தமிழ்நாட்டுக் கோயில்களைக் கைப்பற்ற சக்கி வாசுதேவ் சதி! - பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாட்டுக் கோயில்களைக்
கைப்பற்ற சக்கி வாசுதேவ் சதி!
தெய்வத் தமிழ்ப் பேரவை
ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டனம்!
ஆன்மிகப் பெருங்குழும அதிபரான சக்கி வாசுதேவ், அண்மைக் காலமாகத் தமிழர்களின் ஆன்மிக மரபுகளிலும், தமிழ்நாட்டு உரிமைகளிலும் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராகச் செயல்டுவது அதிகரித்து விட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல், “காவிரி அழைக்கிறது” என்ற பெயரில், கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைத் தமிழர்கள் எதிர்பார்க்கத் தேவை இல்லை; கரையோரங்களில் மரங்கள் வளர்த்தால் மழை பொழிந்து, காவிரியில் வெள்ளம் பெருகும் என்று கூறி, தமிழ்நாட்டு மக்களின் மனத்தை மடைமாற்றும் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறார். தமிழர்கள் தங்களின் சட்டப்படியான, வரலாற்று உரிமையான காவிரி நீரைக் கர்நாடகத்திடம் எதிர்பார்க்க வேண்டாம்; அதற்கு ஈடாக மழையை வரவழைத்துக் கொள்ளுங்கள் என்று மடைமாற்றும் சூழ்ச்சித் திட்டம் இது!
கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் வரையிலான இத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துவிட்டது என்று கர்நாடகத்தில் ஊடகங்களும், தன்னார்வலர்களும் அம்பலப்படுத்தி – இப்போது இந்த ஊழல் பற்றிக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் சக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனத்துடன் கர்நாடக அரசும் இணைந்துள்ளது என்பதுபோல், பொய்த் தோற்றத்தை உருவாக்கி, 10,626 கோடி ரூபாயை சக்கி வசூலித்து விட்டார்; இது சட்டவிரோத வழிகளில் செய்யப்பட்ட வசூல் என்பதுதான் வழக்கின் சாரம். கர்நாடக உயர் நீதிமன்றம் தானே முன்வந்து இவ்வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது (The Wire, 24.02.2021),
ஆனால், தமிழ்நாட்டில் தாங்கள் பால்குடித்த தாயின் மார்பை அறுப்பதுபோல், காவிரியில் கர்நாடகத்திடமிருநது பெற வேண்டிய தண்ணீர் உரிமையை நம்மையே கைவிடச் செய்யும் சக்கியின் சூழ்ச்சித் திட்டத்தை அறியாமல் நம் மக்களே “காவிரி அழைக்கிறது” திட்டத்தில் கன்றுகள் நட்டார்கள். அமைச்சர்கள் பல இடங்களில் அதில் கலந்து கொண்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சென்னையில் சக்கியின் “காவிரி அழைக்கிறது” குழுவை வரவேற்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வானளாவப் புகழ்ந்தார்கள் (ஈஷா யோகா இணையதளம் – 15.09.2019).
இப்போது சக்கி வாசுதேவ் தமிழர்களின் கோயில்களின் கைவைத்துள்ளார். தமிழ்நாட்டு சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி, குலதெய்வக் கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களின் உரிமைகளைப் பறித்துத் தமிழ்நாடு அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்று சக்கி வாசுதேவ் கூறுகிறார்.
தமிழ்நாடு அரசின் அடிமைத் தளைகளை அறுத்தெறிந்து, அவற்றை விடுதலை செய்வதற்காக, “இந்துக் கோயில்கள் அடிமை நிறுத்து” என்ற தலைப்பில் போராட்டம் தொடங்கி உள்ளார். கடந்த 27.03.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மிக முக்கியமான கோயில்களின் முன் சக்கி வாசுதேவ் அமைப்பினர் ஆண்கள், பெண்களைத் திரட்டி “அடிமை நிறுத்து” முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சக்கி வாசுதேவ் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து அல்லர். அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். கர்நாடகமோ, அல்லது வேறு மாநிலமோ – எதுவாக இருந்தாலும் அவர் தமிழர் மரபைச் சேர்ந்த சிவநெறியாளரோ அல்லது திருமால் நெறியாளரோ அல்லர். தமிழர் ஆன்மிகத்தில் தலையிட அவர்க்கு உரிமை இல்லை!
மேலும், சக்கி வாசுதேவ் நமது தமிழர் ஆன்மிக மரபின் ஒழுக்கங்களைக் கடைபிடிப்பவர் அல்லர். எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்க் கடவுளான சிவபெருமான் சிலையை நம் தமிழர் மரபுக்கு முரணாக வடிவமைத்து சிவபெருமானுக்குரிய தமிழ்ப்பெயர் எதையும் சூட்டாமல் “ஆதியோகி” என்று அச்சிலைக்குப் பெயர் சூட்டி, ஒரு கட்டடத் திறப்பு விழா போல், தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைத் திறக்க செய்தார். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று மாணிக்கவாசகர் போற்றிய மந்திரம் நமக்கு இருக்கிறது!
ஏற்கெனவே இவர் மீது, தமிழ்நாட்டு மலைக்காடுகளை அழித்தவர், சட்டத்திற்குப் புறம்பாக அவற்றை ஆக்கிரமித்தவர் என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவர் இப்போது நம் மரபுமிக்கத் தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களைக் கைப்பற்றுவதற்காக, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிடச் சொல்கிறார். இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எழுதியுள்ள கடிதம் ஏடுகளில் வந்துள்ளது.
நாளேடுகளில் 03.04.2021 அன்று வந்துள்ள அக்கடிதத்தில், “இந்து சமுதாயத்தினர், தங்களது புனிதமான வழிபாட்டுத் தலத்தைத் தாங்களே பேணிப் பராமரித்து நிர்வகிக்க அவர்களுக்குள்ள சனநாயக உரிமையை அரசு வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த குரல் எழுப்பி இருக்கிறார்கள்”.. … “… கோயில்கள் விடுவிக்கப்பட்டு பக்தர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, முழு ஆற்றலுடன் இயங்கச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் கூறி இருக்கிறார். .
கிறித்துவம், இசுலாம் இரண்டிலும் வெகுசில உட்பிரிவுகள் இருப்பினும் அவற்றில் உலகளாவியத் தலைமைகளும், கட்டுக் கோப்பான வட்டாரத் தலைமைகளும் இருக்கின்றன. அவற்றிற்கான சமய நிர்வாகக் கட்டமைப்புகளை அவர்களும் வைத்திருக்கிறார்கள். இந்து சமயத்தில் அப்படிப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் – அனைத்திந்திய அளவிலும் இல்லை, வட்டார அளவிலும் இல்லை! காரணம் என்ன? அம்மதங்களில் ஒற்றைக் கடவுள் – ஒற்றை புனித நூல் – ஒற்றை வழிபாட்டு முறை என்பன உலகு தழுவிய அளவில் இருக்கின்றன. அவர்களில் வர்ணாசிரம – சாதிப் பிரிவுகள் பிறப்பு அடிப்படையில் இல்லை எனவே அம்மதங்கள் பல நாடுகளில் இருக்கின்றன.
தமிழர் சமயங்களில் சாதிப் பிறப்பை ஞாயப்படுத்தி கூறவில்லை என்றாலும், ஆரிய ஆன்மிக ஆக்கிரமிப்புக்குள்ளாகியதால், தமிழ் இந்துக்களிடையேயும் சாதிகள் வேரூன்றிவிட்டன. (இந்து மதம் என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர்; ஆரியர் வைத்த பெயரன்று).
உலகு தழுவிய – நாடு தழுவிய – வட்டாரம் அல்லது ஊர் தழுவிய ஒற்றை நிர்வாகக் கட்டமைப்பு கிறித்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் இருக்கிறது. அவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பு இந்து மதத்தில் இல்லை. புதிதாக உருவாக்கவும் முடியாது. தெய்வப் பன்மை – வழிபாட்டுப் பன்மை – ஆன்மிகப் பன்மை முதலியவைதாம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு! இப்பின்னணியில் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை நிர்வகிக்க சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்பே மாநில அரசு அறநிலையத்துறையை உருவாக்கியது.
திருவாவடுதுறை, தருமபுரம் போன்ற பல ஆதினங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றின் நிர்வாகத்தின் கீழ் பல கோயில்கள் இருக்கின்றன. அதுவேறு செய்தி.
ஒற்றை சமய நிர்வாகக் கட்டமைப்பு இல்லாத இந்து சமயக் கோயில்களை எந்த பக்தர்களிடம் ஒப்படைப்பது – அதற்கான அளவுகோல் என்ன – அதற்கான நிர்வாக வடிவம் என்ன?
இந்த இடத்தில்தான் சக்கி வாசுதேவின் சூழ்ச்சித் திட்டம் இடம் பிடிக்கிறது. தமிழ்நாடு அரசு, இந்து அறநிலைய ஆட்சித்துறையைக் கலைத்துவிட்டு, கோயில்களைவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அந்த நிலையில் ஏற்கெனவே கோயில்களில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் பிராமணர்கள், மிகப்பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சக்கி வாசுதேவின் ஈஷா மையம் போன்ற ஆன்மிகப் பெருங்குழுமங்கள் அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம்!
தமிழ்நாடு பா.ச.க.வினர் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அவர்களில் எச். இராசா போன்றவர்கள் மிகத் தீவிரமாகக் கோயில்களைக் கைப்பற்றும் கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள். நடப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் (2021) அறிக்கையிலும் பா.ச.க. இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
சக்கி வாசுதேவ் வெளிமாநிலத்தவர் என்பதையும் பா.ச.க.வின் வெளி மாநிலத்தவர்க்கும் தமிழ்நாட்டுக் கோயிலைக் கைப்பற்றும் உரிமை உண்டு என்பதையும் நுட்பமாக உணர்த்தும் வகையில், அவர் முதலமைச்சர்க்கும், எதிர்கட்சித் தலைவர்க்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு செய்தியைக் கூறுகிறார்.
“இம்மாநில மக்கள் மட்டுமல்ல, இந்தச் சீர்திருத்தத்திற்காகக் காத்திருக்கும் நம் சமூகத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்களும், இன்னபிறரும் துடிப்பாக ஆதரவு திரட்டி இந்த ஒரு நோக்கத்திற்காக உறுதியுடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்”.
ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பா.ச.க. போன்ற பல அனைத்திந்திய அமைப்புகளும் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன என்பதைக் குறிப்பாக உணர்த்திவிட்டார் சக்கி!
சக்கி வாசுதேவ் கோருவதுபோல், நம் தமிழ்நாட்டுக் கோயில்கள் அவர்கள் கைக்குப் போய்விட்டால் என்னவாகும்? தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்களிடம் சிக்கி என்ன பாடுபடுகிறதோ, அக்கொடுமைகள்தாம் அனைத்துக் கோயில்களிலும் அரங்கேறும்!
சிதம்பரத்தில் கருவறைக்கு வெளியே சிற்றம்பலத்தில் நின்று தேவாரம் பாடிய பெரியவர் ஆறுமுகசாமியைத் தீட்சிதர்கள், அடித்துக் காயப்படுத்தி, இங்கு தேவாரம் பாடாதே என்று விரட்டினார்கள்; தில்லை நடராசர் கோயில் நிதி வரவு செலவு எதற்கும் அரசுத் தணிக்கை இல்லை. தீட்சிதர்களின் அராசகம்தான் அங்கு “விதிமுறைகள்”! இந்த அராசகங்கள் மற்ற கோயில்களுக்கும் விரிவடைய வேண்டுமா? கூடாது!
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் கவனிப்பாரின்றி, மிகமிக அவலநிலையில் இருப்பதாக – மிகைப்படுத்திக் கூறுகிறார் சக்கி வாசுதேவ்! இந்து அறநிலையத் துறையில் இருந்தாலும் அக்கோயில்களில் மரபுரிமைப்படி நிகழும் பூசைக்கு உரியவர்கள் அக்கோயில் நிர்வாகத்தில் பங்களிப்பு செய்கிறார்கள். பல கோயில்கள் சிறப்பாக செழிப்பாக உள்ளன. வழிபாட்டிற்கு வரும் மக்கள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
சில கோயில்கள் அரசின் கவனிப்பின்றி போதிய வருவாயின்றி இருந்தால், அவற்றைச் சரி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். அதற்காக கவன ஈர்ப்பு இயக்கங்கள் நடத்தலாம். அதேபோல் கோயில் நிர்வாகங்கள் சிலவற்றில் ஊழல் நடந்தால் அவற்றின் மீது நடவடிக்கை கோரி மக்கள் போராடலாம்.
அவ்வாறான அறவழிப்பாதைகளைக் கைவிட்டு, சில அவலங்களைச் சுட்டிக்காட்டி “நம் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ளும் சக்கி வாசுதேவ் மற்றும் ஆரியத்துவாவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி நம் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் அவர்களின் திட்டத்தைத் தமிழ்நாடு அரசோ, அரசியல் கட்சிகளோ ஏற்கக் கூடாது என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தெய்வத் தமிழ்ப் பேரவை
முகநூல் : www.fb.com/theivathamizh
சுட்டுரை : www.twitter.com/TheivigaThamizh
பேச : 9841949462, 9443918095
Leave a Comment