ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க! - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


வன்முறையில் ஈடுபட்ட
சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தமிழர் தேசிய முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. வை.இரா. பால சுப்பிரமணியம் அவர்கள், நேற்று (29.12.2020) இரவு - சிதம்பரம் நடராசர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவில் வழிபட முயன்றபோது, நடராசர் கோயில் தீட்சிதர்கள் அவரைக் கீழே தள்ளிவிட்டு, தாக்குதல் நடத்தி, அவர் கையிலிருந்த தீபாரதனைத் தட்டை பிடுங்கி வீசியெறிந்து இழிசொற்கள் பேசி அராஜகத்தில் ஈடுபட்டனர். 

தேவாரம், திருவாசகம் பாடி தமிழ்வழியில் நடராசர் ஆலயத்தில் வழிபாடு நடக்க வேண்டுமென்றும், நடராசர் ஆலயத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கோரி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும், கூட்டங்களிலும் திரு. பாலசுப்பிரமணியம் முக்கியப் பங்காற்றினார் என்பதால், தீட்சிதர்கள் அவர் மீது தொடர்ந்து வன்மம் காட்டி வருகிறார்கள். 

சென்ற ஆண்டு (2019), ஆருத்ரா தரிசனத்தின்போது இதேபோல் அவர் மீது தாக்குதல் நடத்தியதைக் கருத்தில் கொண்டு, அவர் கோரியபடி அவருக்கு சிதம்பரம் நகரச் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க அவரை சூழ்ந்து நின்று கொண்டிருந்தபோதும், காவலர்களையும் தாக்கி, திரு. பாலசுப்பிரமணியத்தையும் கடுமையாகத் தாக்கி இழிவுபடுத்தி இருக்கிறார்கள். 

நடராசர் கோயில் தீட்சிதர்களின் இந்த வன்முறை கடும் கண்டனத்திற்குரியது! 

திரு. பாலசுப்பிரமணியம் அவர்களைத் தாக்கிய தீட்சிதர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் காவல்துறையில் புகார் மனு அளித்திருக்கிறார். அதன்மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பாலசுப்பிரமணியத்தைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஊடகங்களுக்கு அறிக்கை அளித்தேன். 

இந்நிலையில், தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. வழக்குப்பதிவோடு நின்றுவிடாமல், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோல் அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் தீட்சிதர்களைக் காவல்துறையினர் கண்காணித்து எச்சரிக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.    
                              

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.