சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,
சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!
தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது.
மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால் சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது.
ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது.
வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது.
இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது.
நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது.
உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்!
ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது.
இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள்.
மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment