புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை! ஐயா கி. வெங்கட்ராமன்!
புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும்
தமிழின ஒடுக்குமுறை!
தோழர் கி. வெங்கட்ராமன்,பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழின ஒதுக்கலின் முதன்மைக் களமாக இந்திய நாடாளுமன்றமே விளங்குகிறது. தமிழ்நாட்டை இந்தியப் பேரரசின் காலனியாக அரசமைப்புச் சட்டம் ஒடுக்கி வைத்திருக்கிறது.
கூட்டாட்சியை விரிவாக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், தமிழின ஒதுக்கலை – காலனிய ஒடுக்குமுறையை நீக்கும் வகையில் திருத்தம் செய்ய முடியாதவாறு நாடாளுமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது செயலுக்கு வந்துவிட்டால், இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான நிலைக்குத் தமிழினப் புறக்கணிப்பு – ஒடுக்குமுறை தீவிரப்படும் ஆபத்திருக்கிறது!
இதுகுறித்து, கவனம் கொள்ளாமலேயே கொரோனா புதிதாக பெரிய செலவில் நாடாளுமன்றக் கட்டடம், தலைமையமைச்சர் இல்லம் கட்டப்பட வேண்டுமா என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஊடகங்களோ, அக்கட்டட அமைப்புகளின் சிறப்புத் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கி வருகின்றன. ஆனால், தமிழின ஒடுக்குமுறை இதன் மூலம் தீவிரப்படப் போகின்றது என்ற உண்மை கவனத்திற்கு வராமலேயே போகிறது!
இப்போது, நாடாளுமன்ற மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 543. இதனை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்க வேண்டுமென்று 2019லேயே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒருமித்தக் கருத்தோடு நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2020 திசம்பரில் நடைபெற்றது. 2022 ஆகத்து 15 அன்று இந்திய சுதந்திரத்திற்கு 75ஆவது ஆண்டு வருகிறது. அன்றைய நாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொரோனா காலத்திற்காவது இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தவருக்கு 1 இலட்சம் ரூபாய் தண்டத் தொகை விதித்து, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர் இருக்கைகளும் அமையும் வகையில் கட்டமைப்புகள் உருவாகின்றன.
மறுபுறம், 2026இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 என உயர்த்துவதற்கு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் பெட்ரோலியத் துறை மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வளர்ச்சித்துறை அமைச்சர் அர்திப் சிங் புரி மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திப் பேசி வருகிறார்.
இந்த 848 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றன என்பதில்தான் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் இருக்கிறது.
இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்கள் 39. புதுச்சேரிக்கு 1. ஆக மொத்தம் 40. மக்கள் தொகைக்கேற்ற பேராளர்கள் என்ற பெயரால், செயற்கையான முறையில் தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதனால், மக்களவையில் தி.மு.க. – அண்ணா தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதான வாய்ப்புகளில் ஒரே கருத்தில் பேசும்போது கூட நாடாளுமன்றம் அதைக் காதில்கூட போட்டுக் கொள்ளாத கொடுமையான புறக்கணிப்பைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலிலும், சிறுவன் பாலச்சந்திரன் கொலைச் செய்தி வந்ததையொட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்த விவாதம் நடந்தபோதும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கண்டித்துப் பேசியபோதும்கூட மக்களவையில் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.
ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனக்கொலையான கொடிய செய்தியைக்கூட காதுகொடுத்துக் கேட்பதற்கு முன்வராத காலி நாற்காலிகளைக் கொண்ட அவையாகத்தான் மக்களவை இருந்ததைப் பார்த்தோம். ஏனென்றால், மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543இல் தமிழ்நாட்டின் 39 என்பது மிகமிகச் சிறுபான்மை!
தமிழ்மொழி, தமிழர் தாயகம், தமிழ்நாட்டு உரிமை ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதென்பது கனவிலும் நடக்க முடியாத செயல்! காரணம் – அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
இருக்கிற 543 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களான உத்திரப்பிரதேசம் (80), பீகார் (40), இராசஸ்தான் (25), மத்தியப்பிரதேசம் (29), ஜார்கண்ட் (14), அரியானா (10), தில்லி (7), உத்தரகண்ட் (5), சத்தீசுகர் (11), இமாச்சலப்பிரதேசம் (4) என மொத்தம் 225 உறுப்பினர்கள் இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றிக் கொள்ளக்கூடிய இயல்பான பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்கள் முயன்றால் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது எளிது! இவ்வாறான வாய்ப்பு எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது.
மொழிவழி தேசிய இன மாநிலங்களாக 1956இல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சியாக இந்தியக் குடியரசு மாற்றப்பட்டிருந்தால், ஓரளவிற்காவது தமிழ்நாட்டின் உரிமைக் குரலை எழுப்புவதற்கு சிறு வாய்ப்பாவது கிடைத்திருக்கும்.
அப்போதும் ஒட்டுமொத்தத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாகத்தான் தமிழினம் இருக்கும் என்றாலும், சம எண்ணிக்கை என்று வரும்போது இந்திக்காரர்களுக்கும், தமிழர்களுக்குமான எண்ணிக்கை சமநிலையாவது உறுதி செய்யப்பட்டிருக்கும். தேசிய இனத் தாயகமே மாநிலம் என்பதை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்ட மாநிலச் சீரமைப்புச் சட்டம், மாநிலங்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
பல்வேறுபட்ட தேசிய இனத் தாயகங்களுக்கு சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பது, நாடாளுமன்ற சமநிலையை ஓரளவுக்காவது பாதுகாத்துத் தரும் என்ற கொள்கை நிலை, இந்திய ஒன்றியத்துக்கு இருக்கவில்லை.
இன்றைக்கும் நாடாளுமன்ற மக்களவையை மாநிலங்களுக்கு இணக்கமாக சீரமைக்க விரும்பும் சிந்தனையாளர்கள் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதற்குப் பதிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதாக வலியுறுத்துகிறார்கள். இந்தி மாநிலங்கள் அப்போதும் 10 இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம எண்ணிக்கை என்றாலும் தமிழ்நாட்டைவிட அவர்கள் மட்டும் 10 மடங்கு இடம் பெற்று விடுவார்கள் என்ற எளிய அடிப்படையையே அவர்கள் கருத மறுக்கிறார்கள்.
உண்மையில், இனச் சமநிலையுள்ள கூட்டாட்சியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், எந்தவொரு சிறிய தேசிய இனமும் புறக்கணிக்கப்படாமல் எந்த அடிப்படை முடிவும் ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் (Consensus) நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்படும்.
ஆனால், இந்தியா இதற்கு நேர் எதிர்த்திசையில் – மேலும் மேலும் இந்திய அரசி்டம் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் போக்கில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. பா.ச.க.வின் நரேந்திர மோடி ஆட்சியில் அது கண்மண் தெரியாத வேகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது.
அவ்வாறு மாநில அதிகாரம் குறுக்கப்பட்ட அரசமைப்பில் கூட, மற்ற தேசிய இன மாநிலங்களைவிட தமிழ்நாடு சட்ட வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்ட இன ஒதுக்கலுக்கு உள்ளான தாயகமாக இருக்கிறது.
காவிரி, மீனவர் சிக்கல் போன்ற அனைத்திலும் இருக்கிற சட்டத்தில் பிற தேசிய இனங்களுக்கு இருக்கிற உரிமை கூட தமிழினத்திற்கு மறுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியே மறுதலிக்கப்படும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், புதிய பெரிய நாடாளுமன்றக் கட்டடமும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதும் முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதித்திட்டமாக உருவாகி வருகிறது.
இந்திய ஆரியத்துவ ஆட்சியாளர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் மிலன் வைஷ்ணவ், ஜே. ஹிண்ட்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் வைக்கும் முன்மொழிவு (Hindustan Times, 03.03.2019 மற்றும் பிற ஏடுகள்) அர்திப் சிங் பூரியின் கருத்திற்கு ஒத்திசைவதாக இருக்கிறது. இவர்கள் இரண்டுவிதமான முன்மொழிவுகளை விவாதத்திற்கு வைக்கிறார்கள்.
இப்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனை 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைப்பது என்று இவர்களது முதல் முன்மொழிவு கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு, அதில் கூறப்படும் மக்கள் தொகை பெருக்க விகிதத்திற்கேற்ப 2026இல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள் (Projection). அதற்கேற்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை முன்வைக்கப்படுகிறது.
இதன்படி, தமிழ்நாடு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்களிலிருந்து 31 ஆகக் குறைத்துப் பெறும். ஆனால், உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40லிருந்து 50 ஆக உயரும். (காண்க : படம் – 1). இவ்வாறு, தமிழ்நாடு – கேரளா எண்ணிக்கை குறைந்தும், இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்தும் இருக்கும். இப்போதுள்ளதைவிட கொடிய இனச் சமநிலை சீர்குலைவு ஏற்படும்.
ஆயினும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை குறைவதை ஏற்க மாட்டார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்தி இன்னொரு முன்மொழிவை இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.
அதன்படி, மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். (காண்க : படம் – 2). அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக உயரும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும். மொத்தத்தில் 848 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கேரளாவுக்கு 20 என்பது அப்படியே நீடிக்கும். அவ்வளவுதான்!
அதாவது, தமிழ்நாடு, புதுவை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டுக் கூட நாடாளுமன்றத்தில் எந்தவகை சட்டத்தையும் இந்திய ஆட்சியாளர்களால் கொண்டு வர முடியும். அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இதே வகையான விகிதநிலை புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களவையிலும் ஏற்படும்.
ஒவ்வொரு தேசிய இனத்தின் சமத்தகுநிலைக்கு மாற்றாக, மக்கள் தொகை எண்ணிக்கை என்பது புதிய நாடாளுமன்றத்திலும் தொடரும் சூழலில், மக்கள் தொகை வளர்ச்சி நிலை இன்னொரு பெரிய சிக்கலை தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் உலகம் முழுவதும் நடந்து வருவதைப் போல, வேகம் குறைந்து காணப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளாவை ஒப்பிட இந்தி மாநிலங்களின் மக்கள் பிறப்பு விகிதம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இதுகுறித்து, இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2018 – 2019 கூறுவது மிகப் பெரிய அபாய அறிவிப்பாக இருக்கிறது, (விரிவிற்குக் காண்க : Economic Survey 2018 – 2019, Volume 1 - Chapter 7).
இதில் கூறப்படும் மக்கள் தொகைப் பெருக்கக் கணக்கீடு, இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்கள் தொகை சுருக்கத்தை (Decline in Population) சந்திக்கும் என்று கூறுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்வார் (15லிருந்து 45 வயதிற்குள்) என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது. இதற்கு மொத்தக் கருத்தரிக்கும் திறன் என்று (Total Fertility Rate – TFR) கூறுகிறார்கள். அதன்படி, இந்தியாவின் சராசரி கருத்தரிப்பு விகிதம் 2016இல் 2.3 என இருந்தது. 2021இல் 1.8 ஆகக் குறையும் என்று கூறுகிறார்கள்.
இன்னொருபுறம், பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் சமநிலை ஏற்பட்டு, மக்கள் தொகை அதேநிலையில் தொடர வேண்டுமானால், ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2 குழந்தைகள் என்பதாக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது பல்வேறு மாநிலங்களுக்கு மாறுபட்ட நிலையில் இருக்கிறது.
உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு, மிக நீண்டகாலமாக மக்களிடையே செயலில் உள்ளதால் தமிழ்நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட பீகாரின் மக்கள் தொகை்ப பெருக்கம் 2 மடங்காக இருக்கிறது, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றின் நிலையும் இதுதான்!
இந்த அட்டவணையைக் (படம் – 3) கவனித்தால், 2031க்குப் பிறகு தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுருக்கம் (De-growth) ஏற்படவுள்ளது என்ற புதிய சிக்கலைப் புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகை சுருக்கம் இந்தியாவின் இனச் சமநிலையை மிகக் கொடுமையாக பாதிக்கும். குறிப்பாக, தமிழினப் புறக்கணிப்புக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகளைத் திறந்துவிடும். அதுமட்டுமின்றி, வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் குவிவதை விரைவுபடுத்தும்.
இதேபோன்ற சிக்கலை சந்தித்து வருவதால்தான், மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு செய்துவந்த சீனா மட்டுமின்றி, ஜப்பான், செர்மனி போன்ற வளர்ந்த நாடுகளும் கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கிவிட்டன. இதேபோன்ற தேவை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம்.
அப்போதும் பொருளியல் வளர்ச்சி மையங்களாக தமிழ்நாடும் பிற தென் மாநிலங்களும் இருக்கும். அரசியல் ஆதிக்க மையமாக வடஇந்தியாவின் இந்தி மண்டலம் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மறுசீரமைப்பு இந்த அரசியல் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தத் துணை செய்யும்!
தமிழ்த்தேசிய அரசியலின் தேவை அதிகரித்து வருகிறது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment