ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



சூரியா அறிக்கை:
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு
“இந்து” நாளேடு தக்க பதிலடி!


பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

அகரம் அறக்கட்டளைத் தலைவர் நடிகர் சூரியா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சீறிப் பாய்ந்ததை மறுத்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிட்டது இன்று(16.09.2020) இந்து ஆங்கில நாளேடு!

அவ்வேட்டின் முதன்மை ஆசிரியவுரை செய்துள்ள சாட்டையடித் திறனாய்வுகளில் சில:

“கொரோனோ அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வெழுத ஆணை இட்டது” சரியல்ல என்ற சூரியாவின் விமர்சனம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான சில மணி நேரங்களில் முந்திக் கொண்டு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கடிதக் கணை பாய்ச்சினார். இதற்கான அவசரக் காரணத்தை நீதிபதி கூற வேண்டும்!

விமர்சனங்களை சகித்துக் கொள்ளாத நீதிபதியின் (எஸ்.எம்.சுப்பிரமணியம்) வேகம் மன்னராட்சியின் எதேச்சாதிகாரம் போல் உள்ளது.

சமூகத்தில் சிறப்பு வாய்ப்பற்றவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிடத் தனி அறக்கட்டளை வைத்துப் பாராட்டத் தக்க பணிகள் செய்து வருகிறார் அந்த நடிகர். எனவே அவர், மாணவர்களின் நலன் கருதி செய்த விமர்சனம் நீதி மன்ற அவமதிப்பு அல்ல! மேலும் அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை - பொது நலன் சார்ந்த கருத்துரிமையைப் பறிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அத்துடன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சூரியா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய விடுத்த வேண்டுகோளை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அனுமதிக்கக் கூடாது.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி செய்த விமர்சனத்தின் மீது, அவமதிப்பு வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பில்லை! உச்சநீதிமன்றம், விதுசா ஓபிராய் வழக்கில் 2017-இல் அளித்த தீர்ப்பே இதற்குச் சான்று!

எனவே சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாகி அவர்கள், சூரியாவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்க அனுமதிக்கக் கூடாது.

சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் வாதத்தில் சட்டதின் சாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் இந்து ஆசிரியவுரை கூறியுள்ளது.

இந்து நாளேடு கொடுத்துள்ள பதிலடி போதுமா?

கடைசியாக ஒரே ஒரு வினா: இந்த ஆசிரியவுரைக்கு இந்து ஏடு “மதியற்ற முன்னெடுப்பு”(Ill-advised move) என்று தலைப்புக் கொடுத்துள்ளது. நீதிபதியின் மதியை மறைத்தது எது? இந்து ஏட்டுக்குப் பாராட்டுகள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.