ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இனிமேல் திருமாவளவன் எழுச்சித் திராவிடரா?” - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


“இனிமேல் திருமாவளவன் எழுச்சித் திராவிடரா?”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

தோழர் தொல். திருமாவளவன் அவர்களுடன் “தலித்தியம்” குறித்து 1990களில் தருக்கம் செய்த நினைவு - தோழர் இரவிக்குமார் நேர்காணலைப் படித்தவுடன் வந்தது. ஆங்கில இந்து ஏட்டில் 29.09.2020 அன்று, இந்நேர்காணல் வந்துள்ளது. பறையர்கள் மற்றும் அறுபது பிரிவினர்களை அட்டவணை வகுப்பினர் (SC) என்று குறிப்பிடாமல் “ஆதிதிராவிடர்” என்று அரசு குறிப்பிட வேண்டும்; இந்த ஆதிதிராவிடர் பிரிவில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் அருந்ததியரைச் சேர்க்கவில்லை என்று இரவிக்குமார் கூறியிருந்தார்.
இதற்கு முன், அண்மையில் ஐயா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி நடந்த காணொலிக் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய வி.சி.க. தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள், பறையர் உள்ளிட்ட 60 பிரிவினர்களை “ஆதிதிராவிடர்” என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்ற கருத்தைப் பேசினார் என்றும் “இந்து” நாளேடு குறிப்பிடுகிறது.
“பறையர்” உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத் தலித்துகள் என்று அழைக்க வேண்டும் என்று 1990களில் வலியுறுத்தினார் திருமா. அப்போது மதுரையில் அரசுப் பணியில் இருந்தார். மதுரை காக்காத்தோப்புத் தெருவில் உள்ள அன்பு அச்சக உரிமையாளர் - ஐயா அனல் மு. விவேகானந்தன் அவர்கள் சிறந்த தமிழ் இன உணர்வாளர்.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மொழிப்போர் வரலாற்றைப் பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் எழுத அதை நூலாக வெளி யிட்டவர் அனல் விவேகானந்தன். மதுரையில் அவர் அச்சகத்தில் தமிழின உணர்வாளர்கள் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
அந்த அன்பு அச்சகத்திற்கு எதிரில் உள்ள விசாகம் விடுதியில் நான் தங்கியிருந்த போது (1993 ஆக இருக்கலாம்) அந்த அறையில் சிறு கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தோம். தோழர் திருமாவளவன் அவர்களையும் அழைத்திருந்தோம்.
அப்போது நடந்த கலந்துரையாடலில் நான் நம் தமிழர்கள், தங்களைத் “தலித்” என்று மராத்திச் சொல்லால் அழைத்துக் கொள்ள வேண்டியதில்லை, “அரிசன்” என்பதும் வேண்டாம்; அதற்கு மாற்றாக ஆதித்தமிழர் என்று அழைக்கலாம் என்றேன். அப்போது திருமா அவர்கள், “தலித்” என்பதில்தான் போர்க்குணம் உள்ளது, உரிமை எழுச்சி உள்ளது, தலித்தியம் என்பது ஒரு தத்துவம் என்றார்.
பின்னர் எங்களது “கண்ணோட்டம்” மாத இதழில் “தலித்தியம்” என்ற சொற்கோவையை மறுத்து ஒரு கட்டுரை எழுதினேன். “தலித்தியம்” என்பது ஒரு தத்துவமல்ல, மராட்டிய மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தில் அவர்கள் சூட்டிக் கொண்ட பெயர்; தத்துவம் என்பதற்கு விரிந்த பொருள் இருக்கிறது. தத்துவத்திற்கான உள்ளடக்கம் தலித்தியத் தில் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் கூடத் தலித்தியம் என்ற பெயரில் ஒரு தத்துவத்தைக் கூறவில்லை; அவர் எழுத்துகளில் “தலித்” என்ற சொல் காணக் கிடைக்கவில்லை என்று அவரைக் கற்றறிந்த பெருமக்களும் கூறுகிறார்கள் என்றெல்லாம் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். தோழர் திருமா, மேற்கண்ட எனது கட்டுரையை மறுத்து, ஒரு துண்டறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் அமைப்பின் பெயர் DPI (தலித் பாந்தர் ஆஃப் இந்தியா).
“தங்களை ஆதிதிராவிடர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்” என்று இப்போது தோழர் தொல். திருமாவளவன் அவர்களும், து.இரவிக்குமார் அவர்களும் வலியுறுத்துவதைப் பார்த்தபோது மேற்கண்ட “தலித்தியம்” தொடர்பான தருக்கங்கள் என் நினைவுக்கு வந்தன.
திருமாவளவனைப் போன்றே தலித் - தலித்தியம் ஆகியவற்றை அதிகமாக வலியுறுத்தியவர் மருத்துவர் கிருட்டிணசாமி அவர்கள். அவர் இப்போது தங்களைத் “தேவேந்திர குல வேளாளர்” என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அந்தக் காலத்திலேயே தங்களைத் “தேவேந்திர குல வேளாளர்கள்” என்று வலியுறுத்திய வர்கள் குருசாமி சித்தர் அவர்களும், ஜான்பாண்டியன் அவர்களும் ஆவர்!
ஆரியத்தின் வர்ண - சாதிக் கோட்பாடு தமிழ்நாட்டில் புகுந்து தொல் தமிழ் மக்களில் ஒரு சாராரைப் பிறப்பு அடிப்படையில், இழிவுபடுத்தி, அவர்களுக்கு எதிராகத் தீண்டாமையைத் திணித்தது. ஆரியரல்லாத தமிழ்ச் சாதி தன்னலக்காரர்களும் ஆதிக்கவாதிகளும் ஆரியம் கற்பித்த தீண்டாமையைக் கடைபிடித்தனர். இந்த மனித உரிமைப் பறிப்பிற்கு எதிராகக் கொதித்தெழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு குறிச்சொல்லைத் தேர்வு செய்து கொள்வதில் நாம் விடாப்பிடியாகக் குறுக்கிட வேண்டியதில்லை என்று கருதி, அத்துடன் “தலித்” சொல் எதிர்ப்புத் தருக்கத்தை நிறுத்திக் கொண்டோம்.
ஆனால் இப்போது தொல். திருமாவளவன் அவர்களும், மருத்துவர் கிருட்டிணசாமி அவர்களும் “தலித்” என்ற சொல்லைக் கைவிட்டு விட்டார்கள்; நல்லது. ஆனால், “ஆதி திராவிடர்” என்ற சொற்கோவை யைத் திருமா தெரிவு செய்ததுதான் மீண்டும் குழப்பம் தருகிறது.
“திராவிட” என்பது ஆரியம் உருவாக்கிய சொல். சமற்கிருத நூல்களில்தான் “திராவிட” என்ற சொல் உள்ளது. தாயுமானவர் காலத்திற்கு முன்பு வரை - அதாவது 18ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை தமிழ் இலக்கியம் எதிலும் “திராவிட” என்ற சொல் இல்லை! ஒப்பிலக்கணம் எழுதிய பேராயர் கால்டுவெல் அவர்கள், சமற்கிருத மனுசுமிரிதியில் இருந்தும் குமாரில பட்டரின் தந்திர வார்த்திகா நூலிலிருந்தும் “த்ராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்கிறார். தமிழ், தமிழர் அடையாளங்களை மறைக்கும் சொல்லாகவே 20ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடத் தலைவர்களால் அச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தலித்தியத்தைக் கைவிடும் தலைவர்கள் - “ஆதித் தமிழர்” என்ற சொல்லை ஏன் தெரிவு செய்யவில்லை? ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட தெலுங்கு மக்களை ஆதி ஆந்திரர் என்று அழைக்கின்றனர். கர்நாடகத்தில் “ஆதி கர்நாடகா” என்று அழைக்கின்றனர். இங்கு மட்டும் ஏன் “ஆதி திராவிடர்”?
இதுவரை திருமா அவர்களை “எழுச்சித்தமிழர்” என்று சிறப்புப் பெயருடன் வி.சி.க.வினர் அழைத்து வருகிறார்கள். இனிமேல், “எழுச்சித் திராவிடர்” என்று அழைப்பார்களோ?
“தமிழர்” என்ற நம் இனச் சொல்லில் நமது உளவியல் ஒருமைப்பாடு பொதிந்துள்ளது. ஒரே குருதி மரபு; ஒரே மரபணு என்ற உறவு உணர்ச்சியை “தமிழர்” என்ற இனச்சொல் தருகிறது. தமிழர் என்ற ஓர் அடிமரத்தின் கிளைகள்தாம் பல சாதிகளாக - உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு, பிரிந்து கிடக்கிறோம். எனவே, இனமரபு அடிப்படையில் நம் முன்னோர்கள் ஒரே பழங்குடியாய் இருந்தவர்கள் என்ற உணர்ச்சியும் உளவியலும், சாதி - ஏற்றத்தாழ்வை நீக்கவும், சாதிச் சுவர்களைத் தகர்க்கவும் கூடுதலாகப் பயன்படும்!
ஏற்கெனவே “அரிசன்” என்று பெயர் சூட்டப்பட்டது; பின்னர் “ஆதிதிராவிடர்” என்று பெயர் சூட்டப்பட்டது. அடுத்து, “தலித்” என்று பெயர் சூட்டப்பட்டது. மூன்று மே தமிழர் மரபுக்குத் தொடர்பில்லாத அயற்பெயர்கள்! தொடக்கத்திலேயே, ஆதித்தமிழர் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தால், அவ்வப்போது ஓர் அயல் பெயரைச் சுமக்கும் அவலம் வந்திருக்காது. சிந்தியுங்கள்!
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் 2020 அக்டோபர் இதழில் வெளியாகியுள்ளது).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.