ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசிய முன்னோடி தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!




தமிழ்த்தேசிய முன்னோடி
தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ அவர்களை இளந் தமிழ்த்தேசியர்கள் அறிந்து கொள்வது மிகமிகத் தேவை. தமிழ்த்தேசியத்தின் முன்னோடிச் சான்றோர்களில் அண்ணல்தங்கோ அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் சரியான சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தோன்றினும் அவர்கள் மக்கள் தலைவர்களாக வளர்ச்சியடையாமற் போனது அவர்களுக்கான இழப்பன்று. தமிழினத்தின் இழப்பு!

பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அண்ணல் தங்கோ! தமிழ்நாடு விடுதலை அடையவேண்டும் என்று முழங்கியவர்.

இன்று (12.04.2020) அண்ணல்தங்கோ அவர்களின் பிறந்தநாள். அவர் 1904-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சனவரி 4-ஆம் நாள் இறந்த போது, அவர் பெருமையை அறிஞர் பெருமக்களும் தமிழுணர்வுப் பெரியோர்களும் தெரிவித்த இரங்கல் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் அப்போது (04.01.1974) எழுதிய இரங்கல் பா:

அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
சேயவன் வழுத்தொடு செந்தமிழ் பேணித்
தூய தமிழ்க்கா வலனெனத் தோன்றித்
தேயப் பிரிவைத் தீர்க்கத் துணிந்த
அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
தன்முயற் சியினால் தன்னை உயர்த்தி
மன்னியல் விடுதலை மாண்ட மறவ
உள்ளுவ தெல்லாம் உயர்வே யுள்ளித்
தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்
நீயெமை மறப்பினும் நினைமற வேமே
சேயரும் கேளிரும் நேயரும் ஆயேம்
மாயிரு ஞாலம் மன்னிய காலே!

“தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்” என்று பாவாணர் பாராட்டினார். மிகச்சரியான தெளிவான கொள்கைகள் கொண்ட அண்ணல்தங்கோ, கொள்கையை விட்டு விலகாத இலட்சியத் தமிழர் என்று பாவாணர் பாராட்டுகிறார்.

அண்ணல்தங்கோவின் தெளிவான, சரியான கொள்கைகள் யாவை? தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, எண்ணு வதெல்லாம் உயர்வாய் எண்ணும் பண்பு போன்றவை!

“தூய தமிழ்க் காவலன்”, தேயப் பிரிவைத் (தேசப் பிரிவை) தீர்க்கத் துணிந்த – மன்னியல் விடுதலை மறவன்” என்றெல்லாம் பாவாணர் போற்றுகிறார்.

1974-இல் அண்ணல்தங்கோ காலாமான போது, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்  டி.ஆர்.சுந்தரம் பிள்ளை அவர்கள் அண்ணல் தங்கோ இல்லத்திற்கு எழுதிய இரங்கல் கடிதம் மிகவும் குறிப்பிடத் தக்கது.

“ அருமைச் சகோதரர் அண்ணல்தங்கோ அவர்கள் இறந்து விட்டார் என்ற தபாலை பார்த்ததும் திடீர் அதிர்ச்சியடைந்தேன். கண்ணீர் வடித்தேன். உடம்பு சிலிர்த்தது. நடுக்கம் கொண்டேன். இந்தக் கடிதம் எழுத்து எழுத்தாகக் கூட்டி எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார் டி.ஆர்.சுந்தரம் அவர்கள்.

அண்ணல்தங்கோ அவர்கள், டி.ஆர்.சுந்தரம், ஜி.டி.நாயுடு உள்ளிட்ட முகாமையானவர்களிடம் கலந்து பேசிய ஒரு செய்தியை டி.ஆர்.சுந்தரம் மறை பொருளாகத் தமது இரங்கல் கடிதத்தில் குறிப்பிடுகிறார்:

“இங்கு வந்து தன் இயக்கத்தைப் பற்றிக் கோவையில் பேச வேண்டும், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், மேன்மையுற்ற ஜி.டி.நாயுடு அவர்களைக் கண்டு எல்லாம் நடத்த வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன் எழுதியிருந்தார்.”

டி.ஆர்.எஸ், ஜி.டி.நாயுடு போன்றவர்களிடம் அண்ணல்தங்கோ நேரடியாகவும் கடிதம் வாயிலாகவும் பேசிய முகாமையான செய்தி, தமிழ்நாடு விடுதலைக்கான இயக்கம் தொடங்க வேண்டும் என்பதுதான். இதனை இத்தனை உறுதியாக நான் கூறுவதற்குக் காரணம் ஜி.டி.நாயுடு  அவர்கட்கும் அண்ணல்தங்கோ அவர்கட்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அண்ணல் தங்கோ பெயரன் அருட்செல்வன் வழியாக அறிந்ததுதான்! அண்ணல் தங்கோ அவர்கட்கு ஜி.டி.நாயுடு அர்கள் எழுதிய நீண்ட கடிதத்தைப் பார்த்தேன். அதில் தனித்தமிழ்நாடுக் கோரிக்கையை இருவரும் ஒத்த கருத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி உள்ளது.

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியை நாடியதும், ஜி.டி.நாயுடு அவர்கள் உதவி செய்ய ஒப்புக் கொண்டதும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எழுத்துகள் வழி ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.

அண்ணல்தங்கோ அவர்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் காலமான அதே 04.01.1974 அன்று தான் கோவையில் ஜி.டி.நாயுடு அவர்களும் காலமானார்! என்னே துயரம்!

அண்ணல்தங்கோ அவர்கள் பெயரை நான் முதல் முதலாக அறிந்து கொண்டது பாவாணர் அவர்கள் வழியாகத் தான். பாவாணர் – பாவலரேறு ஆகியோர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகத்தில் நான் செயல்பட்ட போது, திருச்சி அசோகா விடுதியில் பாவாணர் தலைமையில் உ.த.க.வின் செயல்பாட்டாளர் பேரவை நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அண்ணல்தங்கோ அவர்களின் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு இலட்சியம், அவர் பட்டாள மிடுக்குடன் வணக்கம் சொல்லும் முறை முதலியவற்றைப் பாராட்டிப் பேசினார் பாவாணர்.

தனித்தமிழ் ஆர்வம்

அண்ணல்தங்கோவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன், தந்தையார் பெயர் முருகப்பனார். தாயார் பெயர் மாணிக்கம் அம்மாள். அவர் ஊர் குடியாத்தம். சுவாமிநாதன் என்ற பெயரை அண்ணல் தங்கோ என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார். தம் பெயரை மாற்றியது மட்டுமின்றி மற்றும் பலர்க்கும் தமிழில் பெயர் மாற்றினார். அவர்களில் சிலர்:

தி.மு.க. தலைர்களில் ஒருவரான அரங்கசாமிக்கு அரங்கண்ணல்; தி.க. தலைவராகப் பின்னால் வந்த காந்திமதிக்கு - மணியம்மை; தி.மு.க தலைவர்களில் ஒருவரான சி.பி.சின்ராஜ் – சி.பி.சிற்றரசு; திருச்சி குளித்தலை தனபாக்கியம் – பொற்செல்வி (தி.மு.க.)…. இவ்வாறு பல பேருக்கு அண்ணல் தங்கோ மாற்றிய தமிழ்ப் பெயர்கள் நிலைத்துவிட்டன.

நிலைக்காமல் போன பல பெயர்கள் உண்டு. மு.கருணாநிதிக்கு - அருட்செல்வன், சி.பா.ஆதித்தனார்க்கு – சி.பா.பகலவனார், கிருபானந்த வாரியார்க்கு – அருளின்பக்கடலார்.

ஆரிய எதிர்ப்பு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரசுப் போராளியாக அரசியலில் நுழைந்தவர் அண்ணல் தங்கோ. பல கட்டங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு மொத்தம் 5½ ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரசுக்காரராக இருந்தபோதிலும் 1927-இல் தமது திருமணத்தில் பிராமணப் புரோகிதரையும் சமற்கிருதத்தையும் விலக்கி, தாமே தலைமை தாங்கி சிவமணி அம்மையாரை மணம் முடித்தார்.
தமது கடித அட்டைத் தலைப்பில் “உள்ளுவம் வள்ளுவம் தள்ளுவம் ஆரியம்” என்று அச்சிட்டுக் கொண்டார்
.
பெரியார், அண்ணா ஆகியோரோடு சேர்ந்து தன்மதிப்பு இயக்கத்திலும் செயல்பட்டிருக்கிறார். பெரியாரின் “திராவிட” இனவாதத்தை மறுத்து அவரிடமிருந்து வெளியேறிவிட்டார்.

“தமிழ்நிலம்” என்ற திங்கள் இதழை இலக்கிய ஏடாக, இனவிடுதலைத் தாளிகையாகத் தொடங்கினார். பின்னர் அவ்விதழைக் கிழமை(வார) ஏடாக மாற்றினார்.
பராசக்தி, பெற்ற மனம், பசியின் கொடுமை, கோமதியின் காதலன் ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களில் சில:

1. அறிவுப் பா 
2. தமிழ் மகள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு 
3. அண்ணல் முத்தம்மாள் பாட்டு 
4. மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா? 

தமிழர் திருநாள்

தைப் பொங்கல் நாளைத் தமிழர் திருநாள் என்ற பெயரில் இலக்கிய அரங்குகள் நடத்திக் கொண்டாடினார். வேலூரில் அண்ணல்தங்கோ நடத்திய தமிழர் திருநாள் விழாக்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவாணர், மு.வ, க.அப்பாத்துரையார், கலைஞர் மு.கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், சதாசிவப் பண்டாரத்தார், திருக்குறளார் முனுசாமி முதலிய அறிஞர்கள் உரையாற்றினர்.

தமிழ்த்தேசியத்தின் மூலவர்கள்

முறையான கல்வி நிலையங்களில் கற்காமல் தன் முயற்சியில் கற்றறிந்த தமிழ்ச் சான்றோராக விளங்கினார் குடியாத்தம் முருகப்பனார் அண்ணல்தங்கோ! தமிழறிஞர்களுடனும் நல்ல உறவு; தமிழ், தமிழ்நாட்டுத் தனிஉரிமையில் அக்கறையுள்ள ஜி.டி.நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர் சுந்தரம் போன்றவர்களுடனும் கொள்கை வழிப்பட்டு நல்ல நட்பு! துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு!

இப்படிப்பட்ட அண்ணல்தங்கோ அவர்களை இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் எத்தனை பேர் அறிந்து வைத்திருப்பார்கள்? 1916-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கி, தன் குடும்பத்தினரை சிறைக்கனுப்பி, தமிழ்நாடு தமிழர்க்கே தீர்மானத்தை முன் மொழிந்த தமிழ்த்தேசியர் மறைமலை அடிகளாரை எவ்வளவு பேர் அறிவர்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமின்றி, சரியான மொழிக் கொள்கை உள்ள தமிழ்த்தேசியராக விளங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுநாதம், 1965 இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் பாதுகாப்பு சட்டத்தில் சிறை சென்ற வரும், தமிழினக் கொள்கையில் ஊன்றி நின்றவருமான பேராசிரியர் சி.இலக்குவனார்  போன்றோரை எத்தனை பேர் அறிவர்? 

இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் இளந்தலைமுறைத் தமிழர்கள் அறிய வேண்டும். இவர்கள் தங்களின் இலட்சியம் நிறைவேறாமல் மனக் காயத்துடன் மாண்டார்கள்! இவர்களின் இந்த மனக் காயத்தை ஒவ்வொரு இளந்தமிழனும் தமிழச்சியும் தங்கள் நெஞ்சில் பட்ட காயமாக ஏந்த வேண்டும்! காயம் பட்ட புலிக்கு ஏற்படும் சினமும் சீற்றமும் உங்களுக்கு உருவாக வேண்டும்!

நம் முன்னோர்களின் இலட்சியத்தை நாம் நம் காலத்தில் நிறைவேற்றுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்கவேண்டும். இவ்வுறுதியேற்பே அண்ணல்தங்கோ போன்ற தமிழ்த்தேசிய முன்னோடிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்!
 

கண்ணோட்டம் இணைய இதழ்


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.