திரமாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு, தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!
தீர்மானம் 4 :
வாழ்வாதாரம் இழந்த மக்களிடம் கடன் தவணை
கேட்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது
குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!
================================
கொரோனா கொள்ளை நோய் காரணமாக இந்திய – தமிழ்நாடு அரசுகள் அறிவித்த பொது முடக்கம், கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. தொழிற்சாலைகள் – நிறுவனங்கள் – கடைகள் மூடப்பட்டு, வணிக நடவடிக்கைகளே நிறுத்தப்பட்டதால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துத் தவிக்கின்றனர்.
இச்சூழலை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் பொது மக்களிடம் கடன் தவணை கேட்டது அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, மூன்று மாதங்கள் எந்தக் கடன் தவணையும் கட்ட வேண்டாம் என இந்திய சேம வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அது இன்றுடன் (2020 ஆகத்து 31) முடிவடைகிறது. இன்னும் நிலைமை சீராகாத நிலையில், அது இன்னும் 6 மாத காலத்திற்காவது நீட்டிக்கப்பட வேண்டும்.
இன்னொருபுறத்தில், இந்திய சேம வங்கின் மூன்று மாத காலம் கடன் தவணைக் கட்ட வேண்டாம் என்ற அறிவிப்பை பல வங்கிகள் பின்பற்றவில்லை. தொடர்ந்து, பல்வேறு வங்கிகள் கடன் தவணை கேட்டது, கடும் கண்டனத்திற்குரியது.
இந்திய சேம வங்கிக்கும், இந்திய அரசுக்கும் கட்டுப்பட வேண்டிய வங்கிகளே இவ்வாறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும்நிலையில், சிறுதொகைக் கடன்களை சட்ட விரோதமாக அதிக வட்டியில் அளித்து வரும் கந்துவட்டிக்காரர்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த எவ்வித அமைப்பும் இல்லாத நிலை உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் தவணை கட்டமுடியாமல், தனித்தும், குடும்பத்தோடும் தற்கொலையில் ஈடுபட்டோர் குறித்த செய்திகள், மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. தஞ்சை மாவட்டம் – வல்லத்தில், வீட்டுக் கடன் வாங்கியவர் 9 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு வட்டியுடன் சேர்த்து 13 இலட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மேலும் 6 இலட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், வங்கி வாயிலேயே தீக்குளித்து உயிரிழந்துள்ளார். தருமபுரி, கிருட்டிணகிரி போன்ற பல மாவட்டங்களில் மிகச் சிறிய கடன் தொகையைக் கூட கட்ட முடியாமல், எளிய மக்கள் தனது வீட்டையே காலி செய்து விட்டு ஓடும் கொடுமை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
எனவே, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இந்நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கடன் தொல்லையில் சிக்கியுள்ள மக்களை, தவணை கேட்டு அச்சுறுத்தும் வங்கிகள் – நிதி நிறுவனங்கள் – தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! கடன் தவணை கட்டுவதற்கு ஓராண்டு காலம் விலக்களிக்க வேண்டும்.
விலக்கு அளிக்கப்படும் காலத்திற்கும் சேர்த்து வட்டி வசூலிக்கும் கொடும் வட்டிமுறையைக் கைவிடச் செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு இந்திய – தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் 5 :
இணையவழி சூதாட்டத்தை முற்றிலுமாகத்
தடை செய்ய வேண்டும்!
================================
இணையவழிச் சூதாட்டக் கொள்ளை மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கிறது. “ஆன்லைன் ரம்மி” என்ற பெயரிலும், வேறு பல பெயர்களிலும் கணினி மற்றும் கைப்பேசிகளில் மட்டுமின்றி, தொலைக்காட்சிகளிலும் வெளிப்படையான விளம்பரங்கள் வந்து கொண்டுள்ளன.
பணம் வைத்து சூதாடும் சீட்டாட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ள நிலையில், இதுபோன்ற விளம்பரங்கள் இவ்வளவு வெளிப்படையாக வந்து கொண்டிருப்பதும், இதில் அறியாமல் சிக்கிக் கொள்வோர் பணத்தை இழந்து நிற்பதோடில்லாமல் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் அவலம் நடந்து கொண்டுள்ளது.
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக இதனைத் தடை செய்து, அதற்கான இணையத் தளத்தையும், கைப்பேசி செயலியையும் உடனே முடக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment