ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது! - மகளிர் ஆயத் தலைவர் ம. இலெட்சுமி அம்மா வலியுறுத்தல்!டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது!

மகளிர் ஆயத் தலைவர்
ம. இலெட்சுமி வலியுறுத்தல்! 


ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ் மக்களை சீரழித்துக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இப்பொழுது தேநீர் கடைகளைப் போல டாஸ்மாக் பார்களையும் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. 

மதுப்பழக்கத்தால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் ஆளுமையை இழந்து, உடலுழைப் பிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குடும்பங்கள் நிம்மதியின்றி தவிக்கின்றன. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் மதுக்கடை திறந்திருப்பதுதான் என்பது புள்ளிவிவரங்கள் வழியாக மெய்ப்பிக்கப்பட்ட உண்மை!

இந்நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துத் தவித்து வரும் சூழலில், இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைத் திரும்பி வருகிறது. இப்போது கிடைக்கும் அந்தக் குறைந்தபட்ச வருவாயைக் கூட, டாஸ்மாக் மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்ளுகின்ற கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது. 

கையில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல, கூச்சப்படுகிற சிலராவது குடிக்காமல் இருந்ததை பார் திறப்பது குடிக்க ஊக்குவிப்பதாக இருக்கிறது. 

தமிழ்நாடு அரசு தனது வருவாயைப் பெருக்க இந்திய அரசு அள்ளிச் செல்லும் நிதியில் உரிய பங்கை வலியுறுத்திப் பெறுவது, தமிழ்நாடு அரசே பால் வணிகத்தை முழுமையாக ஏற்று நடத்துவது போன்ற மாற்று வழிகளை சிந்திக்க வேண்டுமே தவிர, மது வருமானத்தைச் சார்ந்திருப்பது மக்கள் பகை வழிமுறையாகும்! இப்போது, பார் திறப்பதென்பது இன்னும் இத்திசையில் கூடுதலாக செல்வதாகும். 

எந்த வகையிலும் இந்தப் போக்கு ஞாயமற்றது. இதனை உணர்ந்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பார்களைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக் கடைகளையும், மது உற்பத்தி ஆலைகளையும் மூடுவதற்குக் கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்றும் மகளிர் ஆயம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.